ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த மூவருக்கு இரட்டை மரணதண்டனை

யாழ்ப்பாணம் – நாரந்தனைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 3 எதிரிகளுக்கு இரட்டை மரண தண்டனையும் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்துறை நாரந்தனையில் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் கொலை செய்து, 18 பேருக்குக் காயம் ஏற்படுத்தியதாக ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கில் 3 எதிரிகளுக்கு இரட்டை மரண தண்டனையும் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த பதினைந்து வருடங்களின் பின்னர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை செய்ததன் பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஈபிடிபி கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த ஊர்காவற்றுறை பிரதேசத்தில் நாரந்தனை பகுதிக்குச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக ஈபிடிபி கட்சியின் தீவுப்பகுதி இராணுவ பொறுப்பாளராக இருந்த செபஸ்டியன் ரமேஸ் அல்லது நெப்போலியன்,

தீவுப்பகுதி ஈபிடிபி கட்சியின் பிரதேச சபைத் தலைவர் நடராஜா மதனராஜா அல்லது மதன், ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜா அல்லது ஜீவன், வேலணை பிரதேச சபைத் தலைவர் நமசிவாயம் கருணாகரமூர்த்தி ஆகிய நான்கு பேருக்கும் எதிராக சட்ட மாஅதிபரினால், யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 2 கொலைக்குற்றச்சாட்டுக்களுடன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 18 பேருக்குக் கடும் காயம் விளைவித்தமை, 3 வாகனங்களைச் சேதப்படுத்தியமை, சட்டவிரோத கூட்டம் கூடி குற்றம் புரிந்தமை, பொது எண்ணத்துடன் குற்றம் புரிந்தமை உட்பட 47 குற்றச்சாட்டுக்கள் இந்த நான்கு எதிரிகள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முதலாம் இரண்டாம் எதிரிகளான நெப்போலியன் மற்றும் மதனராஜா ஆகிய இருவரும் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு பிணையில் இருந்த காலத்தில் தப்பியோடி பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக யாழ். மேல் நீதிமன்ற விசாரணையின்போது அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, முதலாம் இரண்டாம் எதிரிகள் இல்லாமலேயே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.