எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்(பகுதி – 5)

(அ. வரதராஜா பெருமாள்)

சர்வதேச சமநிலையில் இலங்கையின் வறுமைக் கோடு

சர்வதேச பண்டக் கொள்வனவு சக்தி மதிப்பீட்டின்படி இலங்கையின் வருடாந்த தலாநபர் வருமானம் தற்போது 3850 (அமெரிக்க) டொலர் (2019ல்). இது அமெரிக்காவில் 13200 டொலர் வருமானம் பெற்று சீவிப்பதற்குச் சமன் எனக் கணிப்பிடப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு. இதே உலக வங்கி 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமெரிக்க குடும்பத்தின் வறுமைக் கோட்டு எல்லையின் மாதாந்த வருமானத்தை சுமார் 2000 டொலர்களெனக் குறிக்கிறது. அதாவது அவ்வாறானதொரு அமெரிக்க குடும்பம் வறுமைக் கோட்டின் எல்லையில் வாழ வேண்டுமேயாயினும் அதற்கு வருடத்துக்கு 24000 டொலர்கள் வருமானம் தேவை என ஆகின்றது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையானது 2018ம் ஆண்டு விலைகளின்படி 4 பேர் கொண்ட குடும்பத்துக்கான வறுமைக் கோட்டு எல்லையை அமெரிக்கா முழுவதற்குமான சராசரியாக 25000 டொலர்களென வரையறுத்திருந்ததை இங்கு கவனத்திற் கொள்வது அவசியமாகும்.