‘தாய்வான், தனிநாடாக பிரிவதற்கு அனுமதியோம்’

சாப்தத்துக்கு இரண்டு தடவைகள் இடம்பெறும், சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தமது நாட்டிலிருந்து தாய்வான் பிரிவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என, உறுதியாக அறிவித்துள்ளார். பெருத்த எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த இந்த மாநாட்டில், நாட்டைக் கொண்டு செல்வதற்கான தனது தூரநோக்குப் பார்வையை, ஜனாதிபதி ஸி வெளிப்படுத்தினார். ஏறத்தாழ மூன்றரை மணித்தியாலங்கள் நீடித்த உரை, பல்வேறு விடயங்கள் பற்றியும், தனது கவனத்தைச் செலுத்தியிருந்தது.

நவீனமயப்படுத்தப்பட்ட சோசலிச நாட்டை, 2035ஆம் ஆண்டுக்கு முன்னர் உருவாக்குவதே, தனது நோக்கம் என, அவர் இங்கு குறிப்பிட்டார். சீனா, தனது அங்கம் எனக்கூறிவரும் சீனா, அந்நாட்டின் சுயாட்சியை மறுத்துவருகிறது. “ஒரே சீனா” என்பது, அதன் கொள்கையாகும். அதையே இங்கு வெளிப்படுத்திய ஜனாதிபதி ஸி, எந்தவொரு தீவும், சீனாவிலிருந்து வெளியேறுவதை அனுமதிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

அதேபோல், ஊழலை ஒழிப்பதற்காக தான் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்தும் கவனஞ்செலுத்திய அவர், கட்சி எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக, ஊழலே காணப்படுகிறது என்றும், அதை ஒழிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அவரது இந்த நிலையில், சீனாவின் இராஜதந்திரத் தோழமை நாடாக இருந்தும், அண்மைக்காலத்தில் சீனாவின் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ள வடகொரியா பற்றி, கருத்தெதனையும் அவர் தெரிவித்திருக்கவில்லை. அதேபோல், தனியான, புதிய திட்டங்கள் எவற்றையும் அவர் முன்வைத்திருக்கவில்லை. மாறாக, பொதுவான, மேலோட்டமான உரையாகவே இது அமைந்திருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடு, ஒரு வாரத்துக்கு இடம்பெறும் என்பதோடு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சீனாவை ஆளும் செயற்குழுவை, இம்மாநாடே தெரிவுசெய்யும். 64 வயதான ஸி ஜின்பிங், இதன்போது தனது ஆதரவை நிலைநிறுத்தி, 2022ஆம் ஆண்டுவரை தனது ஆட்சியை நீட்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.