19 பிப்ரவரி: எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!

19 பிப்ரவரி என் அத்தை எஸ்.என்.லட்சுமி நினைவு நாள்!

என் அத்தையை நினைவு கூற எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

என்.எஸ்.கிருஷ்ணன் காலம் தொட்டு திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, இருவரும் எதிர் எதிரே ஒருநடிகர் கூட்டத்தை வைத்திருந்து படங்களில் நடித்து வந்த காலத்திலேயே, இருவர் படங்களிலும் நடித்து வந்தவர்.

விவசாயி, தொழிலாளி, தாய்க்குத் தலைமகன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். அம்மா என்றால்..
ராமன் எத்தனை ராமனடியில் சிவாஜிக்கு பாட்டி..!

பணம் பந்தியிலே யில் எஸ்.எஸ்.ஆருடன்..
துலாபாரத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன்
சேர்ந்து நம்மை அழவும் வைப்பார்

ரஜினி, கமல், படங்களிலும் நடித்தார்.
மைக்கேல் மதன காமராஜனின் திருட்டுப் பாட்டியை யாரால் மறக்க முடியும்?

விஐயகாந்த், மம்முட்டி படங்களிலும் இவரைப் பார்க்கலாம்.

இடையில் சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் அனுபவி ராஜா அனுபவி போன்ற பாலசந்தர், நாகேஷ் படங்களில் சிரிக்கவும் வைப்பார்.

அஜித், விஜய் காலத்திலும் தொடர்ந்தார்.

சரவணன் மீனாட்சி, தென்றல், போன்ற தொலைக் காட்சி தொடர்களிலும் கலக்கினார்.

எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்த காலத்திலும்.. இவர் அவர்களிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தார்.

வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை உதவி இயக்குனர்களுக்கும், மற்ற உதவியாளர்களுக்கும் உடைகள் எடுத்துக் கொடுப்பதில் மகிழ்வார்.

எளிமை இவரின் இயல்பு!

ஜெமினியின் சந்திரலேகாவில் ட்ரம்மில் ஆடிய ஒருசில காட்சிகளும்..மகாநதியின் படம் முழுக்க வரும் காட்சிகளும் இவருக்கு ஒன்றுதான்!

புகழோ, பணமோ இவரைப் பாதித்ததில்லை.

ஆயிரக்கணக்கான படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவர் படங்கள் பார்ப்பது கிடையாது. டப்பிங்கோடு சரி!

இவர் நடித்த நாடகங்களை இவர் பார்க்க முடியாதல்லவா?
திரைப்படங்களிலும் நடித்துக் கொடுக்கும் கடமையோடு சரி..!
கிட்டத்தட்ட ஒரு யோகியாகவே வாழ்ந்தார்.

சிவானந்த ஆசிரமத்து வழக்கப்படி தீட்க்ஷை வாங்கியிருந்தார்.

அதனால் அந்த ஆசிரமத்து வழக்கப்படி, பூர்வக மண்ணான பொட்டல் பட்டியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சிவராத்திரி குல தெய்வ வழிபாடு தினத்தன்று இறந்ததால் இவரையும் குல தெய்வமாக என் குடும்பத்தினர் வழி பட்டு வருகின்றனர்.

அம்மா நடிகை என்று திரையுலகினர் என்று சொன்னாலும்.. உலகம் அவரை அம்மா என்றுதான் சொன்னது.

அம்மா என்றழைக்கப்படும் ஜெயலலிதா கூட இவரை அம்மா என்றுதான் பாசத்தோடு அழைப்பார்.

இவர், என் தந்தையுடன் பிறந்ததால், அத்தை என்றாலும்.. என்னைக் கண்டிப்பதில் தந்தையாகவும் அன்பு காட்டி அரவணைப்பதில் தாயாகவும் விளங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

(Pavel Sankar)