சம்பந்தனால் முடியாதா?

‘வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், வடக்குக்கு பொருத்தமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்து அதனை நிறுத்த முடியும் தானே, பின்னர் ஏன் வீணாக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றுகின்றீர்கள்?’ என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்றது. இதன்போது, வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதுவரையில் அந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவைக் கோருகின்ற அவசர பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தவநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பினார். ‘பிரேரணையை நிறைவேற்ற காலத்தை இழுத்தடிப்புச் செய்யாமல், உடனடியாக எதிர்க்கட்சித் தலைவரே ஜனாதிபதியுடன் கதைத்து நிறுத்த முடியும் தானே’ என்றார். அதற்குப் பதிலளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ‘இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டு போகின்றோம்’ என்றார்.