நாபா என்ற மானிடன்

அந்த மனிதர் மிக மிக எளிமையானவர். மனித குலத்தின் மகத்தான லட்சியங்களை கனவுகளில் நிறைத்தவர்.
அந்த கனவுகள் நபாவை மானிடவிடிவு என்னும் மகத்தான தேடலுடன் ஒன்றுரை தசாப்தங்கள் அலைய வைத்தது.
எளிமையும் ,சமூக மாற்றம் கருதிய பேரார்வமும்- சர்வதேச சகோதரத்துவமும் நபாவின் நெஞ்சில் நிரம்பி வழிந்தன.
மாபெரும் தலைவர் மாத்திரமல்ல . மனிதர்களின் சின்ன சின்ன விடயங்களையும் புரிந்து கொண்ட மானிடன்.
கனிவாகப் சத்தமில்லாமல் பேசுவது -நடந்து கொள்வது- சிறியோர் பெரியோர் என்ற பதகளிப்புக்கள் இல்லாதது- எல்லாவற்றையும் அமைதியாக ஆரவாரமில்லாமல் நோக்குவது
வெறுப்பு –காழ்ப்புணர்வு இவற்றின் சுவடுகளைக் கூட காணமுடியாது.
இடையறாத தன்னலமற்ற உழைப்பு- தோழமை- வழிகாட்டல் இது நாபா என்ற மானிடன்.
தேசிய விடுதலை மற்றும் பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிராக மக்கள் நேயமுடன் யார் யாரெல்லாம் பணியாற்றினார்களோ அவர்களையெல்லாம் தேடிச்சென்று சந்தித்தார்.
போராட்டத்திற்கு மனிதாபிமான -ஜனநாயக உள்ளடக்கத்தை வழங்குவதற்கு இயன்றவரை முயன்றார்.
வேற்றுமையில் ஒற்றுமை காண விளைந்தார். தத்துவம்- அரசியல்- சமூகம்- விடுதலை என வாழ்ந்த மனிதர்களுடன் அழுத்தமான உறவைப் பேணினார்.
சர்வதேச சகோதரத்துவத்திற்கு இயல்பான உதாரணம்.
கோஸ்டி மனப்பான்மை ,அதிகார அகங்காரம் அவரை எப்போதும் நெருங்கியது கிடையாது.
தோழமையின் அர்த்தம் அவரின் செயற்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டது.
சதிகளும்- குழிபறிப்புக்களும் நிறைந்த தமிழ் அரசியல் அரங்கில் நல்லியல்பை வெளிப்படுத்தி வேலை செய்தார்.
வன்மமும்- குரோதமும் கொப்பளிக்கும் தமிழ் அரசியல் சூழலில் அவர் வித்தியாசமானவர்.
ஆடம்பரத்தையும் -பகட்டையும் -மேட்டிமையையும் அவர் நாடியதில்லை.
தமிழ் அரசியல் பிரமுகத்தனங்களை -தளகர்த்தர் தனங்களை நாடக பாணியில் நாடியதில்லை.

‘வறுமையும் வாழ்வும்’ என்ற பெருவாரியான மனிதர்களின் நிலைமை அவரது நடைமுறையில் ஒட்டியிருந்தது.
ஜனநாயக விரோத நிலைமைகளில் உயிர் அச்சுறுத்தல்களை எதிர் கொண்ட மனிதர்களை இயலுமானவரை பாதுகாத்தவர்.
அவர் வசிக்கும் இடங்களில் கட்சியினர் தோழர்கள் மாத்திரமல்ல அந்தகால கட்டத்தில் தம்மை அர்ப்பணித்து நொந்து போன மனிதர்களின் புகலிடமாகவும் இருந்தது.
சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆழமான நுண்ணிய கரிசனை !
தமிழ்தேசியம் சாதி ரீதியான –சமூகரீதியான ஒடுக்குமுறைகள் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் -பெண்கள் சர்வதேச ரீதியில் விடுதலைக்காகப் போராடும் மக்கள் பற்றிய தீவிரமான பிரக்ஞை
இந்தியாவின் முதிர்ந்த சுதந்திரப்போராட்டக்காரர்கள் சொத்து சுகங்களை அர்ப்பணித்தவர்கள்- காந்தியவாதிகள் -முற்போக்கு ஜனநாயக இடதுசாரிகள் -ஊடகவியலாளர்கள்- புரட்சியாளர்கள் தந்தை பெரியாரின் வழிவந்த தீவிர சமூக சீர்திருத்த வாதிகள் தொழிற்சங்கவாதிகள் ,ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மலையக மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டோர் கவிஞர்கள்-இலக்கியவாதிகள் என உயிரோட்டாமான தொடர்பைப் பேணினார்.
அவரது தனிப்பட்டவாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இடையே பெரும் சுவர் எதையும் எழுப்ப முடியாது.
அகாலமாக அவரது வாழ்வு பாசிசத்தால் பறிக்கப்பட்டது முற்போக்கு ஜனநாயக முகாமிற்கு ஒர நிரப்ப முடியாத இழப்பு.
அசாதாரண ஆளுமையையும், ஐக்கிய உணர்வையும், தோழமையையும் ,சகிப்புத்தன்மையயும் ஜனநாயகத்தையும், மற்றவர்களை காயப்படுத்தாத மனதையும் , மாநிடநேயத்தையும் தனது வாழ்வு நடைமுறையூடாக பதிவு செய்து உணர்த்தி அவர் மறைந்தார்.
தோழர் நபாவின் வாழ்வும் புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்.

(தோழர் சுகு)