கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?: வெற்றியை தீர்மானிக்கும் 3 காரணிகள்

(இரா.வினோத்)

‘கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?’ – என்பதை இந்தியாவே உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்துக்கட்ட போராட்டத்தையும் அரங்கேற்றி, அங்கு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக, மஜக மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி ஆகியோர் கர்நாடகாவின் முடிவை தீர்மானிக்கும் சக்திகளாக இல்லை. ‘பணம், சாதி, வேட்பாளர்’ ஆகிய மூன்று காரணிகளே, வெற்றியை தீர்மானிக்கப் போகின்றன.

பண பல‌ம்

கர்நாடகாவில் களத்தில் இருக்கும் 2,655 வேட்பாளர்களில் 883 பேர் கோடீஸ்வரர்கள். பாஜகவில் 208 பேர். காங்கிரஸில் 207 பேர், மஜதவில் 154 பேர் கோடீஸ்வரர்கள். பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.17.86 கோடி; காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.38.75 கோடி, மஜதவின் 199 வேட்பாளர்களின் சராசரி சொத்துமதிப்பு ரூ.20.91 கோடி என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இப்படி கோடீஸ்வர வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பதால் தொகுதியில் பணம் காட்டாறாக பாய்கிறது. இதில் காங்கிரஸ்,பாஜக, மஜத ஆகிய எந்த கட்சிக்கும் வித்தியாசமில்லை. ஒரு வேட்பாளர் 8 கோடி முதல் 15 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறார்.

ரெட்டி ராஜ்ஜியம்

கர்நாடகாவில் பெரும்பாலான தொகுதிகளில் இப்படியென்றால், ரெட்டி சகோதர்களின் கோட்டையான பெல்லாரிக்கு முன்பாக ஆர்.கே.நகர், திருமங்கலம் எல்லாம் ஒன்றும் கிடையாது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்கள் ஒட்டுமொத்த இந்தியாவே வங்கி, ஏடிஎம் வாசலில் நின்றபோது, ரெட்டி குடும்பம் பாகுபலி படத்தை போல ரூ.750 கோடி செலவில் திருமணம் செய்து மிரட்டியது. இந்த தேர்தலில் சுரங்க பணம் ஹைதராபாத் கர்நாடக பகுதி முழுவதும் பாதாளம் வரை பாய்கிறது.

வழக்கில் சிக்கியிருப்பதால் ஜ‌னார்த்தன ரெட்டி நேரடியாக‌ களமிறங்கவில்லை. அதற்கு பதிலாக தனது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, நண்பர் ஸ்ரீராமுலு, உறவினர்கள், ஆதரவாளர்கள் என‌ 12 பேரை பாஜகவில் கள‌மிறக்கினார். இங்கு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை வாக்காளரின் பாக்கெட்டுக்கே போய் சேருகிறது.

இதுமட்டுமல்லாமல் தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பே பைனான்ஸ் நிறுவனம் தொடங்கி மகளிர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாயிகள் சிறு வியாபாரிகள் என பல தரப்பினருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள். கோயில், மசூதி, ஆலயம் ஆகியவற்றின் திருவிழாக்களுக்கும், அம்பேத்கர், திப்பு சுல்தான், பசவண்ணர், வால்மீகி போன்றோரின் பிறந்த நாளையும் விமரிசையாக கொண்டாடி, அந்தந்த வகுப்பினரின் வாக்கு வங்கியை அறுவடை செய்ய தொடங்கி விட்டார்கள்.

ரெட்டி சகோதரர்களின் இதே பாணியை காங்கிரஸின் டி.கே.சிவகுமார், பிரியா கிருஷ்ணா, நாகராஜ், பசவராஜ், ஹாரீஸ் போன்றவர்களும் பின்பற்றுகிறார்கள். பாதாமியில் போட்டியிடும் சித்தராமையாவுக்காக அவரது ஆதரவாளர் ஆனந்த் சிங் தாராளம் காட்டினார்.

