காலைக்கதிர் உறவா? எமக்குள் மேலும் பிரிவா?

நண்பர்களின் ஆசியுடன் வடக்கில் வீசப்போகிறது புதிய தினசரி. நட்புக்கு அழகு எந்த நிலையிலும் நண்பனை கைவிடாமை, துணைநிற்றல். அதேவேளை நண்பன் செய்யும் தவறுகளை நேர்மையாக விமர்சித்தல், உரிமையுடன் கண்டித்தல் என்பதுவும் நட்பின் கடமையே. கடந்த காலத்து நிகழ்வுகளை நினைவில்கொள்ளும் எவரும் ஆசியுரை வழங்கி, கல்லூரி நண்பர் செயலை ஏற்புடையது என ஏற்கமாட்டார். பாடசாலை கால்பந்து விளையாட்டில் சாதனை படைத்தவர், நெருக்கடியான காலகட்டத்தில் கூட பத்திரிகை நடத்தியவர் என, அவர்தம் சிறப்பை சிலாகிக்கும் அதே வேளை, கூட இருந்தவர் குழிபறிப்பால் வீழ்த்தப்பட்டார் வித்தியாதரன் என்று கூறுவது சற்று நெருடலான விடயம்.

வித்தியாதரன் தன் மைத்துனருடன் ஆரம்பித்த பத்திரிகை மூலதனம் பற்றிய, பல பதிவுகளின் உண்மை நிலை தெரியாவிட்டாலும், நெருப்பு இல்லாமல் புகையவில்லை என்பது மட்டும், மறுக்க இயலாத விடயமாகும். இறுதிப் போரின்போது போராட்ட குணாம்சம் கொண்ட பத்திரிகையாளரால், மூடி மறைக்கப்பட்ட உண்மையான களநிலவரம் தான் முள்ளிவாய்காலில், பலருக்கு முடிவுரை எழுதிற்று என்பதை எவரும் மறுக்க முடியாது. கிளிநொச்சி வீழ்ந்த பின்பும் அது தந்திரோபாய பின்வாங்கல், உள்ளே வரவிட்டு அடிக்கப்போகிறார்கள், இளையவரே படையணியில் சேருங்கள் என எழுதி, பல இளம் குருத்துகளை களமாட தூண்டியதன் மூலம், காலனுக்கு காவு கொடுத்தனர் எழுத்தாயுத ஜாம்பவான்கள்.

பிரபாகரன் இருக்கும்வரை மாகாண சபை பலருக்கும் கசந்தது. ஆனால் அவரின் மறைவிற்கு பின் முதலமைச்சர் கனவில் மிதந்தது யார் என்பது அனைவரும் அறிந்ததே. லண்டனில் நடந்த சந்திப்பில் அவரே அதை வெளிப்படுத்தினார். மக்களை விழிப்பூட்டவே பத்திரிகை என்ற நிலை மாறி, பாராளுமன்றம் உட்பட அரசியல் பதவிகளுக்கு இலகுவான வழி இது என, பலரும் விரும்பி பூசும் அரிதாரம் பத்திரிகையாளர் எனும் புது அவதாரம். அரசின் தவறான போக்கை விமர்சித்தபோது, தமது தவறுகளை திருத்த முற்படாமல் அந்த பத்திரிகை நிறுவனத்தையே அரசுடமை ஆக்குதல் அல்லது, துணிந்து செயல்பட்ட நடுநிலை பத்திரிகையாளர் கொல்லப்படுதல் கடந்த கால வரலாறு. நடுநிலை நாளேடு என்பது இன்று மனுநீதி சோழன் மணியல்ல.

