பதைபதைத்துத் தவிக்கிறதே மனது…

(பிருந்தா காரத்)
பாலியல் வன்கொடுமை குறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பாஜக தலைவர்களும், அவர்களது சங் பரிவார் கூட்டாளிகளும் வெளிப்படையாக ஆதரவளித்து வருவது கதுவா மற்றும் உன்னாவ் சம்பவங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும் ‘பசுக் குண்டர்கள்’ கட்டவிழ்த்து விட்ட சூறையாடல்களை, வன்முறைகளை இந்திய தேசம் கண்டுள்ளது. ‘பாலியல் வன்கொடுமை புரிந்தவர்களின் பாதுகாவலர்கள்.’

அச்சிறுமிக்கு வயது எட்டு. இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ள அச்சிறுமியின் புகைப்படத்தில், குழந்தைத்தனம் நிறைந்த விரிந்த கண்களையும், உதட்டோரம் சிந்தும் புன்னகையையும் கொண்ட ஓர் அழகிய முகத்தை காண முடிகிறது. புகைப்படத்தை பார்த்தால் அவள் எட்டு வயதிற்கும் குறைவான வயதுடையவளாகவே தோற்றமளிக்கிறாள். ‘பகேர்வால்’ எனப்படும் நாடோடி சமூகத்தைச் சார்ந்த சிறுமி. ஜம்முவின் கதுவாவில் உள்ள ரசனா என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த இச்சிறுமி, ஜனவரி 10ம் தேதி காணாமல் போனாள்.

