30-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளிடம் போராட்டத்தைக் கைவிடக் கோரிய தம்பிதுரை, உடலில் தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுதிக் கொண்ட விவசாயிகள்.
விவசாயிகளிடம் போராட்டத்தைக் கைவிடக் கோரிய தம்பிதுரை, உடலில் தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுதிக் கொண்ட விவசாயிகள். மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை கோரிக்கையை நிராகரித்து, தமிழக விவசாயிகளின் போராட்டம் 30-வது நாளாக தொடர்கிறது.

டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது, தேசிய தென்னிந்திய நதிநீர் விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தொடர்கிறது. இதற்கு ராகுல் காந்தி, சீதாராம் எச்சூரி, டி.ராஜா உட்படப் பல்வேறு தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவளித்து வருகின்றனர். இவர்களுடன் தமிழக கட்சித் தலைவர்களான மு.க.ஸ்டாலின், கனிமொழி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், திருநாவுக்கரசர் உட்படப் பலரும் வருகை தந்துள்ளனர்.

இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான கே.வி.தங்கபாலு மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் மீண்டும் வந்து ஆதரவளித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று மக்களவை துணைத்தலைவர் எம்.தம்பிதுரையும் தம் கட்சியின் அவை தலைவரான டாக்டர்.பி.வேணுகோபால் மற்றும் மாநிலங்களவையின் கட்சித் தலைவரான நவநீதிகிருஷ்ணன் ஆகியோருடன் நேரில் வந்திருந்தார்.

அப்போது அவர், தமிழக விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை அதிமுக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோருக்கு அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது: ”தமிழக விவசாயிகளை அதிமுக சார்பில் நாம் மத்திய நிதித்துறை, நீர்வளத்துறை, உள்துறை மற்றும் விவசாயத் துறை அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று சந்திக்க வைத்தோம். இதுவன்றி, பிரதமர் மற்றும் நிதித்துறை அமைச்சருக்கும் விவசாயிகளின் மனுக்களை நான் அனுப்பி வைத்துள்ளேன். அரசின் முன் வைக்கும் எந்த ஒரு கோரிக்கைக்கும் நாம் காலஅவகாசம் அளிக்க வேண்டும். எனவே, இதில் விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புவதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை இன்றுடன் கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று காலை மக்களவையில் அதிமுக சார்பில் அதன் அவைத்தலைவர் டாக்டர்.பி.வேணுகோபால் விவசாயிகள் பிரச்சினையை எழுப்பி இருந்தார். இதையும் குறிப்பிட்டு பேசிய தம்பிதுரையின் கோரிக்கையை தமிழக விவசாயிகள் நிராகரித்தனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பி.அய்யாகண்ணு கூறுகையில், ‘பிரதமர் அல்லது மத்திய நிதி அமைச்சர் எங்கள் கோரிக்கைகளை இருமாதங்களில் நிறைவேற்றுவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் வசூலின் பெயரில் ஜப்தி உட்பட எந்தவிதமான துன்புறுத்தலும் செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி கவர்னர் ஒரு உத்தரவிட வேண்டும். இதை செய்தால் ஒழிய எங்கள் போராட்டம் ஓயாது’ என உறுதியாகத் தெரிவித்தார்.

தீவிரப் போராட்டத்தில் அன்றாடம் எதையாவது வித்தியாசமாக செய்வது விவசாயிகளின் வழக்கமாக உள்ளது. இந்தவகையில், இன்று அவர்கள் தமது கோரிக்கைகளை கை. கால்கள் மற்றும் உடல்களில் பல வர்ணங்களில் எழுதிக் கொண்டனர். இதற்கு முன் அவர்கள், மண்சோறு சாப்பிடுவது, எலி மற்றும் பாம்புகளை வாயில் கவ்வி எனப் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.