மேற்குலகின் “மோசமானதொரு கனவு” நனவாகின்றது

சீன ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து இருநாட்களாக பல விடயங்களை கலந்துரையாடி உள்ளார். இக்கலந்துரையாடல்களின் பின்னர் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கை, சீனா மற்றும் ரஷ்ய தலைவர்களுக்கு இடையில் கட்டமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பரஸ்பர நம்பிக்கை மற்றும் முதிர்ச்சியான புரிந்துணர்வுகளை உலகிற்கு தெரியப்பபடுத்தியிருக்கின்றது. மேலும் தற்போது உலகம் அனுபவித்து வரும் ஆழமான மாற்றங்களின் எதிர்விளைவுகளை இருதரப்பு உறவுகளாலும் தாங்கிக்கொள்ள முடியும் என்பதையும் காட்டுகின்றன.

உக்ரைன் நெருக்கடி மற்றும் ரஷ்யாவிற்கும் மேற்குலகிற்கும் இடையிலான மோசமடைந்து வரும் உறவுகள், சீனா-ரஷ்யா உறவுகளின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என்பதே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு உலகிற்கு சொல்லும் இன்னுமொரு முக்கிய செய்தியாகும். பல்வேறு தரப்பினருடனான பரஸ்பர உறவுகளை உயர்த்துதல், பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச உறவுகளில் பரந்துபட்ட ஜனநாயகத்தை மேம்படுத்தி, நேர்மறையான வழியில் உலகை மாற்ற சீனாவும் ரஷ்யாவும் உறுதிபூண்டுள்ளன என்பதை இந்தச் சந்திப்பு எடுத்துக் காட்டுகின்றது.

உக்ரைன் விவகாரத்தில், ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் மற்றும் சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது உட்பட குறிப்பிடத்தக்க கருத்தொருமைப்பாடுகளுக்கு சீனாவும் ரஷ்யாவும் வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்குமிடையில் உருவாகியுள்ள பல ஒருமித்த கருத்துக்கள், உக்ரைனில் சாத்தியமானதொரு சமாதான முயற்சிகளை முன்னெடுக்க தெளிவானதொரு அடித்தளத்தை அமைத்துள்ளன. சீனாவின் மத்தியஸ்தம் குறித்து மேலும் விவாதிப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் பிற முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ரஷ்ய-உக்ரைன் தரப்பினருடனும் இணைந்து சீனா தொடர்ந்து அக்கறையுடன் செயற்படுமென விளாடிமிர் புட்டினிடம் (Vladimir Putin) ஸி ஜின்பிங் கூறியுள்ளார்.

முக்கிய சர்வதேச பிரச்சினைகளில் பாரபட்சமில்லாது, குறித்த இலக்குடன் சமநிலையுடனான நிலைப்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்தியதற்காகவும், நியாயம் மற்றும் நீதிக்காக நின்றதற்காகவும் சீனாவை ரஷ்யா பாராட்டுகிறது என்று புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைன் பிரச்சினையின் அரசியல் தீர்வு குறித்த 12 அம்ச சீனாவின் திட்டத்தை ரஷ்யா கவனமாக ஆராய்ந்து அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக உள்ளதாகவும், இந்த விஷயத்தில் சீனா ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதை ரஷ்யா வரவேற்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ரஷ்ய-சீன பொருளாதார உடன்படிக்கையைப் பொறுத்தவரை, வர்த்தக பரிமாற்றங்கள் ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் இலக்கை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் தங்கள் எரிசக்தி ஒத்துழைப்பினை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்து, சைபீரியா-2 எரிவாயு குழாய் கட்டுமானத்தை உடனடியாக திட்டமிட ஒப்புக்கொண்டனர்.
மேற்கு நாடுகளின் எதேச்சதிகாரங்களுக்கு அடிபணியாத நாடுகளின் மீது மேற்கு நாடுகள் விதிக்கும் பொருளாதாத் தடைகள் மனித உரிமை மீறல்கள் என்பதில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டமைப்பு ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்தது. ஆனால் அவர்கள் விதித்த பொருளாதாரத் தடைகள் அவர்களையே திருப்பித் தாக்கி வருகின்றன.

சீனா, இந்தியா, ஈரான் மற்றும் சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் நேட்டோ விதித்த பொருளாதாரத் தடைகளை நிராகரித்தன. ரஷ்ய மசகு எண்ணெயை இந்தியாவும் சவுதி அரேபியாவும் தொடர்ந்து வாங்கி வருவதோடு, அந்த எண்ணெயைச் சுத்திகரித்து, அதிக விலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கிறார்கள். அத்தோடு பல ஐரோப்பிய நாடுகள் உள்நாட்டுத் தேவைகளிலுள்ள எரிபொருள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, மேலதிகமாக அமெரிக்காவிடமிருந்தும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்கள்.

மேற்கு நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு அதிகரித்து வரும் இராணுவ உதவிகள் குறித்து ரஷ்யா தனது ஆழ்ந்த கவலையை சீனாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இராணுவ வல்லுநர்கள் உக்ரேனிய இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு, ரஷ்ய ஆயுதப் படைகளுடனான மோதலில் ஈடுபடும் அபாயத்திலுமுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, இது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதலுக்கு இட்டுச்சென்று, அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும் என்ற கவலையையும் ரஷ்யா சீனாவிடம் தெரிவித்துள்ளது.

‘இப்போது மாற்றங்கள் – 100 ஆண்டுகளாக நாங்கள் காணாதவை – உருவாகியுள்ளன. இந்த மாற்றங்களை நாங்கள் ஒன்றாக இயக்குகின்றோம்’ என்று கிரெம்ளின் வாசலில் நின்று பிரியாவிடை கொடுக்கும்போது ஸி ஜின்பிங் விளாடிமிர் புட்டினிடம் கூறினார். அதற்கு ரஷ்ய அதிபர், ‘நான் உங்களுடன் உடன்படுகிறேன்’ என பதிலளித்துள்ளார்.