எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்(பகுதி – 5)

அவ்வாறான வரையறையின்படி பார்த்தால், இலங்கையின் கொள்வனவு திறன் சமநிலையின்படி, இலங்கையிலுள்ள ஒரு குடும்பம் வறுமைக் கோட்டின் மீது வாழ்வதற்கு ஆண்டுக்கு சுமார் 7200 அமெரிக்க டொலர் பெறுமானமுள்ள வருமானம் கிடைக்க வேண்டும். அதாவது இலங்கையில் அடிப்டைத் தேவைகளாக உள்ள பண்டங்களின் சந்தை விலைகளை அமெரிக்காவின் சந்தை விலைகளோடு ஒப்பிடுகையில் அமெரிக்காவின் சந்தைகளில் அவற்றின் விலை சராசரியாக சுமார் மூன்றரை மடங்கு அதிகமாக உள்ளதாக கணிக்கப்படுகின்றது. எனவே அமெரிக்காவில் 25000 டொலர்களுக்கு வாங்குகின்ற அதே அளவு பொருட்களை இலங்கையில் வாங்குவதாக இருந்தால் 2019ம் ஆண்டு விலைகளின்படி இலங்கை ரூபாயில் (7200 x 185) 13 இலட்சம் தேவைப்படும். அதாவது அமெரிக்காவில் வறுமைக் கோட்டின் எல்லையில் உள்ள ஒரு குடும்பத்தின் அதே வறுமை எல்லையின் தராதரத்தில் இலங்கையின் ஒரு குடும்பம் வாழ வேண்டுமாயின் இங்கு ஒரு குடும்பம் பெற்றிருக்க வேண்டிய வருட வருமானம் ரூபா 13 லட்சமாக இருக்க வேண்டும். அதாவது மாதாந்த வருமானமாக சராசரியாக கிட்டத்தட்ட ரூபா 110000 பெற்றிருக்க வேண்டும்.

எளிமையான இந்தக் கணக்கானது நாடுகளுக்கிடையிலான வறுமை எல்லைக் கோட்டுக்கான ஒப்பீட்டை மிகைப்படுத்துவது போல தென்படுவதாக வாதிடலாம். ஆனால், இலங்கையின் தேசிய வருமானத்தின் சர்வதேச பெறுமானத்தைக் கணிப்பதற்கு அமெரிக்காவின் சந்தை விலைகளின் அடிப்படையிலான கொள்வனவு திறன் சமநிலை எனும் அளவுகோல் மூலம் கணிக்கலாம் என்றால், அதே அளவு கோலைக் கொண்டு இலங்கையின் வறுமைக் கோட்டையும் கணிப்பதில் என்ன தவறிருக்க முடியும். ஒரு அமெரிக்க பிரஜையின் அடிப்படை வாழ்வுக்கான உத்தரவாதத்துக்கு உரிய பொருளாதார அடிப்படை அளவு கோலையும், ஓர் இலங்கைப் பிரஜையின் அடிப்படையான பொருளாதார வாழ்வுக்கு உத்தரவாதமாகக் கொள்ள வேண்டிய அளவு கோலையும் ஏற்றத்தாழ்வாக வேறுபடுத்துவது எந்த வகையிலும் சர்வதேசங்கள் அனைத்துக்கும் பொதுவான பிரபஞ்ச நீதியாகக் கொள்ள முடியாது.

