வட மாகாண சபையில் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்

“வட மாகாண சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், சபை ஒழுங்கு முறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்க வேண்டும்” என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, சபை அறிவிப்புகளை விடுத்த அவைத் தலைவர் சிவஞானம், சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சபைச் செயற்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டார்.

“மாகாண சபையின் முதலமைச்சர், சபையின் மரபுகளுக்கமையவும் சபைக் கட்டுப்பாடுகளையும் மதித்து, அதனைப் பின்பற்றிச் சரியான முறையில் செயற்பட்டு வருகின்றார்.

“ஆனால், அவர் சார்ந்த அமைச்சர்கள் அவ்வாறு நடப்பதில்லை. அதேபோன்று, தான் உறுப்பினர்களும் சபைக் கட்டுப்பாடுகளுக்கேற்ப நடப்பதில்லை.

“ஆகவே, முதலமைச்சரைப் போன்று, சபையின் அமைச்சர்களும், உறுப்பினர்களும் செயற்பட வேண்டும். அத்தோடு, மாகாண சபையை அனைவரும் மதித்துச் செயற்பட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.