சாதி கணக்கு

கர்நாடக அரசியல் சாதி அமைப்பால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தலைவர், ஒரு மடம் என சாதி அரசியல் பலமாக இயங்குகிறது. எனவே காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய மூன்று கட்சிகளும் சாதியை அடிப்படையாக வைத்தே வேட்பாளர் தேர்வு, பிரச்சார உத்தி, தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வகுத்தன. கர்நாடகாவில் லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பெரும்பான்மை என்பதை அண்மையில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு பொய்யாக்கியது. 6 கோடி மக்கள் வாழும் கர்நாடகாவில் 19.5 % வாழும் தலித்துகளே பெரும்பான்மை. அதற்கடுத்த நிலையில் இஸ்லாமியர் 16%, லிங்காயத் 14%, ஒக்கலிகர் 11%, குருபர் 8%, பழங்குடியினர் 5% உள்ளனர்.

எனவே பெரும்பான்மையாக வசிக்கும் தலித்துகளின் வாக்குகளை குறிவைத்து காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அத்தனை கட்சிகளும் காய் நகர்த்தின. தொடக்கம் முதலே காங்கிரஸ் தலித்துகளின் நண்பனாக காட்டிக்கொண்டதால், பாஜக தலித்துகள் மீது பாசமழை பொழிந்தது. மல்லிகார்ஜுன கார்கே தலித் என்பதால் அவரை முதல்வராக்கவில்லை. அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்து விட்டது என மேடைதோறும் மோடி முழங்கினார். எடியூரப்பா வாரத்தில் ஒருநாள் தலித் வீட்டில் உண்டு, உறங்கினார். இன்னொரு பக்கம் தேவகவுடா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கைகோத்து, தலித் பந்தத்தை காட்டினார். ஓவைசியுடன் கூட்டணி அமைத்து, இஸ்லாமியரின் வாக்குகளையும் பிரித்தார்.

ஆனால் சித்தராமையா தலித், இஸ்லாமியர், குருபர், கிறிஸ்தவர் உள்ளிட்டோரின் வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் செய்தார். இந்த சமூகத்தினர் வாக்களித்தாலே காங்கிரஸ் 40 % வாக்குகளை கடந்துவிடும். போதாக்குறைக்கு லிங்காயத்து, ஒக்கலிகர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்களில் தலா 2% வாக்களித்தாலே, வெற்றி நிச்சயம் என்ற கணக்கைப் போட்டிருக்கிறார்.

மோடியா, ராகுலா

‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ என்கிற முழக்கத்துடன் கடைசிக்கட்ட சூறாவளியாக களமிறங்கினார் மோடி. 6 நாட்களில் 25 கூட்டங்களில் ‘வளர்ச்சி’ எனும் குஜராத் அஸ்திரத்தை முன்வைத்தார். 2019-ல் தனக்கு எதிரியாக மாறப் போகும் ராகுல் காந்தியை முதிர்ச்சி அற்றவர், பேச தெரியாதவர், திமிர் பிடித்தவர்,பேராசைக்காரர் என இந்த தேர்தலிலேயே போட்டு தாக்கினார். சோனியா காந்தியை இத்தாலிகாரர், சித்தராமையாவை கமிஷன்காரர் எனவும் மோடி தனிநபர் தாக்குதலில் மேடை பேச்சாளரை மிஞ்சினார். கடந்த 2 மாதங்களாக கர்நாடகவாசியாகவே மாறிவிட்ட அமித் ஷா கடைசிநாளில் மட்டும் 39 இடங்களில் புயலாக வீசினார். போதாக்குறைக்கு ஒரே நாளில் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் உட்பட 50 பேரை களமிறக்கி கர்நாடகாவை திணறடித்தார்.

தொடக்கத்தில் பிரம்மாண்ட பேரணிகளில் பேசிய ராகுல் காந்தி, கடைசி கட்டத்தில் தெருமுனைக்கு திரும்பினார். 10 நாட்களில் 50 சிறு சிறு கூட்டங்களில் மோடியையும், பாஜகவையும் வெளுத்து வாங்கினார். திடீரென பாதயாத்திரை, சைக்கிள் பேரணி, மாட்டுவண்டி பயணம் என ராகுல் காட்டிய வித்தைக்கு விசில் பறந்தது. இரண்டாண்டுகளுக்கு பின்னர் தேர்தல் களத்துக்கு வந்த சோனியா காந்தி, “நடிகரைப் போல கையை அசைத்து நன்றாக பேசுவதாலே ஏழைகளின் வயிறு நிரம்பி விடாது மோடி. நீங்கள் வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வீட்டில் குடும்பத்தை நடத்த முடியாமல் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா?” என கேட்டார். சோனியாவின் லேடீஸ் சென்டிமெண்ட் பேச்சுக்கு பெண் வாக்காளர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ்.

