முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் வேண்டாம் – மாவை…!

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழரசுக்கட்சி செயற்படுவதானால் தற்போது அதில் அங்கம் வகித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சி என்பவை வெளியேற்றப்பட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார் மாவை சேனாதிராசா. தமிழ் மக்கள்பேரவையின் இணைத்தலைவர் உள்ளிட்ட ஏற்பாட்டுக்குழுவொன்று தமது உத்தேச அரசியல் தீர்வு திட்ட வரைபு பற்றி மாவை.சேனாதிராசாவை சந்தித்து விளக்கியுள்ளது. யாழ்.நகரின் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி தலைமை காரியாலத்தில் இச்சந்திப்பு நடந்துள்ளது. அப்போது பேச்சுக்களில் பங்கெடுத்த மாவை தான் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட பூரண விருப்பம் மற்றும் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை இணைந்து செயற்படும் தனது விருப்பத்திற்கு கடுமையான முட்டுக்கட்டைகளையும் நெருக்குவாரங்களையும் போட்டுவருவதாகவும் மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக சீ.வி.கே.சிவஞானம், குலநாயகம் மற்றும் கனகசபாபதி போன்றவர்கள் அத்தகைய நெருக்குவாரங்களை தருவதாக தெரிவித்த மாவை இவர்களை புறந்தள்ளி பேரவையுடன் பகிரங்கமாக இணைந்து செயற்படமுடியாதுள்ளமைக்கு கவலையையும் தெரிவித்துள்ளார். பேரவையின் ஆரம்ப செயற்பாடுகளில் தமிழரசுக்கட்சியை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த மாவை விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது வீட்டிற்கு பல தடைவை வந்திருந்ததை நினைவு கூர்ந்ததுடன் இறுதி யுத்த கால சம்பவங்களை கேள்வியுற்று தனது மனைவி கண்ணீர்விட்டு கதறி அழுததாகவும் சில நாட்கள் பட்டினியாக இருந்ததையும் நினைவு கூர்ந்து பேரவை பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தியாக சிந்தனைகளுடன் தாம் செயற்பட்டுவரும் நிலையில் புலம்பெயர் தமிழர்களிடையே தம்மை பற்றி விசமத்தனமான பிரச்சாரங்களை பேரவையுடன் தொடர்புடைய சிலர் செய்துவருவதாகவும் மாவை கவலை தெரிவித்துள்ளார். இதனிடையே விடுதலைப்புலிகள் தலைவர் இல்லையென தாங்களும் தங்கள் மனைவியும் கருதுகின்றீர்களாவென பேரவையினர் கேள்வி எழுப்பிய போது அவசர அவசரமாக மாவை அதனை மறுதலித்துள்ளார். இதனிடையே மற்றொரு தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரது கட்சி பத்திரிகை அனைத்தையும் திரிபு படுத்தி செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் பேரவையினர் மாவையிடம் சந்திப்பின் பின்னராக விசனம் தெரிவித்துள்ளனர்.