கொடூரமான சம்பவம்

தனது குழந்தையை காணவில்லை என இச்சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் ஜனவரி 12ம் தேதி புகார் அளித்தார். ஜனவரி 17ம் தேதி இச்சிறுமியின் உருக்குலைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறப்பு காவல் துறையின் அதிகாரி ஒருவர், ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்களுக்கு உடந்தையாயிருந்து, ஆதாரங்களை அழித்ததற்காக இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டனர். மூன்று மாதங்கள் கழிந்து, அதாவது ஏப்ரல் 9ம் தேதியன்று, இச்சம்பவம் குறித்த விசாரணை மேற்கொண்ட ஜம்மு – காஷ்மீர் மாநில காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதன் உள்ளடக்கம் குறித்த விவரங்கள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளன.இச்சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரம் குறித்து குற்றப்பத்திரிகையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை வாசிக்கின்றபோது பதைபதைத்துப் போகாத எந்தவொரு மனிதமனமும் இருக்க இயலாது. குற்றவாளிகள் நிகழ்த்தியுள்ள முரட்டுத்தனமான கொடுமைகளுக்கு எதிராக சீற்றமும், கடுங்கோபமும் கொள்ளாதவர்கள் எவரும் இருக்க முடியாது. சிறுமியை கடத்தியது, மயக்கமடைந்து நினைவிழக்கச் செய்தது, கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது, காமவெறியைத் தீர்த்துக் கொள்ள மீரட்டிலிருந்து தனது கூட்டாளிகளை அழைத்தது, இக்காமுகன்களில் ஒருவன் மீண்டும் அவளை ‘பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திட விரும்பியதால்’ அவளது மரணத்தின் நேரத்தை தள்ளிப் போட்டது ஆகிய குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.ஆனால், இக்கொடூர நிகழ்வால் துளி கூட மனம் பதைபதைக்காத ஒரு சிலரும் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்திடுவதற்கான நடைமுறையை நாசமாக்கி, தடுத்திட நரம்பு புடைக்க பெருமுயற்சியை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சாதாரணமான நபர்களல்ல. இவர்களெல்லாம் மாநில அரசின் அமைச்சர்கள், பல அமைப்புகளின் தலைவர்கள், நீதியை நிலைநாட்டிட பணியாற்றிடுபவர்களாக எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர்களின் கருப்பு நிற மேலங்கியை அணிந்தவர்கள் ஆவர்.இச்சம்பவம் தொடர்பான கைதுகள் துவங்கியதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக, இப்பகுதி பல்வேறு இயக்கங்களையும், போராட்டங்களையும் கண்டு வருகிறது. சங் பரிவாரத்தோடு இணைக்கப்பட்ட அமைப்பால் உருவாக்கப்பட்ட ‘இந்து ஏக்தா மஞ்ச்’ எனும் பெயரில் செயல்படும் கும்பலால் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எதற்காக இவர்களது போராட்டம் நடத்தப்பட்டது? உள்ளூர் கோவில் ஒன்றின் வழிபாட்டு அறையில் இந்த கொடூரமான சம்பவம் நடந்தது என்பதால் இவர்கள் கோபம் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக யாரேனும் எண்ணக் கூடும். இத்தகைய கொடூரமான செயல்களால் கோவிலின் வழிபாட்டு அறையை களங்கப்படுத்தியவர்களுக்கு கடுமையான தண்டணை அளிக்கப்படுவதற்காக தெருக்களில் இறங்கி போராடுபவர்களா இவர்கள்?உண்மையில் இவர்களது நோக்கம் இவற்றிலிருந்து எல்லாம் வெகு தொலைவில் உள்ளது. நடைபெறுகின்ற விசாரணை தவறானது, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவராக உள்ளபோது, இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்களாக இருப்பதால் இக்கைதுகள் எல்லாம் தவறானவை என்று நிரூபித்திடும் ஒற்றை நோக்கத்துடன் ‘இந்து ஏக்தா மஞ்ச்’ செயல்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டிருப்பது வெறும் சாதாரண ஆட்களல்ல. அம்மாநிலத்தின் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அமைச்சர் இருவர் – வனத்துறை அமைச்சர் லால் சிங் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சந்தர் பர்கஷ் கங்கா – கைதுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் இயக்கங்களில் பங்கேற்றுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சென்ற காவல்துறை அதிகாரிகளை தடுத்திட வழக்கறிஞர்கள் அல்லது அவர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், இவர்களில் யாரொருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாஜக தலைவர்களின் ஆதரவு இவர்களுக்கு இருக்கிறது.பாலியல் பலாத்கார நிகழ்வுகளுக்கு இவ்வாறு வெளிப்படையாக மதச்சாயம் பூசுவது இந்தியாவில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திடும். தில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட ‘நிர்பயா’ ஒருவேளை இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருந்தால், தில்லி நகரத்தின் தெருக்கள் அவருக்கு நியாயம் கோரிப் போராட்டத்தில் இறங்கிய இளம் வயதினரால் நிரம்பியிருக்காது. ஆனால், இந்துக்கள் கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் ‘இந்து ஏக்தா மஞ்ச்’ அமைப்பின் ஆதரவாளர்களால் நிரம்பியிருந்திருக்குமோ?கதுவாவில் பாலியல் பலாத்காரத்தையும், படுகொலையையும் மதச் சாயம் பூசி தலைகீழாக மாற்றுவதற்கான செயல் மட்டும் நடைபெறவில்லை. ஆனால், குற்றப்பத்திரிகை தெரிவித்துள்ளபடி, பாதிப்பிற்கு ஆளான நபர் கூட மதத்தை கவனத்தில் கொண்டே முடிவு செய்யப்பட்டது என்பது வெட்கக்கேடானது ஆகும்.

