முடிவுக்கு வந்த டார்ஜிலிங் போராட்டம்: முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் அவசியம்!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதியில் 104 நாட்களாக நடந்துவந்த முழு அடைப்புப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கோரிக்கையையும், பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் ஏற்று இந்தப் போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்திய கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குருங்குக்கு முக்கியத்துவம் தந்து ராஜ்நாத் சிங் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது கவனிக்கத்தக்கது. போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பொருளாதாரமும் முற்றிலும் முடங்கிப்போயிருக்கும் சூழலில், நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசும் மேற்கு வங்க அரசும் இறங்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

உறுதியளித்தபடி கூர்க்காலாந்து தன்னாட்சி நிர்வாக கவுன்சிலுக்குப் போதுமான அதிகாரம் வழங்கப்படாதது இப்போராட்டத்துக்கு முக்கியக் காரணம். மேலும், மேற்கு வங்கத்தில் வங்க மொழி கட்டாயமாக்கப்படுவதாக முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்ததைத் தொடர்ந்து வலுப்பெற்ற போராட்டம் பின்னர் தனிமாநிலக் கோரிக்கையாக உருவெடுத்தது. போராட்டக்காரர்கள் காட்டிய பிடிவாதம், இவற்றை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு இருந்த தடுமாற்றம், இந்தப் பிரச்சினையை முன்வைத்து கட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகரிக்க மம்தா பேனர்ஜி எடுத்த முயற்சிகள் என்று பல்வேறு காரணங்கள் இந்த நீண்ட போராட்டத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டன.

கோர்க்கா ஜனசக்தி மோர்ச்சா அமைப்புக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் மேற்கு வங்க அரசு, தற்போது செயல்படாமல் இருக்கும் கூர்க்காலாந்து தன்னாட்சி நிர்வாகக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை கோர்க்கா ஜனசக்தி மோர்ச்சா அமைப்பின் ஒரு பிரிவைச் சேர்ந்த பினய் தமங்குக்கு வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தது. 2012-ல் அமைக்கப்பட்ட கூர்க்காலாந்து தன்னாட்சி நிர்வாகக் கவுன்சிலுக்குக் கணிசமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு மேற்கு வங்க அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும் என்று கோர்க்கா ஜனசக்தி மோர்ச்சா அமைப்பின் உறுப்பினர்களுக்கும், அந்த அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார் தமங்.

தனிமாநிலக் கோரிக்கை தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவாதம் தரவில்லை என்றாலும், பிற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்ததுடன், அதன் மூலம் பிமல் குருங் தலைமையிலான பிரிவையும் அங்கீகரித்தார். குருங் விடுத்த அழைப்பை ஏற்று இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது என்பது மலைப்பகுதி மக்களிடம் அவருக்கு இருக்கும் ஆதரவை வெளிப்படுத்துகிறது.

முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் தயக்கம் இல்லை என்று மேற்கு வங்க அரசு தெரிவித்திருந்தாலும் குருங்குடன் பேச்சுவார்த்தை நடத்த மம்தா பேனர்ஜி ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம்தான். ஆனால், முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடப்பது மிக அவசியமானது. கூர்க்காலாந்து தன்னாட்சி நிர்வாகக் கவுன்சிலுக்கு அதிகாரமளிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் டார்ஜிலிங் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி ஏற்படும்.