யார் யாரிடமெல்லாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்!

புலம்பெயர்ந்து வாழும் நம்நாட்டுக் கவிஞர் ஒருவரின் பேட்டியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு என்று வெளிநாடுகள் கொடுக்கும் உதவிகளை இலங்கை அரசு துஷ்பிரயோகம் செய்துவிடும் என்பதால், உதவிகள் எவையும் வழங்கப்படக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் அவர்.
அதிர்ச்சியாக இருக்கிறது. புலம்பெயர்ந்த தேசங்களில் வளமான பொருளாதார வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, இங்குள்ளவர்களுக்கு எந்த உதவிகளும் செய்ய வேண்டாம் என்று வெளிநாடுகளுக்குச் சொல்வதில் எந்தக் குற்றவுணர்ச்சியும் கவிஞருக்கு எழவில்லை. இங்குள்ள தமிழர்களுக்காகக் கவலைப்பட்டு, அரசியல்ரீதியாக ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவக் கருத்தைத் தான் சொல்வதாகவே அவர் கருதிக்கொள்கிறார். அவ்வாறு சொல்ல முடியும் என்றும் அவர் நினைக்கிறார்.

இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு எதுவும் கிடைக்கச் செய்யாது, எனவே தமிழ்மக்களுக்குச் செய்வதாக நினைத்துக்கொண்டு இலங்கைக்கு எந்த நாடும் உதவிகளைச் செய்துவிடக் கூடாது என்று பராதிப்பட்டுத் தடைபோட ஒருவருக்கு எத்தகைய தமிழ்ரோசம் இருக்க வேண்டும்! இங்குள்ள தமிழ்மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பஞ்சப் பராரிகளாகக் கஷ்டப்படுவார்களே தவிர, இந்த அரசிடமிருந்து ஒரு பிடி சோற்றையோ வீட்டையோ வேலையையோ பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இப்போதும் வெளியிலிருந்து கொண்டு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.தாய்நாட்டின் மீதான அவரது அக்கறை அத்தோடு முடியவில்லை. இனிவரும் தமிழ்ப் போராட்டம் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றியும் அப்பேட்டியில் சொல்லியிருக்கிறார். இனிவரும் போராட்டம் உலகெங்குமுள்ள அனைத்துத் தரப்பு தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும். புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் ‘உணர்வுத் தோழமை‘ என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியில் தோள் கொடுக்க வேண்டும்.

அத்தோடு இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் ஓட்டுரிமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் இருக்க வேண்டும் என்கிறார். பத்து லட்சம் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் சூழலில் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் எனில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது அவரது கருத்தாக இருக்கிறது.

இங்குள்ள மக்களின் கஷ்ட நிலைமைகளை மாற்றுவதற்கு எதுவும் செய்துவிடக் கூடாது. அதேசமயம், வெளிநாடுகளிலிருந்து கொண்டே இங்கு நடைபெறும் தேர்தல் சதுரங்க விளையாட்டில் பங்குகொள்ளும் வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவே இருக்கிறது புலம்பெயர்ந்தோர் எண்ணம் என்றால்… என்ன சொல்லித் தேறுவது!

சாதாரண மக்களின் வாழ்வுக் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளாது அல்லது பொருட்படுத்தாது இங்கிருந்து அரசியல் செய்பவர்களால் பட்டுக்கொண்டிருப்பதே போதும் என்றிருக்க, வெளிநாடுகளிருந்து கொண்டும் “விடுதலைக்காக எமது மக்கள் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவார்கள்” என்று வீர அரசியல் நடத்த ஆசைப்படுவதை எப்படித் தாங்கிக் கொள்வது?
இதெல்லாவற்றையும் விட கவிஞரின் கடைசிப் “பஞ்ச்”தான் ஈழத்தமிழ் மாதரசி செய்த தவம் என்று சொல்லத்தக்க விசேஷம்! பிரபாகரன் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு ஒரு ‘மல்டிபிள் சொய்ஸ் கேள்வி’ மூலமாக பதில் சொல்கிறார் அவர்.

பிரபாகரன் இருக்கிறார். திரும்பிவருவார்.
இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
கனத்த மௌனம்.
மேற்கூறிய யாவையும் சரி.
– இந்த ஐந்து பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன். என்று அந்தப் பேட்டியை முடித்திருக்கிறார்.

மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பொறுப்பற்றதனத்தை பச்சையாக வெளிக்காட்டும் பதில் இல்லையா இது! இவ்வளவு விளையாட்டுத்தனமாகவா எமது மக்களின் வாழ்வைக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள் கவிஞர்களும், எழுத்தாளர்களும், படித்தவர்களும்?

(தினமுரசு, 14.02.2012)