உலக வங்கிக் கணக்குப்படி பார்த்தாலும்

உண்மை சரியாகக் கணக்கிடப்படவில்லை

மேலே பந்தியில் கூறப்பட்டவை ஒரு புறமிருக்கட்டும். உலக வங்கி 1990களில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் பொதுவாக எடுத்து, ஒரு (1.00) அமெரிக்க டொலர் பெறுமதிக்கும் குறைவான நாளாந்த வருமானத்தைக் கொண்ட ஒவ்வொருவரும் வறுமைக் கோட்டுக் கீழே வாழ்பவர்களாகக் கணித்தது. பின்னர் அந்த எல்லையை 2005இல் 1.25 அமெரிக்க டொலர்களாக அறிவித்தது. அண்மையில் உலக வங்கியின் அறிக்கையின்படி அந்த எல்லை தற்போது சர்வதேச கொள்வனவுத் திறன் பெறுமதியின் அடிப்படையில் ஆகக் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு சராசரியாக 1.90 அமெரிக்க டொலர்களாகவும், கீழ் மட்ட மத்திய வருமானம் பெறும் நாடுகளுக்கு சராசரியாக 3.20 அமெரிக்க டொலர்களாகவும், மத்திய வருமானம் கொண்ட நாடுகளுக்கு 5.50 அமெரிக்க டொலர்களாகவும், உயர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு சராசரியாக 21.70 அமெரிக்க டொலர்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறைகளின் நியாயங்கள் பற்றிய கேள்விகள் ஒருபுறமிருக்கட்டும். குறைந்த பட்சம் இந்த வரைமுறையிகளின் படியாயினும் இலங்கையின் வறுமை நிலை என்ன என்பதை அவதானிப்பது அவசியமாகும்.

இலங்கை மத்திய வருமானம் கொண்ட நாடுகளின் தராதரத்தை அண்மிப்பதாக அரசு நிறுவனங்கள் கூறிக் கொள்கின்றன. உலகில் மத்தியதர வருமானம் கொண்ட நாடுகளில் இலங்கை எந்த மட்டத்தில் இருக்கின்றது என்ற விவாதங்களை தவிர்த்து இலங்கையை மத்திய தர வருமான எல்லைக்குள் கீழ் மட்ட நிலையிலுள்ள நாடு என கொள்வோமாயினும் இலங்கையின் நாளாந்த வறுமைக் கோட்டு எல்லையில் வாழும் ஒரு நபரின் வருமானமானது 3.2 அமெரிக்க டொலர்களுக்கு சமமான வருமானத்தை கொண்டதாக இருக்க வேண்டும். இதனை 4 பேரைக் கொண்ட குடும்பத்துக்கான சராசரி வருமான எல்லையாகக் கொண்டால் அவ்வாறான குடும்பத்திற்கான வறுமைக் கோட்டின் மாதாந்த வருமானம் 384 (3.2 x 4 x 30) டொலர்களாக இருக்க வேண்டும். அதனை உலக வங்கியின் கணக்குப்படி பார்த்தால் தற்போது இலங்கையில் ஒரு குடும்பம் வறுமைக் கோட்டு எல்லையில் வாழ்வதற்கான மாதாந்த வருமானம் 76800 (384 x 200) ரூபாவாக இருக்க வேண்டும். எனவே, குறைந்த பட்சம் உலக வங்கியின் வறுமைக் கோட்டு எல்லை வருமானம் என்பதன் கணக்குப்படி பார்த்தாலும் கூட இலங்கையின் வறுமைக் கோட்டு எல்லை எந்த நீதியின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்பதை இங்கு கேள்விக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது.

மேலே தர்க்கபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்குகள் மற்றும் கேள்விகள் எல்லாம் நியாயமான அடிப்படைகளைக் கொண்டவையாக இருப்பினும், அவற்றை ஒருபுறம் வைத்து விட்டு, சாதாரணமான கள நிலைமைகள் தொடர்பான அவதானிப்புகளை பகுத்தறிவு கொண்டு பார்த்தாலும் கூட:-

• இந்த நாட்டிலுள்ள நிலமற்ற விவசாயக் கூலி உழைப்பாளர்கள்,

• இரண்டு ஏக்கருக்கும் குறைவான நெல் விளைச்சல் நிலத்தை உடைமையாகக் கொண்ட ஏழை விவசாயிகள்,

• பெருந்தோட்டத் துறையில் உள்ள நாட் கூலித் தொழிலாளர்கள்,

• நகரப் புறங்களில் முறைப்படுத்தப்படாத துறைகளில் வேலை செய்யும் பெரும்பாலான நாட்கூலித் தொழிலாளர்கள்,

• தனியார் வியாபார நிறுவனங்களில் நிரந்தரமாக்கப்படாது வேலை செய்யும் ஊழியர்கள், கட்டிடத் துறையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் போன்ற வகையினர் மட்டுமல்ல,

• அரச மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தனியார் துறைகளிலுள்ள ஊழியர்களிற் பெரும்பாலானோரும்

இங்கே வறுமைக் கோட்டு எல்லைக்குக் கீழான நிலையிலேயே வாழ்கின்றனர் என்பதே உண்மையாகும்.

