வரலாற்று திருப்பம்: பிரதமரானார் மஹதீர் மொஹமட்

மலேசியப் பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட், தெரிவாகியுள்ளார். 222 உறுப்பினர்களைக் கொண்ட, மலேசிய நாடாளுமன்றத்தின் ஆட்சியை தீர்மானிப்பதற்காகவும், பிரதமரைத் தெரிவு செய்வதற்காகவும் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 113 ஆசனங்களைக் கைப்பற்றிய மஹதீர் மொஹமட் தலைமையிலான பகடான் ஹரபான் (நம்பிக்கைக்கான முன்னணி) கட்சி ஆட்சியை தனதாக்கியுள்ளது. மலேசிய பிரதமராக தெரிவாகியுள்ள 92 வயதான மஹதீர் மொஹமட், உலகின், மக்களால் தெரிவான மிக வயதான தலைவராக கருதப்படுகின்றார்.

தேர்தலிர், ஆளும் பிரதமர் நஜீப் ரஸாக்கின் ஆளும் பிஎன் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், மஹதீர் மொஹமட் தலைமையிலான கூட்டணி, 113 ஆசனங்களையும், பிரதமர் நஜீப் ரஸாக்கின் ஆளும் பி.என் (BN) கட்சி) 76 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

தற்போதைய பிரதமர் நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வரி விதிப்பை முறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 1957ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிஎன் கட்சி தொடர்ச்சியாக ஆட்சி செய்த வந்தநிலையில், மலேசிய வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்க்கட்சி ஒன்று ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.