சோசலிசம்

மனிதர்களாகிய நாம் இயற்கையில் அமைந்த பொருள்களை மாற்றியமைப்பதன் மூலம் மனித வாழ்க்கைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்து கொள்கின்றோம்.இவ் உற்பத்திக்கும், அதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கும் நாங்கள் உழைத்து வழங்கும் பங்களிப்பே நாம் செய்யும் “தொழில்” எனப்படுகிறது. இந்த உற்பத்தி நடவடிக்கைக்கான செலவீனத்திற்கு (மூலப்பொருட்கள், உற்பத்தி சாதனங்களின் தேய்மானம், எமது உழைப்பிற்கான கூலி) மேலதிகமாக ஈட்டப்படும் வருமானம் இலாபம் ஆகும்.

எமது பங்களிப்பினால் ஈட்டப்படும் இலாபத்தை செல்வமாக அபகரித்து வைத்திருக்கும் சிறு பிரிவினர், அந்த செல்வத்தை பயன்படுத்தியே, எமது உழைப்பை விலை கொடுத்து வாங்கி, மீண்டும் மீண்டும் பொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை மீண்டும் எமக்கே விற்று செல்வத்தை பெருக்கி கொள்கின்றார்கள். நாம் எங்கள் பங்களிப்பிற்காக வழங்கப்படும் கூலி மூலம் அவர்கள் விற்கும் பொருட்களில் இயலுமானவற்றை வாங்கி கொள்கின்றோம்.

இலாபத்தின் மீது போராசைக் கொள்ளும் சிறு கும்பல் எதையெல்லாம் விற்க முடியுமோ அதையெல்லாம் புதிதுபுதிதாக கண்டு பிடித்து உற்பத்தி செய்கின்றார்கள், குறைந்த கூலியில் அதிக வேலை வாங்குகின்றார்கள். எல்லாவிதமான உத்திகளையும் கையாண்டு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க தூண்டுகிறார்கள். இதுவே நாம் தற்போது வாழும் முதலாளித்து பொருள் உற்பத்தி நிலவும் சமூகமுறையாகும்.

மோசடியான இந்த பொருள்உற்பத்தி முறைக்கு பதிலாக….

பொருளுற்பத்திக்கு தேவையான சகலதையும் இந்த சிறு கும்பலிடமிருந்து பறித்தெடுத்து, அவற்றை முழுசமூகத்திற்கும் பொதுவானதாக்கி, உற்பத்தியை திட்டமிட்டு மனித தேவைக்கு ஏற்ப நிகழ்த்தும் சமூக பொருளாதார முறைமையே சோசலிசம் ஆகும்.

உற்பத்தி மூலம் பெறப்படும் இலாபத்தில் தேவையான அளவு உழைத்தவர்களுக்கு பகிரப்பட்ட பின், எஞ்சிய இலாபம் முழுவதும் முழு சமூகத்திற்கான நலன்புரி சேவைகளுக்கும், உற்பத்தி வளர்ச்சிக்கும், முழு சமூகத்தின் அபிவிருத்திக்கும் திட்டமிட்டு செலவுசெய்யப்படும்.

எனவே, இங்கு உழைப்பு சுரண்டல் இல்லதொழிக்கப்படுவதுடன், மக்களை சுரண்டி இலாபம் உழைப்பதற்காக முதலாளித்துவம் உருவாக்கிய அனைத்து சீரழிவு பண்பாடுகளும் ஒழிக்கப்பட்டு, உயர்ந்த மானுட வாழ்வுக்கான பண்பாடுகள் கட்டியெழுப்பப்படும்.மனித வாழ்வை மிக உயர்வான விழுமியங்களுடன் வாழ்வதற்கான மகிழ்ச்சிகரமான மனித வாழ்வியல் நிலைமைகள் உருவாகும்.