மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா இயற்கை எய்தினார்

அக்கால இலங்கை வானொலி/ தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகப் பரிச்சயமான மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா அவர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்த கனடா, Torontoவில் 2018.02 07 மறைந்த தகவலை  அறிய முடிகிறது! கமலா தம்பிராஜா அவர்கள் இலங்கையில் தொலைக்காட்சியில் முதன்முதலில் தமிழில் செய்திவாசித்தவர் என்ற பெருமைக்குரியவர்! பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான அவர் “வீரகேசரி ” பத்திரிகையில் தமது ஊடகப் பணியை ஆரம்பித்துப் பிற்காலத்தில் இலங்கை வானொலியில் சிறிது காலம் தயாரிப்பாளராகவும்,செய்திவாசிப்பாளராகவும் விளங்கினார்! தொடர்ந்து ரூபவாஹினியிலும் இணைந்து சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பிரபலம் பெற்றார்! தகவல் திணைக்களத்திலும்,ஈரானியத்
தூதரகத்திலும் செய்தித்தொடர்பாளராகப்
பணியாற்றிய அனுபவமும் அவருக்குண்டு!
1977ல் இலங்கையில் வெளிவந்த ‘பொன்மணி ‘ தமிழ்ப் படத்திலும் அவர்
நடித்திருந்தார்!

1980களின் பிற்பகுதியில் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த அவர் அங்கும் தமது ஒலிபரப்பு/ ஒளிபரப்புப் பணிகளைத் தொடர்ந்துள்ளார்! 1991ல் Torontoவில்
ஆரம்பமான “தேமதுரம் ” வானொலியில் முக்கிய அறிவிப்பாளராகவும், செய்திவாசிப்பாளராகவும் திகழ்ந்ததோடு,
2001ல் அங்கு ஆரம்பமான TV 1 தொலைக்காட்சி சேவையிலும் செய்தி வாசித்திருக்கிறார்! அவை தவிர அவ்வப்போது கனடாவில் இயங்கிய
தமிழோசை, CTBC,கீதவாணி வானொலிகளிலும் செய்தி வாசித்திருக்கிறார்!

இப்போதும் இலங்கை நேயர்களது ஞாபகத்தில் வாழும் கமலா தம்பிராஜா அவர்களது ஆன்மா சாந்தி அடைவதாக!