சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 4)

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையிற்கு தயார். மேற்குலக நாடுகளை நம்பினோம்… நேட்டோ நாடுகளை நம்பினோம்…. நாம் தனித்து விடப்பட்டுள்ளோம்…. நேட்டோ அமைப்பில் சேருங்கள் என்று சொன்ன நாடுகள் எல்லாம் எங்கே போய்விட்டன. இந்தியா தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் – இது உக்ரேன் தலைவர் ஒரு நாள் போர் முடிவின் பின்பு மனம் வருத்தி வெளியிட்டுள்ளது அழைப்பு.

ஆயுதங்களை கைவிட்டுவிட்டு சரணடையத் தயாராக வாருங்கள் பேசுவதற்கு குழுவை அனுப்புகின்றோம் – இது ரஷ்யா

சுதந்திரமான நாடாக யார் பக்கம் சாராமலும் சிறப்பாக ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ பக்கம் சாராமல் செயற்படுங்கள் என்று தனது கொல்லைப் புறத்தில் இருக்கும் உக்ரேனுக்கு ‘ஒரு காலத்தில் எம்முடன் ஒன்றாக பயணித்த நீங்கள்..” என்பதை கருத்தில் எடுக்காது நேட்டோவின் நகர்வுகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றீர்கள் என்பதையும் காதில் வாங்காது நேட்டோவை நம்பிய உக்ரேனை இன்று கைவிடப்பட்ட? நிலையில்….

இதனை உக்ரேன் தலைவரே போர் ஆரம்பித்த ஒரு நாளில் தெரிவிக்கும் நிலமை நேட்டோ நாடுகளின் நம்புபவர்களுக்கான செய்திகளை சொல்லி நிற்கின்றது.

ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படைகளால் தன்னிச்சையாகவே தனியரசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பகுதிகளையுமே புடின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்திருக்கிறார். இதன் மூலம் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையேயான பூகோள அரசியல் போட்டி, கிழக்கு ஜரோப்பாவில் இரண்டு புதிய தேசங்கள் தோன்றுவதற்கான வழிகளைத் திறந்துவிட்டிருக்கும் நிலையில்….

இந்த யுத்தம் பற்றி ரஷ்ய அதிபர் கருத்து தெரிவிக்கையில்…

‘உக்ரைன் அதிகாரத்தை அமெரிக்காவின் பொம்மை ஆட்சி” என்று வர்ணித்தார். ‘ஒரு தேசத்துக்கான எந்தப் பண்புகளையுமோ அடிப்படைகளையுமோ கொண்டிருக்காத அந்த நாடு நேட்டோவின் யுத்த மேடையாக மாறியிருக்கிறது’ என்றும் குற்றம் சுமத்தினார். ‘நவீன உக்ரைன் கம்யூனிஸ ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட தேசம். ஆனால் 2014 உருவான அரசு அதன் ரஷ்யத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டு அங்கு ஊழல் மிக்க பயங்கரவாத ஆட்சி கட்டியெழுப்பியுள்ளது’ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடியாக..

புடினின் தனிநாட்டு அங்கீகாரப் பிரகடனத்தை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். எவருடைய நகர்வுகளும் உக்ரைன் நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதிப்பவையாக இருக்க வேண்டும் என்று ஐ. நா. சபை கூறியிருக்கிறது.

சர்வதேச சட்டங்களையும் ஏற்கவே உக்ரேன் ரஷ்யா ஆதரவுடன் தனிநாடு அமைக்க போராடி வந்த கிளர்சியாளர்கள் இடையிலான ‘மின்ஸ்க்’ உடன் படிக்கையையும் மீறி மொஸ்கோ உக்ரைனின் ஒரு பகுதிக்குத் தனி நாடுகளுக்கான அங்கீகாரத்தை அளித்திருப்பதால் அதன் மீது தடைகளை அறிவிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆனால் மேற்குலகின் தடைகள் எதனையும் மொஸ்கோ கணக்கில் எடுப்பதாக இல்லை. இதற்கான காரணங்களை விரிவாக தொடர்ந்து அடுத்த பகுதிகளில் பார்ப்போம். 30 வருடங்களாக ரஷ்யா மீது மேற்குலகம் அதிக தடைகளை விதித்தே இருக்கின்றது.

