சுறுக்கர் என்ற நடு நிலையாளர்

இலக்கியத் தளத்தில் தனக்கான பாதையமைத்துப் பயணித்த ஆளுமை. சிறுகதை எழுத்தாளர். சஞ்சிகையின் முன் அட்டையில் ஓவியம் ஒன்றைபதிப்பித்து ஓவியர்களை ஊக்கிவித்தவர்.

கலை இலக்கிய சமூக ஆளுமைகளுடனான தொடர்பாடல்கள் நேர்காணல்கள் என தனது செயற்பாடுகளை இடையறாது செய்தவர்.

அவற்றை பதிப்புகளாக வெளிக் கொணர்ந்தவர். அதன் தொடர்ச்சியாக புத்தகங்களை பதிப்பித்து வெளியிட்டுதல் என்ற பதிப்பகச் செயற்பாடுகளில் கால் பதித்து பயணத்தை தொடர்ந்தவர்.

இலங்கையின் நடைபெற்ற யுத்தம் காரணமாக மேற்குலகிற்கு புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் இந்த இலக்கியச் செய்பாடுகள் மற்றைய நாடுகளையும் விட ஐரோப்பாவில் அதுவும் பிரான்ஸ் இல் அதிகம் உள்ளதாக உணருவதை சுறுக்கரும் நிறுவி இருந்தார்.

நேரடி அறிமுகம் இல்லை. எழுத்துக்களால் அவரின் உறவுகளால் அறிமுகமானவர்.

அவரின் சகோதரர்கள் மைத்துனர் குடும்பத்தினர் எனது மதிப்பிற்குரியவர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு முக நூல் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு நடு இதழுக்கு சில கட்டுரைகள் எழுதித்தருமாறு கேட்டிருந்தார். பொதுவாக யாரும் என்னிடம் இவ்வாறு கேட்பது குறைவு. கூடவே இதழ் பற்றி விமர்சனத்தையும் கேட்டிருந்தார் வழமை போல் மறுக்காது ஒப்பும் கொண்டேன்.

ஆனால் எனக்கு இருந்த வேளைப் பழுக்கள் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. அவர் என்னிடம் இந்தக் கோரிக்கையை வைத்த போது எனது பதிவுகள் பற்றி விமர்சனத்தை செய்வதற்குரிய ‘இலக்கிய ஆசான்’ இடத்தில் உள்ளீர்கள் என்பது போன்ற பதிலுரைக்கு தன் அடக்கமாக எம்மையும் ‘இலக்கிய ஆசானாக’ பதிலுரைத்தார்.

மேலும் எனது போராட்ட அரசியலைத் தாண்டியும் ஆக்கங்களை கேட்கும் தற்துணிவு அதனை நடு இதிழில் பதிவு செய்வதற்குரிய சிந்தனை இவரிடம் எவ்வாறு ஏற்பட்டது என்று எண்ணிக் கொண்டேன்.

நடு என்ன இலக்கியத் தளத்தால் பலராலும் அறியப்பட்டவர். பல முற்போக்கு மக்கள் இலக்கியங்களை இணைக்கும் ஒரு ஒற்றைப் புள்ளியாக செயற்பட்டவர்.

இலத்திரனியல் ஊடகங்களில் ஆதிகம் உள்ள காலத்தில் சஞ்சிகை ஒன்றை தொடர்ந்து பதிப்பாக கொண்டுவருவது என்பது எவ்வளவு கஷ்டமானது என்பது பலருக்கும் தெரியும். பலரும் இதனைத் தொடர முடியாமல் நிறுத்திக் கொண்ட வரலாற்றை நாம் பார்த்தும் இருக்கின்றோம்.

அது போன்ற சஞ்சிகளைகளை நடாத்துபவர்களுக்கு தெரியும் அதுவும் தரமான ஓவியம், இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை என்று உலகெங்கும் பரந்திருக்கும் பலரையும் இணைத்து ஒரு புள்ளியிற்கு கொண்டு வருவதில் வெற்றி கண்டவர்.

அரசியல் அடையாளங்களுக்கு அப்பால் கருத்துக்களால் பலரையும் இணைக்கலாம் என்பதில் வெற்றியை நிறுவியவர்.

நடு இதழ் தனது 50 இதழ்களை கடந்து பயணப்படுகின்றது என்பது ஒரு மிகப் பெரிய சாதனைதான்.

இதன் மூலம் எல்லோராலும் நேசிக்கப்பட்ட நடு நிலையாளர் என்ற விம்பத்தை பெற்றுக் கொண்டவர். ஆனாலும் அவருக்குள் ஒரு வர்க்கம் சார்ந்த அரசியல் இருந்து கொண்டுதான் இருந்தது.

அது விளிம்பு நிலை மக்களின் பால்… குரலற்றவரகளின் பால் என்று அவரது செயற்பாடுகள்… இலக்கியச் செயற்பாடுகளில் வெளிவந்தன.

