வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

அரசாங்க, தனியார் மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பல இணைந்து இன்று மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. வரவுசெலவுத்திட்டத்தில் உள்ள முன்மொழிவுகள் சிலவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் சுமார் 150 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்றுக்கு தயாராகின.

இந்த நிலையில் நேற்று பிரதமர் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிவித்தலைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்ததாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டிணைப்பின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்காமை, தனியார் சம்பளத்தை அதிகரிக்காமை, வாகன அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையிலேயே வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்றையதினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதாகவும், வாகனங்களுக்கான புகைப் பரிசோதனைக் கட்டணம் மற்றும் லீசிங் கட்டணங்களைக் குறைத்தல் உள்ளிட்ட அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து கூடிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு முடிவெடுத்தன.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதில்லையென தாம் தீர்மானித்ததாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார். இருந்தபோதும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.