முகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 38 நலன்புரிமுகாம்களில் வசித்து வருகின்ற பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (04) முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் ஒரு கிழமை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, முதலில் சுன்னாகம் கண்ணகி முகாமில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. தாங்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் முடிவிலும், தங்கள் சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் போனால், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளைக் கொடிகளுடன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தங்கள் காணிகளுக்குச் செல்வோம் என முகாம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னர் தங்கள் குடும்ப அட்டைகளை மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைத்து விட்டு செல்வோம் என்றனர்.