‘யார் குற்றவாளிகள்?’

இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பயங்கரமான நிலைமைக்கு யார் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்க வேண்டியது மக்களின் கடமையாகுமென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், அன்றைய தமிழ் அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள், யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள், ஆகியோரின் ஒரே ஆசை, சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒரே குடையின் கீழ் ஒரே கொள்கையுடன், ஒரே பொதுச் சின்னமாகிய உதய சூரியன் சின்னத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்பதாகும்.

“கிளிநொச்சியில் உருவான சதித்திட்டத்துக்கமைய, முன்னிலையில் உள்ள இருவரை திருப்திப்படுத்துவதற்காக, தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென, முட்டாளத்தனமான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர்  இடம்பெற்ற அனர்த்தங்களுக்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். யுத்தம் தொடர்வதில் ஆரம்பித்து, பல்லாயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், அவர்களின் போராளிகள், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரின் தியாகங்கள் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தன.

“மேலும் அவர்களே பல்லாயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், கடத்தப்பட்டவர்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். இறுதியாக, வீரமிக்க ஒரு தலைவன் அவருடைய குடும்பத்தினர் ஆகியோரின் துன்பகரமான முடிவு, விடுதலைப் புலிகளின் அழிவிலேயே முடிந்தது.

“விடுதலைப்புலிகளின் தலைமை, ஏற்கெனவே பொதுக்கொள்கை, பொதுச்சின்னம் ஆகியன சம்பந்தமாக முடிவொன்றைக் கொண்டிருந்தபோதும், அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் முட்டாள்தனமாக எடுத்த மாறுபட்ட முடிவு துரதிர்ஷ்டவசமானதாகும். ஒன்றிணைந்து, மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து, போராடி கண்ட கனவு நிறைவேறியிருந்தால், நாம் பின்வருவனவற்றை அடைந்திருக்கலாம்.

“சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் பொதுக்கொள்கை, பொதுச்சின்னம் ஆகியவற்றின் கீழ் போட்டியிட்டு இருப்பார்கள். அனைத்து வேட்பாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்று போர்நிறுத்த உடன்படிக்கை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு உடனடியாவோ அல்லது குறுகிய காலத்துக்குள்ளேயோ உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். மரணத்தை தழுவிக் கொண்டவர்களும் பிரபாகரன் உட்பட அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் மக்கள் தாம் இழந்த கௌரவத்தை மீளப் பெற்றிருப்பார்கள்.

“யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்தேறிய மரணங்கள், அழிவுகள் அத்தனைக்கும் பொறுபானவர்கள் இருவர் என நான் குற்றஞ்சாட்டுகிறேன்.

“2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சம்பந்தப்பட்ட அனைவரும், புலிகள் உட்பட முழுமையாக சம்மதித்து ஒரு கொள்கை, ஒரு சின்னமாகிய உதயசூரியன் சின்னம், சகல கட்சிகளும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு தயாரான நிலையில் இருந்தனர். ஆனால், இருவரின் அடாவடித்தனத்துக்கு வேறு எதுவும் காரணமல்ல, இதற்கு ஒரே காரணம் அவர்களுடைய பதவி ஆசையே ஆகும். தமிழ் மக்களுடைய பொருளாதார அழிவும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிவையும் விலையாகக் கொடுத்தே அவர்கள் இன்றும் தமது பதவிகளை அனுபவித்து வருகின்றார்கள்.

“இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பயங்கரமான நிலைமைக்கு யார் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்க வேண்டியது மக்களின் கடமையாகும். 2004ஆம் ஆண்டு தொடக்கம் அவரால் உருவாக்கப்பட்ட அழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் நான் உறுதியாக நம்புகின்றேன். இன்று வடமாகாண சபை விடயத்தில் தலையிடுவதற்கு முன்பு நூறு தடவைக்கு மேல் சிந்திந்திருப்பார். அவர் தனது அதிகாரத்தின் எல்லையை அறிந்திருக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.