இரண்டு துருவ நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்தன!

தமிழ் நாட்டின் இரண்டு ஆளுமை உள்ளவர்களின் அடுத்தடுத்த மறைவு பலரை, நடுக்கடலில் துருவ நட்சத்திரம் கொண்டு திசையறிபவர்கள், அது மறைந்தால் படும் இன்னல் போன்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டது. தமிழகத்தின் முதல்வர், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைவி, அம்மா என அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா அம்மையார் மறைவும், துக்ளக் ஆசிரியர், பன்முக தன்மைகொண்ட அரசியல் விமர்சகர், பிரதமர் நரேந்திர மோடியால் ராஜகுரு என அழைக்கப்பட்ட சோ ராமசாமி அவர்களின் மறைவும் ஈடுசெய்ய முடியாதவை.

எந்த அரசியல் பின்னணியும் இன்றி, எம் ஜி ஆர் என்ற மூன்றேழுத்து மந்திரத்துக்கு கட்டுப்பட்டு, அரசியல் பிரவேசம் செய்த செல்வி ஜெயலலிதா, தன்னை சகோதரி என அழைத்தவர்களே பின்னர் காலமாற்றத்தால், தன்தொடர் மக்கள் நல செயல்ப்பாட்டல், அம்மா என அழைக்கும் அளவுக்கு தன்னை உயர்த்தியவர். வக்கீலாக, நாடக, சினிமா நடிகராக, துக்ளக் ஆசிரியராக பல் முகம்கொண்டு, தனது அரசியல் நகர்வுகளால் ஜெயலிதாவின் வெற்றிக்கும், இந்தியாவின் புதிய பிரதமராக மோடியின் வரவுக்கும், ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கி, ராஜகுருவாக உச்சம் தொட்டவர் சோ ராமசாமி.

இருவருக்கும் ஒரு ஒற்றுமை தாம் நினைப்பது சரி என்றால், அதை மறுப்பவர் எத்தனை பெரியவர் என்றாலும் எதிர்த்து நிற்பது. துணிவு, தன்னம்பிக்கை இவர்கள் இருவரதும் அணிகலன்கள். இவர்கள் இருவரையும் விமர்சிப்பவர்களே, இவர்கள் அடையும் வெற்றிகண்டு சிலாகிப்பதும் நிதர்சன உண்மை. இருவரும் கொண்ட அன்னியோன்னியம், திரைப்படம் தொடங்கி, அரசியல் வரை நீடித்தது நிஜம்.

தன்னிடம் மற்றவர் ஆசீர்வாதம் பெறும்வேளையில், தானே தேடிச்சென்று சோ ராமசாமி தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்கியவர், எவர்க்கும் தலைவணங்கா தலைவியான, ஜெயலலிதா அமையார். தீர்க்கமான முடிவுகள் எடுப்பதும் அதை செயல்ப்படுத்த, தீவிரமாக உழைப்பதும் அம்மையார் பாணி. விடயங்களை அலசி ஆராய்வதும், அதுபற்றி ஆணித்தரமான எதிர்வுகூறலை முன்வைப்பதும், சோ பாணி.

ஈழத்தமிழர் விடயத்தில் தன் வரையான அதிகார வரம்புக்குள், பல முன்முயற்சிகள் எடுத்தவர் அம்மையார். அதே வேளை ஈழப்போராளிகள் பற்றிய கணிப்பில் ஆரம்பத்தில் இருந்தே, எதிர்மறையான கருத்தை பகிரங்கமாக தெரிவித்தவர் சோ. இன்று ஆயுதம் ஏந்தும் இவர்கள் எதிகாலத்தில், தம்முள் மோதுவர் என ஆரம்பத்தில் அவர் கூறியது, பலருக்கு அப்போது கசந்தது. பின்பு அதுவே நடந்தது.

விடுதலை புலிகள் செயல் பற்றிய கடும் விமர்சனங்கள் அவரால் முன்வைக்கப்பட்ட போது, அவருக்கு ஏற்ப்படக்கூடிய அச்சுறுத்தலுக்காக, அவர் காரியாலய வாசலில் துப்பாக்கி ஏந்திய காவலர் நின்றனர். அதுபற்றி வடக்கு கிழக்கு மாகாண சபை போக்குவரத்து அமைச்சராக இருந்த அபு யூசுப், அவரிடம் கேட்டபோது விடுதலை புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்காது, எதிர்ப்பது நல்லதல்ல என, நான் கட்டுரை எழுதினேன்.

அதனால் எனக்கு காவலுக்காக பாவம் அந்த பொலிஸ்காரரை கால்கடுக்க என் காரியாலய வாசலில் நிற்கவைத்துவிட்டார்கள். என் எழுத்து கடமையை நான் செய்கிறேன், அவர் பாவம் தன் கடமைக்காக மாட்டிக்கொண்டார் என கூறினார். பல வழிகளில் தனக்கு ஆலோசனை வழங்கிய சோ அவர்களை, அம்மையார் வைத்தியசாலை சென்று நலம் விசாரித்த போது, சீக்கிரம் குணமாகி வீடுவந்து சேருங்கள், எனக்கு முன் போக முற்படாதீர்கள் என கூறும்போது,

தானும் விரைவில் அப்பலோவில் அனுமதிக்கப்படுவேன் என அவர் நினைத்திருக்க மாட்டார். விதி அவரையும் அங்கு கூட்டிச்சென்று 75 நாட்கள் காக்கவைத்து காலனிடம் கையளித்தது. ஆனால் அம்மையார் கேட்டுக்கொண்டபடி, தான் முன்னே செல்லாமல், ஒருநாள் காத்திருந்து, மறுநாள் காலனுடன் கைகோர்த்தார் சோ ராமசாமி.

கோடிக்கணக்கான தமிழக மக்களின் மனதில் வாழும் அம்மையார் ஜெயலலிதா அவர்களும், லட்சக்கணக்கான துக்ளக் வாசகர் இதயங்களில் வாழும் பெரியவர் சோ ராமசாமி அவர்களும் மறைந்துவிட்டாலும் அவர்களை நேசித்தவர்களின் அகக்கண்ணு புலப்படும் துருவ நட்சத்திரங்களே!

(ராம்)