அதிகாரக் கதிரைகளில் அமர்ந்திருப்போர்

சாதாரண குடிமக்களின் கடினங்கள் அறியாதோரே.

இலங்கையின் அரசாங்கத்துறையில் உள்ளவர்கள் 2019 இறுதியில் அல்லது 2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் பெற்ற மாதாந்த சராசரி சம்பளம் சுமார் 65000 ரூபா. 2016ம் ஆண்டு இது 45000 ரூபா என பிரதமரே அறிவித்திருந்தார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப்படி அரசாங்கம் அதனது சுமார் 12 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளமாகவும் கூலியாகவும் செலுத்துவதற்கு சுமார் 780 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளமையை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். முறைப்படுத்தப்பட்ட தனியார் துறையில் ஊழியர்களாக வேலை செய்கிறவர்களின் மாதாந்த ஊதியம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் 20,000 ரூபாவிலிருந்து 200,000 ரூபா வரை வேறுபடுவதாயிருப்பினும்; இத்துறையில் உள்ளவர்களிற் பெரும்பான்மையானோரின் மாதாந்த சராசரி சம்பளம் அல்லது கூலி 40000 ரூபாவுக்கும் குறைவாகவே உள்ளது.

〈 சுதந்திர வர்த்தக வலயத்தில் இருக்கின்ற ஆடைத்தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் இயந்திரம் போல மிகக் கடுமையாகவும் குறைந்தளவு விடுமுறை நாட்களுடனும் உழைக்கின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் தமக்குரிய உற்பத்திப் பகுதியில் அதிக உழைப்புத் திறன் உடையவர்களாக உள்ளனர். இருந்தும் அவர்கள் தமது மாதாந்த சம்பளமாக 35000 ரூபா வரையே பெறுகின்றனர். அதேவேளை 25000 ரூபா அளவில் சம்பளம் பெறுவோரே மிகப் பெரும்பான்மையாக உள்ளனர்.

〈 தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்கள் பெரும்பாலும் முறைப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்புகளுக்குள்ளேயே வருகின்றன. இங்கு கணவனும் மனைவியும் உழைக்கின்றனர். அவர்களின் பிள்ளைகளிலும் கணிசமானோர் உழைக்கிறார்கள். இவர்களுக்கு நேரடியாகக் கிடைக்கின்ற மான்யங்களையும் உள்ளடக்கிப் பார்த்தாலும் இத்துறையில் உள்ள ஒரு சிறு சதவீதமானோர் தவிர்ந்த ஏனையோரின் குடும்ப மொத்த வருமானம் 40000 ரூபாவுக்கும் குறைவாகவே உள்ளது.

〈 முறையான நிறுவன அமைப்புகளுக்குள் உட்படுத்தப்படாத மரபுரீதியான அதாவது நெல் விவசாயம் மற்றும் தோட்ட விவசாயத் துறையில் இருக்கும் சிறு நில விவசாயக் குடும்பங்களும் சரி, நாளாந்தக் கூலிக்கு வேலை செய்யும் விவசாயக் கூலியாளர்களின் குடும்பங்களும் சரி அதே பரிதாப நிலையிலேயே உள்ளன.

〈 மரபுரீதியான கிராமிய ஆக்க உற்பத்தித் தொழில்களில் கூலிக்கு உழைப்பைக் கொடுப்போர் மட்டுமல்லாது அத்தொழில்களில் குடும்ப உழைப்பை அடிப்படையாகக் கொண்டு உழைப்போரின் வருமான நிலையும் அதே அளவுக்கு கவலைக்குரியதே.

〈 இலங்கையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளர்கள் நாட்கூலிக்கு வேலை செய்பவர்களாகவே உள்ளனர். இங்கு ஆண்களின் நாட்கூலி சராசரியாக 1500 ரூபா எனக் கொண்டாலும் இவர்களின் மாதவருமானம் 30000 ரூபாவுக்கு மேல் போவது மிகவும் அரிது. இவர்களுக்கு மாதாந்தம் சராசரியாக 20 நாட்களுக்கு மேல் வேலை கிடைப்பது மிகவும் சிரமம்.

