ராகுல் ஏன் குறிவைக்கப்படுகிறார்?

இந்த வழக்கே மர்மமானது

16.04.2019 அன்று ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ-வுமான புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 24.06.2021 அன்று இந்த வழக்கு விசாரணையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர் ஆனார். இதன் முக்கிய திருப்பு முனையாக 07.03.2022 அன்று வழக்கு தொடுத்த நபரே,வழக்குவிசாரணைக்கு தடை வாங்கினார்
ஓராண்டு காலம் அதனைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லை

07.02.2023 அன்று அதானியும் மோடியும் இருக்கும். புகைப்படத்தைக் காட்டி நாடாளுமன்றத்தில் ராகுல் கடுமையாக விமர்சித்தார். முன்பு வழக்கு போட்டவர் 16.2.2023 அன்று திடீரென்று குரோத் உயர்நீதிமன்றம் சென்று தான் பெற்ற தடை உத்தரவை திரும்பப் பெறுகிறார். இதையடுத்து, 17.03.2023 அன்று வாதங்களை தொடர சூரத் மாவட்ட நீதிபதி அனுமதிக்கிறார். ஐந்தே நாளில் அதாவது 23 ஆம் தேதியே தீர்ப்பு வருகிறது. ராகுலுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்படுகிறது. அதற்காகவே காத்திருந்தது போல, மறு நாளே – 24 ஆம் தேதி அன்று அவரது எம்.பி.பதவி பறிக்கப்படுகிறது. ராகுல் காந்தியின் பதவியைப் பறிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட வழக்காகத் தெரியவில்லையா?

இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கிவிட்டு, மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார். அதுவரை
தண்டனையையும் நிறுத்திவைத்துள்ளார். நிறுத்தி வைக்கப்பட்ட தீர்ப்பை
வைத்து பதவியை பறித்து விட்டார்கள். இரண்டு ஆண்டு தண்டனை
விதித்தது மாவட்ட நீதிமன்றம் தான். இந்த வழக்கின் தீர்ப்பு செல்லுபடியாக
இன்னும் எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டும். அதற்கு முன்னால் உடனடியாக பதவியைக் காலி செய்கிறார்கள் என்றால் பா.ஜ.க. கண்ணுக்கு ராகுல் காந்தி எவ்வளவு உறுத்துகிறார் என்பது தெரிகிறதா? ஏன் அவர் குறி வைக்கப்படுகிறார்?

பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக மட்டுமல்ல கொள்கை ரீதியாக எதிர்க்கிறார். பா.ஜ.க.வை மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ், அமைப்பையும் அரசியல் களத்தில் விமர்சிக்கிறார் ராகுல்.* அதுதான் முதல் கோபம். சாவர்க்கரை மிகக்கடுமையாக விமர்சிக்கிறார் ராகுல். ‘சாவர்க்கர் போல நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். என் பெயர் சாவர்க்கர் அல்ல. ராகுல்” என்று அவர் சொல்வது அவர்களுக்கு எரிச்சலாக உள்ளது. இந்தியாவை மதவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கவே நான் நடைபயணம்
செல்வதாகவும் அவர் சொல்லி வருகிறார்.

1883 முதல் 1966 வரை வாழ்ந்தவர் சாவர்க்கர். இந்தியாவிலும் இலண்டலினும் மன்னராட்சிக்கு எதிராகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார் இவர். 1910 டிசம்பர் 10-ல் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி ஆயுள் காலம் முழுவதும் நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு தரப்படுகிறது. அதன்படி அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார். 1911-ல் ஆங்கில அரசுக்கு அவர் ஒரு கருணை மனு அனுப்புகிறார். அதன்மீது நடவடிக்கை இல்லை என்றதும் 1913 நவம்பர் 14 அன்று மீண்டும் கருணை மனு போடுகிறார்.

அரசு தன் நல்லதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை விடுவித்தால் அரசியலமைப்பின் செயல்பாட்டிற்காக வாதாடுவதுடன் ஆங்கில அரசுக்கு விசுவாசமாகவும் நடந்து கொள்வேன். அரசு எந்த வகையில் விரும்புகிறதோ அந்த வகையில் சேவகம் புரியத் தயாராக உள்ளேன். எனது மாற்றம் மனச்சாட்சியின் குரலுக்கேற்ப ஏற்பட்டுள்ளதால் எனது எதிர்கால நடத்தை அதற்கேற்பத்தான் இருக்கும். என்னைச் சிறையில் வைத்திருப்பதன் மூலம் எதுவும் பெற இயலாது. மாறாக அவ்வாறு இல்லாதிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம், தந்தை போன்ற அரசின் வாசலுக்குக் கெட்டழிந்த மகன் திரும்ப வருமாறு கருணை செய்ய வல்லமை மிக்க தங்களால் மட்டுமே முடியும்

  • என்று சாவர்க்கர் எழுதி இருக்கிறார்.
    1924-ல் எரவாடா சிறையில் இருந்து நிபந்தனைகள் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகிறார் சாவர்க்கர். அடுத்த ஆண்டு ஒரு கட்டுரை எழுதியதற்காக மீண்டும் அவர் மீது வழக்கு பாய்கிறது. அதற்கு அனுப்பிய பதிலில் சுயராஜ்யம் என்ற சொல்லில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பதில் அனுப்பி இருக்கிறார். அவருக்கு மீண்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. 1937 ஆம் ஆண்டு தான் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.
    பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே பிரிட்டிஷாரால் விடுவிக்கப்பட்டவர் அவர், அவரை வீரசாவர்க்கர் என ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் ராகுல். இதுதான் பா.ஜ.க.வினருக்கு அவர் மீதான முதல் எரிச்சல். இரண்டாவதாக, ராகுல் நடத்திய இந்திய ஒற்றுமைப் பயணம்
    இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஆதரவு அலையை உருவாக்கி
    இருக்கிறது. நான்கு கட்டமாகத் திட்டமிடப் பட்டது இந்தப் பயணம். அதன் முதல் கட்டத்தை மட்டும்தான் அவர் முடித்துள்ளார். முதற்கட்ட பயணமே அதிக வெற்றியைக் கொடுத்துவிட்டது.
    மொத்தம் 137 நாட்கள் 3,800 கிலோ மீட்டர் தூரம் 14 மாநிலங்கள் 72 மாவட்டங்கள் – எனப் பயணம் செய்துள்ளார் ராகுல் காந்தி. குமரி முனையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். வெள்ளிப்பனிமலையாம் ஐம்முவில் இருந்து 12 கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளார்கள். ‘இந்திய ஒற்றுமைப் பயணம்” என்பது இந்தியாவில் உண்மையில் ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒற்றுமையை மட்டுமல்ல. கட்சிகளின் ஒற்றுமையையும் சேர்த்து ஏற்படுத்தியது.
    (27-3-2023 தேதிய முரசொலி நாளேட்டின் தலையங்கம்)