அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக உள்ளீர்ப்பு!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 25 வருட கால வரலாற்றில் இத்தொழிற்சங்கத்தின் மத்திய குழுவுக்குள் முதல் தடவையாக வட மாகாண உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொதுச் செயலாளராக முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை சேர்ந்த எஸ். சற்குணராசா நியமிக்கப்பட்டு உள்ளதுடன் இணைத் தலைவர்களில் ஒருவராக கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தை சேர்ந்த ஏ. புண்ணியமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தை சேர்ந்த ஜோன்சன் கென்னடி அதியுயர்பீட சபை உறுப்பினர்களில் ஒருவராகவும், முல்லைத்தீவில் துணுக்காய் பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற கே. அன்ரனி சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவராகவும், வவுனியாவை சேர்ந்த தேவகிருஷ்ணன் ஊடக ஆலோசகர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
இது தொடர்பாக இச்சங்கம் விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ள விடயங்கள் வருமாறு:-

எமது சங்கத்தின் வருடாந்த பொது கூட்டத்தில் வைத்து எஸ். லோகநாதன் தலைவராக தொடர்ந்து செயற்படுவதற்கு உறுப்பினர்களால் ஏற்கனவே ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இருப்பினும் இத்தொழிற்சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களும், இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களும் சேர்ந்து தலைமைத்துவ நெருக்கடிகளை கடந்த சில மாதங்களாக ஏற்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் எமது சங்கத்தால் கடந்த போயா விடுமுறை தினத்தில் விசேட பொது கூட்டம் நடத்தப்பட்டு தலைவராக எஸ். லோகநாதனே தொடர்ந்து செயற்பட வேண்டும் என்று ஏக மனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதாவது எஸ். லோகநாதன்தான் எமது சங்கத்தின் தலைவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன் எமது சங்கத்தின் செயற்பாடுகளை இடையூறுகள் எவையும் இன்றி மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக புதிய நிர்வாகிகள் சபையும் தெரிவு செய்யப்பட்டது. அத்துடன் எமது சங்கத்தின் யாப்பை திருத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

எமது சங்கம் கல்முனையை தலைமையகமாக கொண்டு செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது சங்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் வட மாகாணத்தை சேர்ந்த தோழர்கள் ஆவர். மேலும் எமது சங்கத்தின் செயற்பாடுகளில் வட மாகாணத்தை சேர்ந்த தோழர்களே கூடுதல் அக்கறையும், அதிக ஈடுபாடும் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. எமது சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாணத்தை சேர்ந்த தோழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இவர்களின் மிக நீண்ட கால கோரிக்கையாகும். இவர்களின் இக்கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பதற்கான தருணம் தற்போதுதான் கனிந்த நிலையில் அன்றைய விசேட பொது கூட்டத்தில் வைத்து மத்திய குழுவுக்கு அரைவாசி பேர் வரையானோர் வட மாகாணத்தில் இருந்து தெரியப்பட்டனர். எமது சங்கம் வடக்கு – கிழக்கு இணைப்பில் அன்று முதல் இன்று வரை பற்றுறுதியாக இருந்து உறுதியாக செயற்பட்டு வருகின்ற நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு இணைந்த எமது மத்திய குழு அரசியல் விழிப்பூட்டுகின்ற ஒரு முன்னுதாரணம் ஆகும். அத்துடன் தலைவர் எஸ். லோகநாதன் பிரதேசவாதியோ, சர்வாதிகாரியோ, கொடுங்கோலரோ அல்லர் என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

எமது சங்கத்தின் நிர்வாக ஆலோசகராக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவும், சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவராக நீர்ப்பாசன திணைக்களத்தின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் அறிய தருகின்றோம்.
இத்தெரிவுகளுக்கு பின்னர் எமது மத்திய குழு அடுத்த மாதம் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கல்முனை சன சமாச மண்டபத்தில் முதன்முதலாக கூடுகின்றது. அக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பலவும் எடுக்கப்பட உள்ளன.