〈 விவசாய மற்றும் கிராமங்களில் ஏனைய தொழில்களில் நாட்கூலிக்கு வேலை செய்யும் பெண்களின் நிலைமை இங்கு மிகவும் மோசமாக உள்ளது. நகரப் புறங்களில் பெண்களின் உழைப்புக்குக் கிடைக்கும் நாட்கூலி அனைத்துத் துறைகளிலும் பெரும்பாலும் 1200 ரூபாவுக்கும் குறைவாகவே உள்ளது. இது கிராமப்புறங்களிலும் விவசாயத் துறையிலும் 700 ரூபாவாக அல்லது 800 ரூபாவாகவே உள்ளது.

〈 இலங்கையெங்கும் தனியார் கடைகளில் வேலை செய்யும் பெண்களின் மாதாந்த சம்பளம் 15000 ரூபாவுக்கு அதிகமாக இருப்பது மிகக் குறைவு. அதுவும் புறநகர் பகுதிகளில் அல்லது கிராமங்களை அண்டிய பகுதிகளிலுள்ள கடைகளில் வேலை செய்யும் பெண்கள் மாதாந்தம் 8000 ரூபாவையோ அல்லது அதற்கு சற்றுக் கூடுதலாகவோ மட்டும் பெற்றுக் கொண்டு மாதம் 25 நாட்கள் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க உடல் நோக மௌனமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தேசிய வருமானம் பல்லக்கிலே செல்லுதாம் – ஆனால்

குடிமக்களின் வாழ்க்கைத்தரமோ பாதாளத்திலே!

இலங்கை அரசின் 2016ம் ஆண்டு கள ஆய்வு அறிக்கையின்படி, சராசரி வீட்டு வருமானம் ரூபா 62500 ஆகும். இது 2019ம் ஆண்டு இறுதியில் இதனை அதிகபட்சமாக ரூபா 80000 எனக் கொண்டு பார்த்தால் கூட இலங்கையின் மிகப் பெரும்பான்மையான மக்களின் பொருளாதார வாழ்க்கை ஒரு நாளாந்த போராட்டமாகவேதான் அமைகின்றது.

இலங்கையில் நிலவும் வருமானப் பகிர்வில் காணப்படும் ஏற்றத்தாழ்வின்படி, கீழ் நிலையிலுள்ள ஊழியர் அல்லது தொழிலாளி பெறுகின்ற சம்பளத்தை விட மேல் நிலையில் உள்ள ஓர் ஊழியர் பொதுவாக பல மடங்கு அதிகமாகவே சம்பளம் பெறுகிறார் என்பதை நடைமுறையிற் காணலாம். அரசாங்க ஊழியர்களின் உத்தியோகபூர்வமான சம்பளங்களுக்கிடையில் காணப்படும் இடைவெளி நான்கு மடங்கு அல்லது ஐந்து மடங்காக உள்ளதெனின் அந்த இடைவெளி தனியார் துறைகளில் பத்து மடங்குக்கும் கூடுதலாகவே உள்ளது.

இலங்கையின் வருமானப் பகிர்வில் காணப்படும் ஏற்றத்தாழ்வு பற்றிய ஆய்வறிக்கைகளின்படி, மிகக் கீழ் நிலையில் உள்ள 20 சதவீதமானவர்கள் நாட்டு மக்களின் மொத்த வருமானத்தில் 4.5 சதவீதத்தையும், அடுத்த 20 சதவீதத்தினர் 8.0 சதவீதத்தையும், அதற்கு மேலுள்ள 10 சதவீதத்தினர் 5.5 சதவீதத்தையும் பெறுகின்றனர். இவ்வாறாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீதமான மக்கள் மொத்தத்தில் 18 சதவீத வருமானத்தை மட்டுமே பெறுகின்றனர். இவ்வகையில், 2019இன் இறுதி அல்லது 2020இன் ஆரம்ப நிலையைப் பார்த்தால், நாட்டின் அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கிய ரீதியில் கீழ்மட்ட நிலையில் உள்ள 50 சதவீமானவர்களின் மாதாந்த வீட்டு வருமானம் சராசரியாக சுமார் 36000 ரூபா என்ற அளவிலேயே உள்ளது. மேலும் குறிப்பாக நோக்கின், கிராமங்களிலுள்ள 50 சதவீமான குடும்பங்களினதும், நகரப்புறங்களிலுள்ள 30 சதவீதமான குடும்பங்களினதும் மாதாந்த வருமானம் அதற்கும் குறைவாக உள்ளதையே அரசின் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கைவாழ் குடும்பம் ஒவ்வொன்றும் பணரீதியாக மற்றும் பொருள்ரீதியாக பெற்ற வருவாயை, இலங்கை அரச நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள், வருமானப் பங்கீட்டு கணிப்பீடுகள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் அண்ணளவாக அனுமானிப்பின்:-