ரஷ்யாவும் பதிலாக தனது வான் பறப்பு பிரதேசத்தில் நேட்டோ நாடுகளின் விமானங்கள்(சிவில் விமானங்கள்) பறப்பதற்கு தடை விதித்திருக்கின்றது

இந்நிலையில்தான் ‘செத்தான் சிங்கன்” என்ற கூச்சலுக்கு பதிலடியாக சிரிய உள் நாட்டு யுத்தத்தில் சிரிய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க செயற்பட்ட பின்பு தற்போது மீண்டும் எழுந்து வருகின்றது ரஷ்யா.

குண்டுகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் நாம் தயார் இல்லை. ஆனால் எதிர்காலத்திலும் குண்டுகளுடன் நாம் உங்கள் நாட்டில் முகாம் அமைக்க அனுமதி தாருங்கள் என்பது போன்ற கூட்டமைப்பாகிப் போனது நேட்டோவின் தற்போதைய செயற்பாடுகள்.

25 வருடங்களுக்கு முன்பு சோமாலியா மீதான ஆக்கிரமிப்பின் போது கிடைத்த கசப்பான இழப்புக்களுடன் கூடிய அனுபவங்கள் தரையினூடு தமது படைகளை நகர்த்துவதை தவிர்த்து வருவதான அமெரிக்க தலமையிலான நேட்டோ நாடுகளின் செயற்பாடுகள் தற்போதும் தொடர்வார்கள் என்றே நம்பப்படுகின்றது.

தடைகளையும், கண்டனங்களையும், தமது நாடுகளுக்குள் நிதி திரட்டி உதவி செய்வதாகவும் கூறிக் கொள்ளல்கள் மட்டும் ஒரு நாட்டில் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கான நிவாரணமாக அமைய மாட்டாது. மாறாக யுத்தத்தை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகளை அடைவதற்குரிய இராஜதந்திரி அணுகுமுறைகளை இரு தரப்பும் மேற்கொள்ள வேண்டும்.

இதே போன்ற அனுபவங்களை ஈழத் தமிழராகிய நாங்களும் அனுபவித்தவர்கள் ஏன் தற்போது குண்டுகள் அற்ற நிலையிலும் அவை தொடர்ந்தும் வருகின்றன. இந்த வலிகள் எவ்வாறானவை என்பது ஒவ்வொரு சமான்ய மக்களுக்கும் தெரியும் யுத்தங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பொது மக்களே.

கடந்து 50 வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா நேட்டோவின் ஆதரவுடன் படையெடுத்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டால் தலை சுற்றும்.

இத்தனைக்கும் படையெடுத்து ஜனநாயகத்தை… நல்லாட்சியை…. உருவாக்கப் போகின்றோம் என்று சென்ற நாடுகளின் இன்றைய நிலையை நாம் விபரிக்க தேவை இல்லை. அந்த நாடுகளின் பட்டியலை இந்தப் பதிவின் புகைப்படமாக இணைத்துள்ளேன். அவற்றின் நிலமைகளை ஆராய்ந்தால் நிலமைகள் புரியப்படலாம்.

அண்மைய காலத்து உதாரணங்களாக 1980 களில் ஆப்கானிஸ்தானில் அமைந்த சோசலிச அரசிற்கு ஆதரவாக அங்கிருந்த சோவியத் படைகளை அமெரிக்காவால் உருவாக்கிய முஹாஜிதீன்களைக் கொண்டு விரட்டி அடிக்கப்பட்டது. அவ்வாறுதான் உலகம் நம்பியது.

பின்பு முஹாஜிதீன்களில் ஆட்சிக் காலத்தில் இரட்டைக் கோபுர தாக்குதல் சூத்திரதாரி பின் லாடனை பிடிப்பதற்கு என அங்கு சென்ற அமெரிக்க நேட்டோ படைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நின்று எல்லா சங்காரமும் செய்து கடந்த வருடம் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற கணக்காக வெளியேறிய ஆப்கானின் இன்றைய நிலை என்ன…? நஜிபுல்லா காலத்து ஆட்சியை விடவா சிறப்பாக இருக்கின்றது..?

ஈராக்கிலும் இதே நிலை. இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக அங்கே புகுந்து இன்றுவரை அங்கு இரசாயன ஆயுதங்கள் இல்லை என்றாகிப் போன அப்பா, மகன் என் ‘புஷ்” செயற்பாடுகளினால் சின்னாபின்மாகிப் போனதுதுதான் ஈராக்கின் இன்றைய நிலமை. கூடவே சதாம் குசைனை தூக்கிலும் தொங்கவிட்டார்கள். இன்று சதாம் குசைன் ஆட்சிக் காலத்தை விடவா சிறப்பாக இருக்கின்றது அங்கு.. வாழ்க்கை.

