அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.  20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளன.
வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.அப்போது அவர், “ஜெயலலிதா மரணத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.  அவர் உயிருடன் இருந்தபோது அவர் முன்னால் நிற்கவே பயந்தவர்கள் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பிவருகின்றனர்.

அம்மா இப்படி ஒரு சூழலில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லைதான். ஆனால், தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளை எங்களால் பொறுக்க முடியாமல்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். அம்மாவின் தோழி வி.கே.சசிகலாதான் இந்த வீடியோவை எடுத்தார்.

இந்த வீடியோவை இப்போது வெளியிட தேர்தல் அரசியல் காரணம் அல்ல. விசாரணை ஆணையம் எங்களை விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருவோம் என ஏற்கெனவே கூறியிருந்தோம். எங்களை அழைக்கவில்லை .அதனால் நாங்கள் அங்கே எதையும் ஒப்படைக்க வாய்ப்பில்லை.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது நான் ஒருநாள்கூட உள்ளே சென்றதில்லை.

ஆனால், எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயகுமார், ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளே சென்றனர். மேல்சிகிச்சைக்கு ஜெ.வை எங்கு அழைத்துச்செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசித்த வீடியோவும் உள்ளது.

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த யார் முயற்சித்தாலும் நாங்கள் விடமாட்டோம். இந்த வீடியோ போன்று பல ஆதரங்கள் தங்களிடம் உள்ளது; தேவைப்பட்டால் வெளியிடுவோம்” என்றார்.

நீளும் சர்ச்சைகள்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று தொடங்கிய சர்ச்சை இன்னும் முடியவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகக் குழு இயக்குநர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியிருந்தார். இந்நிலையில்,  இன்று டிடிவி தினகரன் ஆதரவாளர் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

முன்பே சொன்ன தினகரன்..

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் கூறியபோதெல்லாம் டிடிவி தினகரன், “எங்களிடம் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையே அளிக்கப்பட்டது. அவர் அந்த வீடியோக்களில் நைட்டியில் இருக்கிறார். ஒரு முதல்வராக இருந்தவரை அந்த கோலத்தில் பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள் என்பதாலேயே அதை வெளியிடவில்லை. இருப்பினும், தேவைப்பட்டால் அந்த வீடியோவை வெளியிடுவோம்” எனக் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை தேர்தல்.. இன்று பரபரப்பு வீடியோ..

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இன்று (புதன்கிழமை) டிடிவி தினகரன் தரப்பு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை இப்போது அவர்கள் வெளியிடக் காரணம் ஆர்.கே.நகர் தேர்தலில் ஏதாவது ஆதாயம் தேட முடியுமா என்பதற்காகவே என சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், இந்த வீடியோவை இப்போது வெளியிட்டு ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை சசிகலா தரப்பினர் ரகசியமாக வைத்திருந்தது ஏன் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து டிடிவி தினகரன் , சசிகலா தரப்பின் மீதான களங்கத்தைப் போக்கிக்கொள்ளும் முயற்சி, மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சி எனக் கூறுகின்றனர்.

(The Hindu)