மார்ச் 17ல் அரசியல் அமைப்பு வரைவு நிறைவு பெறும்!

இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான வடமாகாணசபையின் குழு மார்ச் மாதம் 17ம் திகதி தமது வரைபை நிறைவு செய்யும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக வடமாகாண சபையினால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோரின் கூட்டு தலமையில் 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த குழு கடந்த 1ம் திகதி தமது 1ம் அமர்வை நடத்தியிருந்த நிலையில் இன்றைய தினம் மாலை 4 மணிக்கு தமது 2ம் அமர்வை நடத்தியிருந்தது. இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்துரைத்த அவர், இன்றைய தினம் 19 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் கூடி சில விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்திருக்கின்றோம். இதனடிப்படையில் வரலாற்று ரீதியான விடயங்களை ஆராய்வதற்கும், அரசியல் ரீதியான விடயங்களை ஆராய்வதற்கும், அதிகாரப்பகிர்வு ரீதியான விடயங்களை ஆராய்வதற்கும் என 3 விடயங்களில் ஆய்வுகளை நடத்தவும் வரைபுகளை தயாரிக்கவும் 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி தமது வரைபுகளை தயாரித்து முடிக்கும். இதன் பின்னர் 24ம் திகதி எமது முழுமையான வரைபுகள் நிறைவு செய்யப்பட்டு மாகாணசபையில் விவாதிக்கப்படும். அதன் பின்னர் முன்பு திட்டமிட்டதைப்போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் ஊடாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கருத்தறியும் குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற முடிவை எடுத்துள்ளோம். என்றார். வலி, வடக்கு மயிலிட்டி துறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகியவற்றின் விஸ்த்தரிப்பு நடந்தே தீரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்து தொடர்பாக கேட்டபோது,

கடந்த 18ம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்தில் அரசியல்வாதிகள், வலி,வடக்கு மக்கள், அதிகாரிகள் இணைந்து மயிலிட்டி, பலாலி மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் முதலில் மீள்குடியேற்றம் செய்யுங்கள். அதன் பின்னதாக அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கலாம். என்ற தீர்மானத்தை எடுத்து யாழ்.மாவட்டச் செயலர் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த தீர்மானத்தை பார்க்கும் முன்னதாக இந்த கருத்தை பிரதமர் தெரிவித்திருக்கலாம். எனவே பிரதமருடைய கருத்தை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். அது கிடைக்கப் பெற்றதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக நாங்கள் சிந்திக்கலாம் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.