“என் தாய் இத்தாலிகாரர்தான். இங்குள்ள சில இந்தியர்களைவிடவும், அவர் இந்நாட்டுக்கு உண்மையாக இருந்திருக்கிறார்” என மோடிக்கு பதில் சொன்ன ராகுல், “கடந்த 4 ஆண்டுகளாய் ஏன் ஒரு முறைகூட பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை?” என எழுப்பிய கேள்விக்கு பாஜகவில் ஒருவ‌ரும் பதில் சொல்லவில்லை!

அடுத்த முதல்வர் யார்?

கர்நாடகாவில் கடந்த 5 முறை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் 30% முதல் 40% வாக்குகளையும், பாஜக 25% முதல் 35 % , மஜத 17% முதல் 25% வாக்குகளை பெற்றிருக்கின்றன. ஆட்சியை பிடிக்கும் கட்சி 224 தொகுதிகளில் 113 இடங்களை பெற வேண்டும். இந்த இடங்களை கைப்பற்றி யார் முதல்வர் நாற்காலியில் அமர போகிறார் என்பதில் சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி ஆகிய மூவரிடமும் கடும் போட்டி நிலவுகிறது.

கடைசிக்கட்ட கள நிலவரப்படி காங்கிரஸ் கூடுதல் இடங்களை கைப்பற்றினாலும், தனிப்பெரும்பான்மை பெற கடினமாக போராட வேண்டியுள்ளது. ஒருவேளை யாருக்கும் தனி பெரும்பன்மை கிடைக்காவிட்டால் தொங்கு சட்டப்பேரவை அமைந்துவிடும். இந்த சூழல் ஏற்பட்டால் மஜத, காங்கிரஸைவிட, பாஜகவின் பக்கமே சாய அதிக வாய்ப்பு உள்ளது.

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கான பதில் மே 15-ம் தேதி பிற்பகல் தெரிந்துவிடும். அந்த பதில்தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முடிவை தீர்மானிக்க போகிறது!

கருத்து கணிப்புகள் சொல்வதென்ன?

இந்தியா டிவி : காங்கிரஸ் 96, பாஜக 85, மஜத 38, சுயேச்சை 4 இடங்கள்

டைம்ஸ் நவ் டிவி : காங்கிரஸ் 91, பாஜக 89, மஜத 40, சுயேச்சை 4 இடங்கள்

இந்தியா டுடே டிவி : காங்கிரஸ் 96-101, பாஜக 78-86, மஜத 34-43 இடங்கள்

நியூஸ் எக்ஸ் டிவி : காங்கிரஸ் 90, பாஜக 87, மஜத 39, சுயேச்சைகள் 7 இடங்கள்

ஏபிபி நியூஸ் டிவி : காங்கிரஸ் 97, பாஜக 84, மஜத 37, சுயேச்சைகள் 6 இடங்கள்

சுவர்ணா டிவி : காங்கிரஸ் 72, பாஜக 102, மஜத 44, சுயேச்சைகள் 4 இடங்கள்

பப்ளிக் டிவி: காங்கிரஸ் 89-94, பாஜக 86-91, மஜத 38-43 இடங்கள்

சி-ஃபோர் நிறுவனம் : காங்கிரஸ் 123, பாஜக 68, மஜத 32, சுயேச்சைகள் 1 இடம்

விஎம்ஆர் நிறுவனம் : காங்கிரஸ் 91, பாஜக 89, மஜத 40, சுயேச்சைகள் 4 இடங்கள்

ஜன்கிபாத் நிறுவனம் : காங்கிரஸ் 72-74, பாஜக 102-108, மஜத 42-44 இடங்கள்

சி-வோட்டர் நிறுவனம்: காங்கிரஸ் 102, பாஜக 96, மஜத 25, சுயேச்சை 1 இடம்