சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!

(எஸ். ஹமீத்)

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னம் ஜெயலலிதாவின் சமாதியில் ஆக்ரோஷமாகக் கையால் அடித்துச் சபதம் செய்து, அஞ்சா நெஞ்சினளாகத் தன்னைக் காட்டிக் கொண்ட சசிகலாவை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. ஆறு கொலைகளைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சயனைடு மல்லிகாதான். அதுசரி…யார் இந்தச் சயனைட் மல்லிகா…?

சயனைட் மல்லிகாவின் சொந்தப் பெயர் கெப்பம்மா. வயது 52 . இந்தியாவின் முதல் பெண் சீரியல் கில்லர். பெங்களூருவில் உள்ள கலாசிபாளையத்தைச் சேர்ந்தவர். கெப்பம்மா நடத்திய சீட்டு கம்பெனி தொழிலில் நஷ்டம் ஏற் பட்டதால் இவரது கணவர் இவரை விட்டு ஓடிவிட்டார். அதன் பின்னர் தன்னிடம் சீட்டுப் பணம் கட்டியவர்களுக்குப் பயந்து கோயில்களில் தஞ்சமடைந்து மறைந்து வாழ்ந்து வந்தார் கெப்பம்மா.

எத்தர்களுக்கும் ஏமாற்றுக்காரர்களுக்கும் இருக்கவே இருக்கிறது சாமியார் வேஷம். கெப்பம்மாவும் ஒரு சமயத்தில் காவி உடை அணிந்து சாமியாராகி வலம் வரத் தொடங்கினார்.

சாமியாரிணி கெப்பம்மாவுக்கு அதிக அளவில் பெண் பக்தர்கள் குவிந்தனர். தனது பக்தர்களில் பணக்காரப் பெண்களாகப் பார்த்துக் குறி வைத்தார் கெப்பம்மா. அவர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களின் வீடு வரை சென்று வந்தார். வீட்டில் சிறப்புப் பூஜைகள் செய்வதாக நடிப்பார். பின்னர் தீர்த்தமென்று சொல்லித் தண்ணீரில் சயனைட் எனும் கொடிய நஞ்சைக் கலந்து கொடுத்துத் தனது பெண் பக்தைகளைக் கொலை செய்வார். அதன் பின்னர் அந்த வீட்டில் இருக்கும் நகை, பணம் எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டு, தனது இடத்தை இன்னோர் இடத்துக்கு மாற்றிக் கொள்வார்.

இவ்வாறு சயனைட் கலந்து கொடுத்து பெங்களூருவில் மட்டும் ஆறு பெண்களைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துள்ளார் கெப்பம்மா. இறுதியாக ,பீனியா என்ற பகுதியில் மல்லிகா என்று தனது பெயரை மாற்றிக் கொண்ட கெப்பம்மா ஒரு பெண்ணைக் கொலை செய்துள்ளார். இதன்பிறகே இவருக்கு ‘சயனைடு மல்லிகா’ என்ற பெயர் வந்தது.

2006-ல் போலீஸாரிடம் சிக்கிய மல்லிகா வுக்கு 2010-ல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் 2012-ல் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன்பின் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

பரப்பன அக்ரஹாரா சிறையின் பெண்கள் பகுதியில் சயனைட் மல்லிகா வைத்ததே சட்டம். அதிகமான பெண் கைதிகள் அங்கே இவரது அடிமைகளாகவே இருக்கிறார்கள். மல்லிகா ‘எள்’ என்று சொன்னால் அவர்கள் ‘எண்ணெய்யாக’ வந்து நிற்கிறார்கள்.

இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, முதலில் சயனைட் மல்லிகா பற்றிப் பெரும் பயத்துடனேயே இருந்துள்ளார். எனினும் சயனைட் மல்லிகாவை ஒருவாறு சசிகலா தரப்பு வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது. வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் அளவில் சயனைட் மல்லிகாவுக்குக் கொடுப்பனவு வழங்க முடிவாகியிருக்கிறதாம்.

மல்லிகாவின் அடிமைகளாக இருக்கும் பெண் கைதிகள் சசிகலாவுக்கும் இளவரசிக்கும் தேவையான பணிவிடைகளைக் குறைவின்றிச் செய்து வருவதால் தற்போது சிறையில் சசிகலா எவ்விதக் குறைகளுமின்றி ஒரு மகாராணி போல் வாழ்வதாகக் கூறப்படுகிறது.