ஹாட்ரி இஸ்மாயில் (Qadri Ismail) காலமானார்!

இந்த யுத்தம் ஆரம்பிப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக கொழும்பிலிருந்து ஹாட்ரி இஸ்மாயில் என்ற பத்திரிகையாளர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். ஹாட்ரி இஸ்மாயிலின் சிநேகிதரான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கே.சிறிதரன் அவரை என்னிடம் எனது அறைக்கு அழைத்து வந்தார்.வடக்கில் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் முறுகல் நிலை ஆரம்பமாகியதைத் தொடர்ந்து அங்குள்ள நிலைமைகளை அவதானிக்க ஹாட்ரி இஸ்மாயில் பணிபுரிந்த ‘த ஐலன்ட்’ (The Island) பத்திரிகை நிறுவனம் அவரை யாழ்ப்பாணம் அனுப்பி இருந்தது.என்னிடம் அழைத்து வரப்பட்ட ஹாட்ரி இஸ்மாயில் புலிகளின் முக்கிய தலைவர்களில் யாராவது ஒருவரைப் பேட்டி காண விரும்புவதாகத் தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பேட்டி காண்பது சாத்தியமில்லை என்றபடியால் அப்பொழுது புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயாவை ஹாட்ரி இஸ்மாயில் பேட்டி காண விரும்பினார்.மாத்தயா எனக்கும் தனிப்பட்ட முறையில் பழக்கமானவராக இருந்த காரணத்தால் நான் மாத்தயாவைத் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவர் பருத்தித்துறையில் முக்கியமான வேலைகள் காரணமாக நிற்பதாகவும், அவரைச் சந்திப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் எனக்குச் சொல்லப்பட்டது.மாத்தையாவுக்குப் பதிலாக புலிகளின் இன்னொரு முக்கியஸ்தரான லோறன்ஸ் திலகர் வந்து ஹாட்ரி இஸ்மாயிலுக்கு பேட்டி கொடுப்பார் என நான் தொடர்பு கொண்ட புலிகளின் முக்கியஸ்தர் எனக்குக் கூறினார்.

அதன்படி திலகரை எனது அறைக்கு அழைத்து வருவதற்காக நான் திருநெல்வேலியிலிருந்த அவரது மறைவிடத்துக்குப் போனேன். அவரும் வேண்டிய ‘ஃபைல்கள்’ சகிதம் என்னுடன் புறப்படத் தயாரானார்.நாம் புறப்படத் தயாராகுகையில் திடீரென யோகி அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் அப்பொழுது புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட ‘விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’யின் செயலாளர் நாயகமாக இருந்தார். (இந்த முன்னணியின் தலைவராக மாத்தையா வாகரையில் நடந்த அதன் முதலாவது மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

முதலாவது மாநாட்டு அறிக்கையொன்றை மாத்தையா என்னிடமும் கொண்டு வந்து நேரடியாகத் தந்திருந்தார். பின்னர் அந்த முன்னணி பிரபாகரனால் தடை செய்யப்பட்டது. அதற்கு பிரபாகரன் சொன்ன காரணம், போராட்ட களத்தில் நிற்க வேண்டிய 1,000 பேரை மாத்தையா முன்னணி என்ற பெயரில் வீணடிக்கிறார் என்பதாகும்)திலகரிடம் வந்த யோகி அவரை அப்பால் அழைத்துச் சென்று ஏதோ இரகசியமாகக் கதைத்தார்.

பின்னர் என்னிடம் வந்த யோகி, ஹாட்ரி இஸ்மாயிலை எப்படி எனக்குத் தெரியும், அவர் எவ்வாறு யாழ்ப்பாணம் வந்தார், எங்கு தங்கியிருக்கிறார் என என்னிடம் ‘குறுக்கு விசாரணைகள்’ செய்தார். நான் உள்ளதைச் சொன்னேன்.பின்னர் அவர் புலிகளில் யாரும் ஹாட்ரி இஸ்மாயிலைச் சந்திக்கும் நிலையில் இல்லையென்று கூறினார். அதற்கு அவர் சொன்ன காரணம், ஹாட்ரி இஸ்மாயில் ‘ஐலன்ட்’ பத்திரிகையில் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதி வந்தவர் என்றும், கிழக்கு மாகாணத்தில் புலிகளது உறுப்பினர்கள் பலரை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் படுகொலை செய்தபோது அதைத் திரித்து எழுதியவர் என்பதுமாகும்.

பின்னர் யோகி என்னிடம் நான் புலிகளில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் இடையில் எந்த நேரமும் யுத்தம் வெடிக்கலாம் என்றபடியால் அவரை உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும்படி ஹாட்ரி இஸ்மாயிலிடம் சொல்லும்படியும் கூறினார்.நான் ‘வெறுங்கையுடன்’ திரும்பி வந்து ஹாட்ரி இஸ்மாயிலிடம் அவ்வாறே பொய் கூறினேன்.

அவரிடம் நான் புலிகளைச் சந்தித்த விடயத்தைக் கூறவில்லை. ஹாட்ரி இஸ்மாயிலை அழைத்து வந்த சிறீதரனிடம் மட்டும் நடந்த விடயத்தைக் கூறினேன். நான் கூறிய பொய்த் தகவல் ஹாட்ரி இஸ்மாயிலுக்கு ஏமாற்றமாக இருந்தது.வந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியாத அவர், யாழ்ப்பாணம் வரும்போது திறந்திருந்த ஏ-9 வீதியும் மூடப்பட்டுவிட்டதால் பெரும் சிரமங்களுக்கூடே கேரதீவு – சங்குப்பிட்டி பாதையூடாக கொழும்பு திரும்பினார். அவர் கொழும்பு திரும்பும்போது புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே யுத்தம் ஆரம்பித்துவிட்டதால் அதில் சிக்கி சிறு காயங்களுடனேயே கொழும்பு சென்றதாகப் பின்னர் அறிந்தேன்.(பிற்காலத்தில் ஹாட்ரி இஸ்மாயில் அமெரிக்கா சென்று அங்குள்ள மிகப் பிரபலமான சஞ்சிகை ஒன்றில் பணியாற்றியதாக அறிந்தேன்)