ஹொம்ஸ் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள், போராளிகள் வெளியேற ஆரம்பித்தனர்

சிரிய அரசாங்கத்துடனான, ரஷ்யாவினால் ஆதரவளிக்கப்பட்ட ஒப்பந்தமொன்றின் கீழ், ஹொம்ஸிலிலுள்ள இறுதி நிலையிலிருந்து, எதிரணியினரும் அவர்களின் குடும்பத்தினரும், நேற்று முன்தினம் (18) வெளியேற ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமும் வெளியேறுதலைக் கண்ட ஒருவரும் தெரிவித்துள்ளனர். இவ்வாறான வெளியேறுதல்களில், பாரியதொன்றாக இது காணப்படும் என நம்பப்படுகிறது.

மேற்படி ஒப்பந்தமானது, போரில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் கொண்டிருக்கும் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக தாம் போரிட்ட பகுதிகளிலிருந்து, ஒப்பந்தங்களின் கீழ், எதிரணிப் போராளிகள் வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அசாட்டுக்கெதிரான எதிர்ப்பு ஏற்பட்ட ஆரம்ப இடங்களிலொன்றான ஹொம்ஸின் அல்-வயேர் மாவட்டத்திலிருந்து பஸ்கள் வெளியேறுவது அவதானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், துருக்கியினால் ஆதரவளிக்கப்படும் போராளிகள் உள்ள, அலெப்போவின் புறநகரான ஜரபிளஸுக்கு பஸ்கல் செல்லும் எனக் கூறியுள்ளது.

இந்த வெளியேற்றம் பூர்த்தியடையும்போது, போரின்போது சிரிய மாவட்டமொன்றில் நிகழ்த்தப்பட்ட பாரிய வெளியேறமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்-வயேரில், 40,000 பொதுமக்களும் 2,500 போராளிகளும் இருப்பர் என மதிப்பிடப்படுகிறது.

குறித்த ஒப்பந்தத்தின் கீழ், 10,000 தொடக்கம் 15,000 வரையான எதிரணியினரும் பொதுமக்களும், தொகுதிகளாக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குறைந்தது 400 போராளிகள் உட்பட 1,500 பேர் வரையானோர், அலெப்போவுக்கு வடகிழக்காகவுள்ள பகுதிகளுக்கு, நேற்று முன்தினம் (18) வெளியேறியதாக, ஹொம்ஸ் ஆளுநர் தலால் பராஸி தெரிவித்துள்ளதுடன், பெரும்பாலான அல்-வயேர் வாசிகள் தங்கியிருப்பர் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

மேற்படி வெளியேற்றத்தை, சிரிய அரேபிய செம்பிறைச் சங்கமும் ரஷ்யாவும் சிரியப் படைகளும் மேற்பார்வை செய்வதாகத் தெரிவித்த பராஸி, வெளியேற்றத்துக்கு ஆறு வாரங்களலவில் செல்லும் என எதிர்பார்பதாகக் கூறியுள்ளார்.