ஏதோ ஒரு அரசியல் கட்சியின், அல்லது முன்னாள் இயக்கங்களின் பின்னணியில் தான், வடக்கில் இருந்து நாளேடுகள் வெளிவருகின்ற நிலை தொடரும் சூழ்நிலையே, காலைக்கதிர் பதிவேறும் அச்சகம் பற்றிய தகவல் தரும் செய்தி. முன்னாள் போராட்ட அமைப்பால் வெளியிடப்பட்டு வந்த தினசரி பத்திரிகை தற்போது ஏதோ காரணத்தால் நிறுத்தப்பட்டிருக்கும் நிலைமையில், அதன் அச்சகமே காலைக்கதிர் ஒளிவீச தன்னை தாரை வார்த்துள்ளது. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற நோக்கில்தான் புது வரவுக்கு சீர் செய்தததாக அவர்கள் கூறினாலும், சீதனம் தந்த மாமன் பக்கம் மருமகன் பாசம் காட்ட மாட்டார் என்பது யதார்த்தம் இல்லை. எனவே நடுநிலை அம்பேல்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். பத்திரிகைகள் பலது பட்டால் வாசகனுக்கு திண்டாட்டம், அரசியல் தலைமைக்கு தள்ளாட்டம். எந்த செய்தி உண்மை என்பது மட்டுமல்ல, அணி பிரிந்து நிற்கும் தலைமை சார்பாக ஒரு பத்திரிகை எழுக தமிழ் என மக்களை அழைக்க, இன்று விட்டால் சனிக்கு எள் எண்ணெய் எரிக்க முடியாது என, மக்களை குழப்பும் செயலை மற்ற பத்திரிகை செய்த செயலே அண்மையில் நாம் பார்த்த நடுநிலை. இருக்கும் ஆசனங்களை எப்படி பகிர்வது என்ற குடுமிபிடி சண்டையில், எழுத்தாயுதம் எவர் கையிலோ அவர் கை ஓங்குவதும், அதற்கு ஒருபடி மேல் பத்திரிகை உரிமையாளர் தெரிவாவதையும் பார்த்தவர்கள் நாம்.

அன்றைய நிகழ்வில் பேசிய முக்கியமானவர் சூசகமாக ”அன்று நீதிபதிகள் பொது மேடைகளில் பேசுவதில்லை, பத்திரிகை ஆசிரியர் யார் என்ற நேரடி அறிமுகமும் இல்லை. ஆனால் இன்று இரண்டும் நடக்கிறது” என அவர் கூறியது பலருக்கும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது நிச்சயம் புரிந்திருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல பதவி அரசியலுக்கு பத்திரிகை ஒரு பாலம், ஏற்றிவிடும் ஏணி, ஆசனம் கேட்க பயன்படும் ஆயுதம். ஆக அடுத்த தேர்தல் எதுவானாலும், அது மாகாண சபையோ அல்லது பாராளுமன்றமோ ஆசனப்பகிர்வு, காலைக்கதிர் உள்வாங்கப்பட்டே இடம்பெற கூடும். இன்றைய நிலைமையில் இரண்டு அல்லது நான்கு வருடங்களில் தேர்தல்கள் வரும். அதற்குள் சம்மந்தர் சாதித்தால் மட்டுமே நிலைமை மாறும்.

பிரிவினை பேசிய அரசியல்கட்சிகள், பிளவுபட்ட இயக்கங்கள், எதிர்வினை புரியும் பத்திரிகைகள் தாம் இனத்தின் நலன் கருதி செயல்ப்படுவதாய், நடுநிலை வகிக்கப்போவதாய் கூறுபவர்களிடம், எம் இனம் மேலும் மேலும் பிளவு படுவதை தவிர்க்க, வழியேதும் உண்டா என்ற ஆலோசனை கூறாது, தகுதியள்ளதால் தனி வழி பயணிக்கும் உன்வரவு நல்வரவாகுக என்பது நலன் தரும் செயலா? அன்று உன் தகுதி நானறிவேன் என்று ஏகலைவன் கை கட்டைவிரலை, துரோணர் தன் குரு தட்சணையாக கேட்டிராவிட்டல், அதன் பின்பு நடந்த பாரதபோரில் துரியோதனன் சார்பில் அருச்சுனனை எதிர்த்து ஏகலைவன் வில் ஏந்தி இருந்தால், எத்தனை முறை கிருஷ்ணன் தன் கால் கட்டை விரல் கொண்டு தேரை கீழ் அழுத்தவேண்டி வந்திருக்கும்?

தனது வாழ்த்துரையின் இறுதியில் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்கிறார் வித்தியாதரன் கற்ற கல்லூரி வாருதி. என்வரையில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் பிளவுகள் கூடினால் தீராது எம்மவரை பீடித்த பேரினவாத துயர் என்பதே எனது ஆதங்கம். கொடி குடை ஆலவட்டம் கொண்டு ஆட்சி புரிந்த அரசர் காலத்து பிரிவினை, கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என சோழ பேரரசை போற்றி புகழும் வரலாற்று பதிவுகள் தவிர, சேர சோழ பாண்டிய பல்லவர் கால மோதல் நிகழ்வுகள் இன்றும் ஈழத்து மண்ணில் அரங்கேறும் காலத்தில், காலைக்கதிர் கூட அந்த பாதையில் பயணித்தால் மீட்சி இல்லை எமக்கும், எம் இனத்துக்கும் என எதிர்வு கூறும் நிலையில், என்போல் பலர் இருப்பதே யதார்த்தம்.

(ராம்)