அடுத்துவரும் தேர்தல்களில் ‘தனிச் சின்னத்தில் த.மு.கூ போட்டி’

“தமிழ் முற்போக்குக் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் தனித்துவத்துடன், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவருமான அ. அரவிந்தகுமார் தெரிவித்தார். அதனை முன்னிலைப்படுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் முற்போக்கு க்கூட்டணியின் மேதின நிகழ்வு குறித்த தெளிவுபடுத்தும் கூட்டம், மலையக மக்கள் முன்னணியின் பதுளை பிராந்திய செயல்பாட்டு பணியகத்தில் நேற்ற (18) நடைபெற்றது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “சர்வதேச ரீதியிலும் அங்கிகாரத்தினை பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதுவரை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை. அக்கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சி என்ற வகையிலேயே தேர்தலில் போட்டியிடுகிறது.

ஆனால், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் அவ்வமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கூட்டணியின் மே தின நிகழ்வு, எதிர்வரும் முதலாம் திகதி தலவாக்கலையில் நடாத்தப்படவுள்ளது. இம்மேதின நிகழ்வினை வெற்றியடைய வைக்க வேண்டிய பாரிய கடப்பாடு, எம் ஒவ்வொருவரையும் சார்ந்ததாக இருக்கிறது.

மலையக மக்கள் முன்னணி, 2005 இல் பதுளையிலும் 2008 இல் பண்டாரவளையிலும் மே தின நிகழ்வுகளை நடத்தியுள்ளது. தேசியப் புலனாய்வு அறிக்கையில் மலையகத்தில் ஆகக்கூடுதலான மக்கள் கலந்துகொண்ட முதல்தர மேதின நிகழ்வாக பண்டாரவளையில் நடைபெற்ற மே தினம் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.