கிராமப் புறங்கள் மற்றும் பெரும் தோட்டத்துறை பிரதேசங்களில் வாழும் குடும்பங்கள் ஒவ்வொன்றினதும் மொத்த மாதாந்த வருமானம் பின்வருமாறு அமைகிறது:-

  1. மிகக் கீழ்நிலையில் உள்ள 10 சதவீதத்தினரின் தற்போதைய மாதாந்த வீட்டு வருமானம் சராசரியாக சுமார் 18000 ரூபாவாகவும்:
  2. அடுத்த 10 சதவீதத்தினரின் சராசரி மாதாந்த வருமானம் ரூபா 22500 ஆகவும்:
  3. அடுத்த 10 சதவீதத்தினர் சராசரியாக ரூபா 31500 ஆகவும்:
  4. அதற்கு மேலான 10 சதவீதத்தினரின் சராசரி வருமானம் வீட்டு வருமானம் ரூபா 40000 எனவும்:
  5. கீழிருந்து மேல்நோக்கி 5வதாக உள்ள 10 சதவீதத்தினரின் சராசரி வருமானம் 50000 ரூபா எனவும் காணப்படுகின்றது.

இப்போது, இலங்கைக்கான நியாயமான வறுமைக் கோட்டு வருமானம் நியாயப்படி எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இங்கு முன்னர் குறிப்பிட்டவற்றை மீண்டும் கவனத்திற் கொள்வோமாயின், அதாவது, அமெரிக்காவை அடிப்படை உரைகல்லாகக் கொள்ளும் சர்வதேச கொள்வனவு திறன் சமநிலையின்படி இங்கு ஒரு குடும்பம் குறைந்த பட்சம் 110000 ரூபாவை மாத வருமானமாக பெற வேண்டும். அதை விடுத்து, உலக வங்கியின் கணக்குப்படி பார்த்தாலும் கூட இங்கு வறுமைக் கோட்டு எல்லை 78600 ரூபாவாக இருக்க வேண்டும்.

2019ம் ஆண்டில் இலங்கையின் தலாநபர் தேசிய வருமானம் சுமார் 7 லட்சம் ரூபா. அதாவது, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரியானது 28 லட்சம் ரூபா. இதனை மாதக் கணக்கில் பார்த்தால் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபா. ஆனால் இங்கே 20000 ரூபா வருமானத்தை ஒரு குடும்பத்தின் வறுமைக் கோட்டு எல்லையாகக் கணிக்கிறது அதிகாரக் கூட்டம்.

வருமானத்தில் 10 அல்லது 12 சதவீதம் மட்டுமே உணவுக்கான செலவாக உள்ள அதி உயர் வருமான நாடுகளில் பத்தில் ஒரு பங்கு தேசிய வருமான அளவை வறுமைக் கோட்டு எல்லையாகக் கொள்ளலாம். ஆனால், வருமானத்தில் 40 சதவீதமான பங்கை உணவுக்காகச் செலவிடும் இலங்கை போன்ற நாடுகளுக்கு அந்த அளவு கோலைப் பிரயோகிக்கக் கூடாது என்பதனை அதிகாரக் கதிரைகளில் அமர்ந்திருப்போர் தமது அடிப்படையான பொது அறிவாகக் கொள்ள வேண்டும்.

பட்டினி, வறுமை, வறுமைக் கோடு ஆகியனவற்றை இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்ததொரு பிரதானமான விடயத்தை அடுத்த பகுதியில் தொடரலாம்;.

(தொடரும் பகுதி 6 அடுத்ததில்)