லிபியாவிற்குள் ஜனநாயகத்தை உருவாக்குகின்றோம் என்று புகுந்தவர்கள் குடிமனை, கல்வி, மின்சாரம் போன்று சகல அடிப்படை தேவைகளையும் இலவசமாக வழங்கி ஆட்சி செய்த கடாபியை மதகின் கீழ் இருந்து இழுத்து வந்து சுட்டுக் கொன்றுவிட்டு இன்று லிபியர்களே பல்வேறு சிற்றரசர்களாக தமக்குள் அடிபட்டுச் சாகும் நிலமையில் ரொம்பவும் சீரழிந்து போய் இருக்கின்றனர். கடாபி காலத்தை விடவா தற்போது அங்கு வாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிலர் கூறுவது போல் ஆமை புகுந்த வீடாகிப் போனது போல் நேட்டோ படைகள் புகுந்த நாடுகள்

இன்னும் சற்று பின்னோக்கி சென்றால் மார்சல் டிட்டோ அணிசேரா அமைப்பை உருவாக்கி நாம் நேட்டோவும் இல்லை வார்சோவும் இல்லை என்று வாழ்ந்த யூக்கோஸ்சிலாவியா என்ற நாட்டை அமெரிக்க தலமையிலான நேட்டோ படைகளை அனுப்பி உள்நாட்டுக் கலகத்தை அடக்குகின்றோம் இன அழிப்புகளை தடுக்கின்றோம் என்று சென்று இன்று அந்நாடு எட்டு நாடுகளாக துண்டாடப்பட்டு தமக்குள் முட்டி மோதும் வறிய நாடுகளாக தத்தளிக்கின்றன.

இந்நிலையில் இன்று தமது அணிக்குள் வாருங்கள் என்று உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை 2014 ஏற்படுத்தி சோவியத்தின் முன்னாள் நாடுகளின் ஒன்றான ஜோர்ஜியாவைப் போல் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற நிலையில் எற்பட்ட யுத்தம் முன்னைய சகோதர்களை இன்று குண்டுகளை பரிமாறி தமக்குள் அடிபட்டுச் சாகும் நிலை ரொம்பவும் விமர்சனத்திற்குள் உள்ளாக்கி இருக்கின்றது. வேதனையாக இருக்கின்றது.

இந்த நிலையில் நான்காவது பாகத்தில் வரலாற்றை தொடர்கின்றேன்….

‘சிங்கன் செத்தான்’ என்று அமெரிக்காவால் 1990 களில் நம்பப்பட்ட ரஷ்யா பல பொருளாதாரத் தடைகள், உடைவுகள், முட்டுக் கட்டைகளை தாண்டி 30 வருடங்களில் அமெரிக்காவை கேள்வி கேட்கும் வகையில் இன்னோர் முகாமாக எழுந்து நிற்கின்றது இன்று.

சோவியத்தின் இறுதிக் காலத்தில் அமெரிக்காவின் உற்ற தோழனாக இருந்த சீனாவும் தற்போது அணி மாறி ரஷ்யாவின் பக்கம் நெருங்கி வந்துள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்யாவின் அண்மைய செயற்பாடுகளில் இரட்டைக் குழத் துப்பாக்கி போல் செயற்படுகின்றது சீனா.

இதனை நாம் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் போரை நிறுத்தியது பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்தியது என்பவற்றில் கண்டோம். இன்று உக்ரேனின் விடயத்திலும் அவ்வாறான நிலைப்பாட்டை சீனா எடுத்த நிலையில் இந்தியாவும் இதனை ஒத்த முடிவை எடுப்பதாகவே உணர முடிகின்றது.

சோவியத் யூனியனின் உடைவு காலத்தில் அமெரிக்காவின் நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஏற்பட்ட முக்கிய உடன்பாடு தனது முன்னாள் ஒன்றிய நாடுகளை நேட்டோவின் அமைப்பில் இணைக்கக் கூடாது என்பது இதனை தொடர்ந்து 30 வருடங்களாக நேட்டோ நாடுகள் மீறியே வருகின்றன. இதன் ஒரு முக்கிய முட்டுச் சந்தில் தற்போது உக்ரேன் அமெரிக்கா ரஷ்யா

(கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது தொடரும்….)