மைத்திரியுடன் பேச சி.வி.க்கு அழைப்பு

வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் எதிர்வரும் 18ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு, தனக்கு அழைப்பு வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எனக்கிடையிலான இந்தக் கலந்துலையாடல், கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தரவுகள் தேவையாகவுள்ளன’ என்றார். ‘ வடமாகாணசபை உறுப்பினர்கள், தங்களது பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் உள்ளிட்ட விவரங்களைத் தரவேண்டும். அந்தத் தரவுகளை வைத்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடலாம்’ என்று அவர் மேலும் கூறினார்.