தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில், யாழ்ப்பாணத்தில், உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில், வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட விதம், இந்த அமைப்பை உருவாக்கியுள்ளவர்களின் பின்னணி, இதன் அடிப்படை நோக்கம் என்பன நீண்ட விவாதங்களுக்குரிய விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

திரைமறைவாக – முதலமைச்சரின் மொழியில் சொல்வதானால், ‘கரவாக’ நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு தமக்குத் தாமே ஜனநாயக முலாம் பூசிக்கொள்வது அபத்தமானது. ஜனநாயகம் என்பது, மூடிய அறைக்குள், முடிவுகளை எடுப்பதல்ல. அந்தவகையில் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை இரகசிய நிகழ்ச்சி நிரலுக்குட்பட்ட ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது. என்னதான் நியாயங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும், தமிழ் அரசியல் பரப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும், முரண்பட்டுக் கொண்டிருந்தவர்களையும், அதன் மீது விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருந்தவர்களையும் உள்ளடக்கியே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது- இதற்கு அரசியல் நோக்கங்கள் கிடையாது என்றெல்லாம், விளக்கம் கூறப்பட்டுள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ் சிவில் சமூகம் ஒன்று வலுவாக உருப்பெற வேண்டும் என்பது முக்கியமே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவும், அதுபற்றி அரசாங்கத்துடன், மக்கள் பிரதிநிதிகளுடன், சர்வதேச சமூகத்துடன் வெளிப்படைத்தன்மையுடன் உரையாடக் கூடியதொரு சுதந்திரமான- நடுநிலையான சிவில் சமூக கட்டமைப்பே தேவையானது. தமிழ் மக்களின் நலன்களைச் சார்ந்து, அனைத்துத் தரப்பினருடனும், பாரபட்சமின்றிப் பேசத்தக்க நடுநிலையானதொரு சிவில் சமூகத்தின் அவசியம் தான், இப்போது தோன்றியுள்ளது. வட-கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலகட்டங்களில், பிரஜைகள் குழுக்கள் மாவட்ட, பிரதேச மட்டங்களில் கூடுதல் செல்வாக்குப் பெற்றிருந்தன. அந்தக் காலகட்டத்தில், பிரஜைகள் குழுக்கள் மக்களின் மதிப்புக்குரியவையாக இருந்தன. மக்களின் பிரச்சினைகளை, இந்தியப் படையினர், அதிகாரிகள் மட்டுமன்றி, அரசியல் ரீதியாகவும், கொண்டு செல்வதற்கும் அவை காரணமாயின.

சிவில் சமூகத்தில் அப்போது மதிப்புக்குரியவர்களாக இருந்த சிவானந்தசுந்தரம் போன்ற பலர், இத்தகைய முயற்சியில் தமது உயிர்களை இழக்கவும் நேரிட்டது. அந்தக் காலகட்டத்தில் சிவில் சமூக அமைப்புகளை இயங்கவிடாமல் தடுத்த- சிவானந்தசுந்தரம் போன்றவர்களின் கொலைகளுக்குக் காரணமான அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட, இப்போது, தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பின் உருவாக்கத்தில் பங்களித்திருக்கின்றனர் என்பது காலத்தின் மாற்றம் தான். உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கு அரசியல் நோக்கமோ, அரசியல் எதிர்பார்ப்போ கிடையாது எனக் கூறப்பட்டிருப்பினும், இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் பலர் அரசியலில் ஈடுபடுகிறவர்கள் தான். அரசியலில் இருந்து கொண்டு அல்லது அரசியல் பதவிகளை வகித்துக் கொண்டு, சிவில் சமூகத்தின் பங்காளியாக இருக்க முடியாது.

அரசியலில், இல்லாத- அரசியல் எதிர்பார்ப்புகள் இல்லாதவர்கள் தனியாக ஒரு வலுவான சிவில் சமூக கட்டமைப்பை உருவாக்கியிருந்தால், அது தமிழ்ச் சமூகத்தின் தேவையை ஈடு செய்யும் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால், அரசியலிலும், அரசியல் பதவிகளிலும் இருப்பவர்கள், எந்த அரசியல் நலனுமின்றி, பொதுநோக்கில் ஒன்றிணைந்திருப்பதாக கூறியிருப்பது நகைப்புக்குரியது.

