வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் கடும்போக்குடைய தமிழ் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ள விடயத்திலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும், தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பாக பேரவை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்தும், சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், அடுத்த சில வாரங்களில் சில இராஜதந்திரிகள் விக்னேஸ்வரனைச் சந்தித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விவகாரத்தில், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்கவுள்ளனர். முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள இராஜதந்திரிகளில், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரும் அடங்குகிறார். இந்தவாரம் கொழும்பு வரும் ஹியூகோ ஸ்வயர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவுள்ளதுடன், யாழ்ப்பாணம் சென்று விக்னேஸ்வரனுடனும் பேசவுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும், வடக்கு பிரச்சினைகள் தொடர்பாக அது எடுக்கும் தீவிர நிலைப்பாடுகளின் அச்சுறுத்தல் தொடர்பாகவும், பிரித்தானிய அரசின் கவலைகளை விக்னேஸ்வரனிடம், ஹியூகோ ஸ்வயர் பரிமாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர் பிரச்சினை தொடர்பாக சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும், திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் மிதவாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதால், தமிழ் மக்களின் எந்த கவலைகள், குறைபாடுகள் குறித்தும் கூட்டமைப்பே சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும் இந்த நாடுகள் விரும்புகின்றன. தற்போது சுமுகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் விடயங்கள் தமிழ் மக்கள் பேரவையினால் குழப்பமடைவதை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் விரும்பவில்லை.