திட்டமிட்ட சதி

இந்த பாலியல் பலாத்கார நிகழ்வு, ‘பகேர்வால்’ சமூகத்தினரிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி அப்பகுதியிலிருந்து அவர்களை வெளியேறச் செய்திட திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சதியே ஆகும். பழங்குடியினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘பகேர்வால்’ மற்றும் ‘குஜ்ஜார்’ இனத்தவர்கள், அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் ஆவர். இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே இச்சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.குஜ்ஜார் இனத்தைச் சார்ந்தவர்கள் நிலத்தை சொந்தமாக கொண்டிருப்பவர்களாகவும், பெரும்பாலான பிரிவினர் பால் பண்ணை தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். ஆனால், ‘பகேர்வால்’ இனத்தவர்கள், வெயில் காலத்தில் தங்களது கால்நடைகளோடு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும், லடாக்கிற்கும் புலம் பெயர்ந்து, குளிர்காலத்தில் ஜம்முவின் காடுகளுக்குத் திரும்பிச் செல்லும் நாடோடி பழங்குடியினத்தவர்கள் ஆவர். இக்காடுகளில் பல பத்தாண்டுகளாக வசித்து வருபவர்கள் இவர்கள்.இந்துத்துவா தத்துவமும், அரசியலும் ஜம்முவில் மீண்டும் தலைதூக்கி வருவதன் காரணமாக, பகேர்வால்கள் மற்றும் குஜ்ஜார்களுக்கு எதிராகவும் பிரச்சாரங்கள் துவங்கியுள்ளன. இவர்களுக்கான நிரந்தரமான குடியிருப்புகள் ஏதேனும் ஏற்படுத்தப்பட்டால் அது இஸ்லாமியர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் அப்பகுதியின் மக்கள் தொகை புள்ளிவிவரங்களை மாற்றி விடும் எனச் சொல்லப்படுகிறது. குடியுரிமை குறித்த முற்றிலும் பிறழ்வான புரிதல்களும் மற்றொரு வஞ்சகத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசியல் சாசனத்தின் பிரிவு 370 நீக்கப்பட வேண்டுமென சங் பரிவார் அமைப்பு ஒவ்வொரு விஷயத்திலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சங் பரிவார் அமைப்பு, பகேர்வால் மற்றும் குஜ்ஜார் சமூகத்தினர் விஷயத்தில், வன உரிமைகள் சட்டம் 2006ன் கீழ் வன நிலத்தின் மீதான அவர்களது உரிமைகளை மறுத்திட பிரிவு 370ன் கீழ் அடைக்கலம் தேடுகிறது. ஆக, வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பகேர்வால் இனத்தவரின் வன நிலத்தின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக, ஜம்மு-காஷ்மீருக்கு இது இயல்பாகப் பொருத்தப்படுவதை பிரிவு 370 தடுக்கிறது.

மெகபூபா அரசு என்ன செய்கிறது?

தேவைப்படும் வேகத்தில் செயல்படாததற்காக மெகபூபா முப்தி அரசு மிகச் சரியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நியாயம் கிடைப்பதற்கு பதிலாக, முற்றிலும் அநீதியாக மத ரீதியாக தூண்டப்பட்டு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள் ஆதரவளித்து வருகின்றனர். ஆட்சேபணைக்குரிய விதத்திலான அவர்களது செயல்பாடுகளுக்குப் பின்னரும் கூட அவர்கள் மீது அவரது அரசு எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இவ்வழக்கில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை தனது அரசு உத்தரவாதம் செய்யும் என தற்போது அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கு இவர் பதவியில் நீடிக்க அளிக்க வேண்டிய சலுகைகள் எதுவும் எந்தவித தடையையும் ஏற்படுத்தாது என நாம் நம்பிக்கை கொள்வோம். வன உரிமை சட்டம் உணர்வுப்பூர்வமாக அமலாக்கப்பட்டு பகேர்வால் இனத்தவருக்கு நிலம் அளிக்கப்படுவதையும் அவர் உத்திரவாதம் செய்திட வேண்டும். அவரது கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள சங் பரிவாரத்தினரைப் பொறுத்தவரை, பெண்களின் பாதுகாப்பு குறித்து இரட்டை நிலைபாட்டை கொண்டவர்கள் அவர்கள் என்பதை மெகபூபா உணர்ந்து கொள்ள வேண்டும். சமூகத்தின் புரிதலில் பெண்களின் ‘மரியாதை’ என்பது சங் பரிவாரத்தினரின் ஆயுதக் கொட்டிலில் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர் இந்துவாகவும், குற்றம் புரிந்தவர் முஸ்லீமாகவும் இருந்தால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக மக்களைத் திரட்டி, மதரீதியாக அவர்களை மேலும் பிளவுபடுத்திட இச்சம்பவங்களை பயன்படுத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழக்கமான பாணியாகும். இது போன்ற சம்பவங்கள் எதுவும் நிகழாதபோது, வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்துப் பெண்கள் இஸ்லாமிய இளைஞர்களால் துன்புறுத்தப்படுவதாக வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்ட வதந்தியாலேயே முசாபர்நகரில் நடைபெற்ற மிக மோசமான மதரீதியான வன்முறைகள் துவங்கின. அதேபோல ஜாம்ஷெட்பூரிலும் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழாதபோது கலவரம் தூண்டப்பட்டது. இது பின்னர் காவல்துறையினராலும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இதுபோன்ற பெரும்பாலான சம்பவங்களில், இத்தகைய குற்றங்களை இழைப்பவர்களும், பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால், அப்போது சங் பரிவாரத்தினரின் பங்கு எத்தகையதாக இருக்கிறது?

