‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’

எந்தவகையான ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் ஐக்கிய அமெரிக்கா மீது அணுத் தாக்குதலொன்று நடைபெறும் என வடகொரிய அரச ஊடகம், நேற்று (11) எச்சரித்துள்ளது. இதேவேளை, “போர்க்கப்பல்களின் கூட்டம்” என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்த ஐக்கிய அமெரிக்க கடற்படையின் தாக்குதல் குழுவொன்று மேற்கு பசுபிக்கை நோக்கிச் செல்கையிலேயே, வடகொரியாவின் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தனது நட்பு நாடும் அயல் நாடுமான வடகொரியாவைக் கட்டுப்படுத்துவதற்கு, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சீனாவை வலியுறுத்துகின்ற ஐ. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியா, பிரச்சினையை எதிர்பார்ப்பதாகவும், சீனாவின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ, ஐக்கிய அமெரிக்கா பிரச்சினையைத் தீர்க்கும் என, டுவீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தாங்கள், போர்க்கப்பல்களின் கூட்டமொன்றை அனுப்பியுள்ளதாக மேலும் தெரிவித்த ட்ரம்ப், தாங்கள் நீர்மூழ்கிகளைக் கொண்டிருப்பதாகவும், அவை விமானந்தாங்கிக் கப்பலை விட சக்திவாய்ந்தது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தங்களது அணுப்பார்வை, தென்கொரியா, பசுபிக் நடவடிக்கை அரங்குகளிலுள்ள ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்புத் தளங்களில் மட்டும்மல்லாமல், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தளங்களையும் நோக்கியுள்ளதாக, வடகொரியாவின் உத்தியோகபூர்வ றொடொங் சின்முன் பத்திரிகை தெரிவித்துள்ளது.