திடீரென அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தல்

இன்று காலை பிரித்தானிய நேரம் காலை 10.55 மணிக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென அவசர அவசரமாக அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கும் நிலையில் பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பு பிரிட்டனில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்து போகும் தீர்மானம் பற்றி முடிவு செய்வதற்காகக் கடந்த வருடம் நடைபெற்ற சர்வசன வாக்கெடுப்பில் பிரிந்து போகக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்
கெதிராக பிரிட்டன் மக்கள் பெரும்பான்மையானோர் வாக்களித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் டேவிட் கமரூன் தேர்தற் தோல்விக்குப் பொறுப்பேற்றுத் தனது பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்ய, உள்நாட்டு அமைச்சராக (Home Minister) இருந்த திருமதி தெரேசா மே பிரதமரானார். ஆனால் தான் பிரதமராகப் பதவியேற்று ஒரு வருடம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில் அவர் பொதுத் தேர்தலுக்கான அழைப்பை இன்று விடுத்துள்ளமை பரபரப்பாகப் பேசப்படுகிறது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தனது கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பெற்று ஆட்சியமைத்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து முழுமையாக வெளியேறும் போதான பிரிட்டனின் உறுதித்தன்மையையும் பாதுகாப்பையும் ஸ்திரப்படுத்திக் கொள்வதே தனது நோக்கமென்றும், ஆயினும் முற்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடும் தீர்மானத்தைத் தான் மிக்க தயக்கத்துடனேயே மேற்கொண்டதாகவும் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்தத் தேர்தல் அறிவிப்பை பிரித்தானியாவின் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எஸ். ஹமீத்)