நீராதாரங்களையும் விவசாயத்தையும் நோக்கி பார்வையைத் திருப்புவோம்!

தமிழகம் வரலாற்று வறட்சியை எதிர்கொண்டுவருகிறது. பருவ மழை பொய்த்ததன் விளைவாகக் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. மாநிலத்தின் முக்கியமான நீர்நிலைகள் வறண்டதால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வயல்கள் வறண்டதன் விளைவாக ஏற்பட்ட தொழில் பாதிப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் மரணத்துக்கு வழி வகுத்தது. தங்கள் துயரங்களைப் பேச ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட வடிவத்தைக் கையில் ஏந்திக் களத்தில் நிற்கிறார்கள் அவர்கள்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி, ஆய்வுசெய்தது. வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியது தமிழக அரசு. ஆனால், பலன் ஏதும் இல்லை. அரசியல்வாதிகள் கவனிக்காத நிலையில், இப்போது டெல்லிக்குச் சிறு சிறு குழுக்களாகச் சென்று தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள் விவசாயிகள்.

தமிழக அரசு பெயரளவில் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி. நெல் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரிப் பயிர்களுக்கு ரூ. 3 ஆயிரம், நீண்ட காலப் பயிர்களுக்கு ரூ.7,287, பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் அளவுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் இது. இன்னும், ‘விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரித் தள்ளுபடி; கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை மத்திய காலக் கடன்களாக மாற்றியமைத்தல்; வேலை உறுதித் திட்டத்தின் கீழான, 100 நாட்கள் பணி வரம்பை 150 நாட்களாக உயர்த்துதல்; வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை’என்றெல்லாம் பேசப்படுகின்றன.

நீராதாரங்கள் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில், குடிமராமத்து முறை மீட்டெடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. நீர்வள மற்றும் நிலவளத் திட்டங்களைச் செயல்படுத்த நிதிநிலை அறிக்கையில் ரூ.4,791 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகளைத் தூர்வாரி மேம்படுத்துவதில் அரசு தீவிரக் கவனம் செலுத்தும் என்று தொடர்ந்து பேசிவருகிறார்கள் முதல்வரும் அமைச்சர்களும். ஆனால், இவையெல்லாம் போதவே போதாது.

விவசாயம் தொடர்பிலான அரசின் பார்வையே மாற வேண்டியதன் அவசியத்தை இந்த வறட்சி நமக்கு உணர்த்துகிறது. நீராதார மேம்பாட்டிலும் சிக்கன நீராள்கையிலும் நமது முழுக் கவனத்தையும் திருப்ப வேண்டிய தருணம் இது.

(தி இந்து)