வடக்கின் புதிய ஆளுநருக்கு வரவேற்பு!

வடமாகாண புதிய ஆளுநராக வந்திருக்கும் ரெஜினோல்ட் குரே தமிழ் பேசக்கூடியவராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறகையில், ஆசிரியராக இருந்தவர் கொடுத்துத்தான் பழக்கம் யாரையும் கெடுத்துப் பழக்கமிருக்காது. பல தகைமைகள் உள்ள ஒருவராக இவர் இருக்கின்றார்.

விஜயகுமாரதுங்கவின் கட்சியில் இருந்தவர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்வார். இவர் தமிழ் பேசும் தகுதி கொண்டவர் என்பதால், ஒவ்வொருவரும் கூறும் விடயங்களின் மனோநிலை என்ன என்பது அவரால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும் இவர் அரசியல் அனுபவமும் கொண்டவர் என்பதால், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவரை நியமித்தமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவர். அவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கதைத்த ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது, இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைத்தவர். 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இத்தகைய ஒருவர் வட மாகாண ஆளுநராக வந்திருப்பது எமக்கு எதிர்பார்ப்பை தந்துள்ளது. ஆளுநர் தனது அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து மாகாண சபைக்கு அந்த அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதன்மூலம் மக்களுக்கான பயன்களை மாகாண சபையினர் செய்தற்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.