‘வடக்கில் இராணுவம் நிலைகொள்ளவே சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என்கின்றனர்’

“சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸார் தெரிவிப்பது இராணுவத்தினர் இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு, கொலை அச்சுறுத்தல் மற்றும் முன்னாள் போராளிகள் கைது குறித்துக் கேட்ட போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “அது தொடர்பில் பொலிஸார், நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். அதே நேரம், நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்தது சம்மந்தமாக நீதிமன்றத்துக்கு கூறவில்லை.

கைதுசெய்யப்பட்டவர்கள், போதைப் பொருள் வைத்திருந்ததாகத் தான் நீதிமன்றத்தில் பொலிஸார் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆகவே, இதில் ஏதாவது உண்மை இருந்தால், அதனை அவர்கள் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தெரியப்படுத்தவில்லை.

எனவே, இது எந்தளவுக்கு உண்மை என நாங்கள் ஆராய வேண்டியிருக்கின்றது. பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர், ஏதாவது கூறலாம். ஆனால், ஒன்றை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அதாவது காலத்துக்கு காலம், ஒவ்வொருவருக்கும் உயிர் அச்சுறுத்தல் வருகின்றது. அல்லது ஏதோவொரு பதற்ற நிலை ஏற்படுகின்றது, கிளிநொச்சி, ஜெயக்குமாரியின் விடயத்திலும் இவ்வாறுதான் குற்றஞ்சாட்டினார்கள்.

தொடர்ந்து வடமாகாணத்தில் இராணுவத்தினர் முகாமிட்டு இருக்க வேண்டுமன்ற எண்ணத்துடன் இப்பேர்ப்பட்ட கதைகள் வருகின்றனவோ என்று எனக்குத் தெரியாது” என சி.வி. மேலும் கூறினார்.