நடு என்ற இலக்கிய சஞ்சிகையை தொடர்ந்து கொண்டுவருவதில் அவருக்கிருந்த ஆர்வம் அவரது இடையறாத் செயற்பாடு தொடர்ந்து கொண்டிருந்து. இதனை தொடர வேண்டும் என்ற தனது திட்டங்களை சில தினங்களுக்கு முன்னர் தாயகத்திற்கு சென்ற போது பலரிடமும் கதைத்தும் இருக்கின்றார்.

சமூக வலையத்தில் அவரின் ஒரு வரிச் செய்திகள் அவரிடம் இருக்கும் வாழ்க்கை கொண்டாட்டத்திற்குரியது என்பதையும்… நகைசுவை உணர்வையும் எடுத்தியம்பி நின்றன.

அண்மையில் தாயகத்தில் அவர் நின்றபோது அவர் இட்ட இந்த ஒரு வரிச் செய்திகளும் அதனுடன் இணைந்து புகைப்படங்களும் அதற்கு சான்று பகிர்கின்றன.

அவைகளில் சில….

‘காணும் மோனை சுறுக்கரின் நடைப்பயிற்சி’ என்று நத்தைகளை புகைப்படம் பிடித்ததாக….

‘சுறுக்கரின் வருகையை கண்டு பருத்தித்துறை குதூகலித்த பொழுது’ என்று பருத்தித்;துறை மழையை ஒளிப்பதிவு செய்த பதிவாக…

‘சுறுக்கர் புளி வியாபாரத்துக்கு றெடி’ வெயிலில் காயவைத்து புளியை காயவைக்கும் புகைப்படமாக….

‘சுறுக்கர் சுறுட்டுக்காய் பொயிலையை (கட்டி) தூக்கின நேரம்’ என்று பொயிலையை மதில் மேல் விரித்து உணத்தும் புகைப்படமாக….

‘சுறுக்கர் தோட்டத்தில் களையெடுத்த பொழுது’ அரைக் காற்சட்டையுடன் குனியாது வiளாது களை எடுக்கும் அழகாக…

‘அப்புவும் சுறுக்கரும் கூவில் கொட்டிலில் கூடியபொழுது…” என்று அந்த கூவில் கள்ளையும் விட்டுவவைக்காத புகைப்படங்களாக…

என்று இவற்றிற்கு பொருத்தமான தனது தாயகத்து வாழ்வின் புகைப்படங்களையும் இணைத்தும் இருப்பார்

குழந்தை போன்ற தோற்றத்திற்குள் ஒரு இலக்கிய முதிர்ச்சியை ஆளுமையை நான் கண்டும் இருக்கின்றேன்.

பெயருக்கு எற்றவாறு தாயகம் சென்று பிரான்ஸ் திரும்பும் ‘நடு’வில் அவர் மாரடப்பினால் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டது வருத்தத்தை அளிக்கின்றது. இன்னும் செயற்பட்டிருக்க வேண்டி சமூதாயக் கடமைகள் அவருக்குண்டு. அந்த வகையில் இந்த இழப்பு பேரிழப்புத்தான்.

அவர்களின் உறவுகளை தாயகம் சென்ற போது நான் சந்திப்பதுண்டு. அது வட கோவை வரதராஜன், தேசிகன் என்று ஒரு பட்டியலாக நீளும். நான் வாழும் புலம் பெயர் தேசத்தில் தோழர் வளவனுடன் உறவுகளும் உண்டு.

அந்த குடுபத்துடனான என் உறவு நீண்ட வரலாற்றையும் கொண்டது. அது இந்தியாவின் தமிழ்நாடு வரை விரிந்தது பரந்தது தோராயமாக நாற்பது வருடங்களுக்கு மேலாக நட்பாக தோழமையாக போராட்டக்கரர்களாக விமர்சகர்களாக ஏன் என் உறவினர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் செம்மண் பிரதேசத்தவராக எனக்குள் ஏற்படுத்தி வந்திருக்கின்றது.

முரண்பாடுகளுடன் உடன்பாட்டையும் கொண்டு பயணப்படும் உறவாகவும் விரிந்து சென்றாலும் அவர்களில் ஒருவனாக என்னையும் உணர வைக்கும் எழுத்தாற்றல் அவர்களின் குடும்பத்து மரபணுவில் உள்ளதாக பல தடவை எனக்குள் உணர்வதுண்டு.

அதுதான் சுறுக்கரையும் நடு என்ற இலக்கியத் தளத்தில் உலகெங்கும் கிளை பரப்பி வருட்சமாக தளைக்க வாய்ப்பை ஏற்படுத்தியது.

எழுத்து…. பொதுவாழ்வு… பேச்சு…. சமூக சேவை என்ற எல்லாப்பரப்பிலும் சுறுக்கருக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் ஒரு அடையாம் உண்டு சுறுக்கர்.

அவரது இவ்வாறன செய்ப்பாடுகளால் இனிவரும் காலங்களிலும் பேசப்படுவார்.

சென்று வாருங்கள் மரியாதைக்குரிய இலக்கிய ஒருங்கிணைப்பாளர் இலக்கியர் உருவாக்கியே