உன்னாவ்வில் நடப்பது என்ன?

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் தற்போது என்ன நடைபெற்று வருகிறது? அங்கு ஆட்சியதிகாரத்தில் உள்ள பாஜக அரசைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குறித்த புகாரைப் பதிவு செய்திட 17 வயதுப் பெண் முயற்சி செய்தாள். கடந்த ஜுன் மாதத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டாள். எனினும், அவள் பல முயற்சிகளை மேற்கொண்டபோதும், அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்து விட்டனர். மாநில முதல்வரின் வீட்டின் முன்பு எதிர்ப்பியக்கத்தை நடத்திட அவள் நிர்ப்பந்திக்கப்பட்டாள். ஆனால், அதன் பிறகும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக, அப்பெண்ணும், அவளது குடும்பத்தினருமே துன்புறுத்தப்பட்டனர். காவல்துறையினரின் சிறைக் காவலில் அவளது தந்தை இறந்தார். அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்ட அந்த இளம்பெண், அதிகார பலம் படைத்த, முதலமைச்சரால் ஆதரிக்கப்படும் நபருக்கு எதிராக புகாரளிக்கத் துணிந்த காரணத்தால் தனது தந்தை கைது செய்யப்படுவதையும், அவர் கொல்லப்படுவதையும் காண நேரிட்டது. அதிகாரபலம் படைத்தவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை பதிவு செய்திட துணிவு இல்லாது செய்திட இது போதுமானதாகும். பொதுமக்கள் வெகுண்டெழுந்த பின்னர்தான், அவளது தந்தையின் இறப்பிற்கான சட்டமன்ற உறுப்பினரின் சகோதரன் கைது செய்யப்பட்டு, சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அந்த சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்படவில்லை. மேலும், அப்பெண்ணைப் பற்றியும், அவளது குடும்பத்தினரைப் பற்றியும் மிக மோசமான, அவதூறான அறிக்கைகளை அவர் சுதந்திரமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.பாலியல் வன்கொடுமை குறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பாஜக தலைவர்களும், அவர்களது சங் பரிவார் கூட்டாளிகளும் வெளிப்படையாக ஆதரவளித்து வருவது கதுவா மற்றும் உன்னாவ் சம்பவங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும். “பசுக் குண்டர்கள்” கட்டவிழ்த்துவிட்ட சூறையாடல்களை, வன்முறைகளை இந்திய தேசம் கண்டுள்ளது. “பாலியல் வன்கொடுமை புரிந்தவர்களின் பாதுகாவலர்கள்” எனும் புதிய வடிவத்திலான அரசியல் தற்போது தோன்றியுள்ளது. “மனிதர்களாக நாம் அவளை இழந்துவிட்டோம்” என கதுவா பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் வி.கே. சிங் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது டிவிட்டர் பதிவில் “நாம்” என அவர் குறிப்பிட்டிருப்பது, ஜம்முவிலும் உத்தரப்பிரதேசத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்காமல், இக்குற்றத்தை புரிந்தவர்களை இன்றும் கூட ஆதரிக்கின்ற அவரது கூட்டாளிகளையா என்பதை அவர் தெளிவுபடுத்திட வேண்டும். இவர்களை மனிதர்களாக மதித்திட இயலுமா என்பது வெளிப்படையாக எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகும்.இத்தகைய கொடூரமான குற்றங்களை புரிந்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களால் பாதுகாக்கப்படுகிறபோது, பிரதமர் இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மௌனியாக இருக்கிறபோது, ‘பெண் குழந்தைகளை பாதுகாத்திடுங்கள், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்திடுங்கள்’ என்ற பிரச்சாரமும், ‘பெண்களின் ஆளுமை’ குறித்து பிரதமர் வெளிப்படுத்திடும் வார்த்தைகள் எல்லாம் வெற்று ஆரவாரமான முழக்கங்களாகவே உள்ளன.

(நன்றி : ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் 13.4.18)

தமிழில் : எம்.கிரிஜா