அரசியல் நாகரீகத்தின் புதிய கதவுகளை அகலத் திறக்கும் அஇமகா! -வியக்க வைக்கும் ரிசாத் பதியுதீனின் வெளிப்படையான இயக்கங்கள்!

(எஸ். ஹமீத்)
பன்னெடுங்காலங்கள் பறந்துவிடவில்லை. பதின்மூன்றே பதின்மூன்று வருடங்கள்தான். இலங்கையில் ஓர் அரசியற் கட்சி உதயமாகி உச்சம் நோக்கியதோர் உன்னதப் பாதையின் வழியே ஓங்கிய புகழோடு உத்வேகமாய்ச் சென்று கொண்டிருக்கிறது. வியாபித்துக் கொண்டிருக்கும் அதன் மகிமையின் வீச்சம் வியக்க வைக்கிறது. கண்பட்டுவிடுமோ என்று அதனை நேசிப்போர் கவலைப்படுமளவிற்கு அதன் வளர்ச்சி காணப்படுகிறது.

இலங்கையின் நீண்ட வரலாற்றில் தோன்றியவையும், தோன்றிய வேகத்திலேயே மறைந்து போனவையுமான நூற்றுக் கணக்கான அரசியற் கட்சிகள் இருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த இந்த எழுபது வருடங்களில் முஸ்லிம்களுக்காகவும் பல அரசியல் இயக்கங்கள், அமைப்புகளென உருவானவை குறைந்தது ஆயிரமாவது இருக்கலாம். ஆனால், இவை எவையுமே சாதித்திராத சிலிர்ப்பூட்டும் சாதனைகளை ஒன்றரைத் தசாப்தம் கூடப் பூர்த்தி செய்யாத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்னும் கட்சி சாதித்திருக்கிறது என்பதனைப் பொறாமைகளுக்கும் காழ்ப்புணர்வுகளுக்கும் அப்பால் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதுகால வரை அறிஞர் சித்தி லெப்பை, மாக்கார் மாக்கான், ரி.பி. ஜாயா, சேர் ராசிக் பரீத், டாக்டர் பதியுதீன் மஹ்மூத், எம்.சி.கலீல், ஏ.எம்.ஏ. அஸீஸ், பாக்கீர் மாக்கார், சேர். பதியுதீன் மஹ்மூத், ஏ. சி.எஸ். ஹமீத், எம்.எச். முஹம்மத் போன்றோர்களாலும் மற்றும் பலரினாலும் முஸ்லிம் மக்களுக்குப் பணி செய்வதற்கெனப் பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமிய ஐக்கிய முன்னணி, இஸ்லாமிய சோஷலிச முன்னணி, மாக்ஷிஸ எதிர்ப்பு முன்னணி, கொழும்பு முஸ்லிம் ஐக்கிய முன்னணி, முஸ்லிம் லீக், கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணி, இஸ்லாமிய சோஷலிச முன்னணி, முஸ்லிம் உரிமைகள் இயக்கம், மத்திய இலங்கை முஸ்லிம் அசெம்பிளி, இலங்கை இஸ்லாமிய நிலையம், முஸ்லிம் லீக் போன்ற பலதரப்பட்ட பெயர்களில் இலங்கை இஸ்லாமிய சமூகத்தின் மேம்பாட்டுக்காக எத்தனையோ இயக்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போன்று மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களினால் தொடங்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சி இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றதில் பாரிய பங்களிப்புகளை வழங்கியது.

மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் பின்னர் அக்கட்சிக்கான தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்ற ரவூப் ஹக்கீமின் ஆளுமையற்றதும், சமூக ஆர்வமற்றதும், அசமந்தத்தனமானதுமான தலைமைத்துவத்தின் காரணமாகவும் அவரது தனிப்பட்ட நடத்தைக் கோளாறுகளினாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சந்தித்த உட்பூசல்களும் உள்ளகப் போராட்டங்களும் இன்று அக்கட்சியின் தொடர்ச்சியான இருப்பை மொத்தமாகக் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் நிலையில்-

அதிலிருந்து பிரிந்து, தனியே அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய ரிசாத் பதியுதீனின் பன்முக ஆளுமை காரணமாகவும் தன்னலமற்ற தியாக மனப்பான்மையுடன் கூடிய அசுரவேகச் சாதனைகளினாலும் அது வெற்றிகளின் உச்சங்களை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் அரசியல் வரலாற்றைச் சொல்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். இப்போதைய காலகட்டத்தில், இன்றைய முரண்பாடான அரசியற் களத்தில், சமூக உணர்வும், மனிதாபிமானமும் செல்லாக்காசாகிப் போன தற்போதைய சூழலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிக உயர்ந்த அரசியற் பண்பாடுகளை அண்மைய உள்ளூராட்சித் தேர்தலின் போதும் அதனைத் தொடர்ந்தும் விதைத்து எல்லோரையும் விழி பிதுங்க வைத்திருப்பத்தைச் சுருக்கமாக ஒரு பார்வைக்குள் சிறைப்படுத்துவதே இங்கு பிரதான நோக்கமாகும்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது என்னும் பெரிய ஊர் தனியான தமது பிரதேச சபைக்கான கோரிக்கையை முன்வைத்து, சுயேட்சையாகவே தாங்கள் போட்டியிடுவதாக முடிவு செய்த போது, அதனையறிந்து சற்றேனும் பதறாது, வெகு நிதானத்துடன் அந்த ஊரில் தாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்த அறிவிப்பு இருக்கிறதே-அது பெருந்தன்மையின் உயரிய வெளிப்பாடு!

கல்முனையை மாநகரம் முஸ்லிம்களுக்கே உரியது என்ற நியாயமான முடிவை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தன் மீது எவ்வளவு அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தாலும், அந்தக் கட்சியின் சார்பாக மேயர் பதவிக்குப் போட்டியிட்டவருக்குத் தமதுவாக்குகளை மொத்தமாகக் கொடுத்த செயற்பாடு இருக்கிறதே-அது அரசியல் நேர்மையின் அழகிய எடுத்துக்காட்டு!

தமிழ் மக்களே தனது கட்சியில் அதிகமாகப் போட்டி போட்டு வெற்றி பெற்றதைக் கௌரவிக்கும் நோக்கில், மாந்தை மேற்குப் பிரதேசபையின் தவிசாளராக ஒரு தமிழ் மகனையே நியமித்து, இனவாதத்திற்கும் தனக்கும் வெகுதூரம் என்பதை நிரூபித்த முன்மாதிரி இருக்கிறதே-அது அரசியற் பொன்னேட்டில் எழுதப்பட வேண்டிய அற்புதமான பண்பாடு!

தனது கட்சியில் வெற்றி பெற்ற ஒரு முஸ்லிம் சகோதரரை அவரது விருப்பத்தோடு இராஜினாமாச் செய்ய வைத்து, அவரது அங்கத்தவர் பதவியைக் கிறிஸ்தவ மகன் ஒருவருக்கு கொடுத்து அழகு பார்த்த விடயம் இருக்கிறதே-அது இன்றைய அரசியற் கணிதத்தில் மெச்சப்பட வேண்டிய ஆச்சரிய வாய்ப்பாடு!

இன்னும் நிறையவே எடுத்துக்காட்டுகளை இங்கே அள்ளியிறைக்க முடியும். ஆனாலும் விரிவஞ்சி விடுத்து இத்தோடு நிறைவு செய்வோம்!