இவர்கள் அடுத்த தேர்தலில், தமது தேவைகளுக்காக இந்த பேரவையைப் பயன்படுத்தமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆக, உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை என்பது, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கும் என்ற உறுதிமொழி எந்தளவுக்கு நடைமுறைச்சாத்தியம் என்பது சந்தேகமே. அரசியலில் இருப்பவர்களையும் இதில் இணைத்துக் கொண்டு செயற்படும் வலுவான அமைப்பாக- இதனை செயற்படுத்த வேண்டும் என்று இதன் அமைப்பாளர்கள் நினைத்திருந்தால், அனைத்துத் தரப்பினரையும் இதில் உள்வாங்கியிருப்பர். அனைத்துத் தரப்பினரையும் இணைத்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் ஒரு தீர்வைத் தயாரிக்கும் இதயசுத்தி இருந்திருந்தால், நான்கு மாதங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மட்டுமன்றி, பிரதிநிதித்துவ வாய்ப்பை இழந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பாரபட்சமின்றி இந்த அமைப்பு இணைத்துக் கொண்டிருக்கும்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 27 பேருக்கு மட்டும் தான் தமிழ் மக்களின் மீதும், அவர்களின் நலன்களின் மீதும், உரிமைகளின் மீதும் அக்கறை இருப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது.

‘கட்சி அரசியல் என்ற நிலையைக் கடந்து தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள் தான் இங்கு கூடியிருக்கிறோம்’ என்ற முதலமைச்சரின் கருத்து மற்றவர்கள் அந்த உண்மையை உணராதவர்கள் என்ற பேருண்மையைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறது.

இது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும், அவர்களின் ஜனநாயக ரீதியான முடிவுகளையும், கொச்சைப்படுத்துவதாகவே உள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையீனம் தான் இந்த அமைப்பு உருவாக காரணம் என்று நல்லை ஆதீனம் கூறுகிறார்.

யாருக்கும் தெரியாமல் ஒரு சிலர் பேசி முடிவெடுப்பதால் தான், இந்த அமைப்பை உருவாக்க வேண்டி வந்தது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

இந்த அமைப்பு உருவாக சம்பந்தனே காரணம் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். இவையெல்லாமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையிலானதாகவே உள்ளன.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் போக்கு சரியில்லை என்பதால் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதன அர்த்தம், கூட்டமைப்புக்கு எதிரான ஓர் அமைப்பு என்பதாகவே இருக்கும். எனினும், இதனை இந்த அமைப்பு வெளிப்படையாக- பகிரங்கமாக முன்வைப்பதற்குக் கூட முதுகெலும்பற்றதாகவே இருக்கிறது. ஏனென்றால், நாளை கூட்டமைப்பின் தயவு மட்டுமன்றி, அதன் தலைமைப் பதவி பற்றிய கனவும் கூட பலருக்கு இருக்கிறது. அதனால், வெளிப்படையாக கூட்டமைப்புடன் மோதப் போகிறோம் என்று கூறாமல், அதேவேளை, கூட்டமைப்பின் தலைமைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டும்.

இன்றைய நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, அரசியல் கட்சிகள் அனைத்தும், ஒரே தளத்தில் இருந்து செயற்படுவதும், பொது அமைப்புகள், ஒரே தளத்தில் இருந்து செயற்படுவதும் அவசியம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை, இந்த இரண்டும் கலந்த ஒன்றாக பிரசவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பு அரசியல் சார்புடையதற்றதாக இருப்பதாயின், செயலில் தான் அதனை நிரூபித்திருக்க வேண்டும்.

யாருக்கும் தெரியாமல், மூடிய அறைக்குள் பேச்சு நடத்தி விட்டு, ஏற்கனவே இரகசியமாக திட்டமிட்டதற்கமைய எல்லாவற்றையும் முடித்து விட்டு, அரசியல் சார்புமில்லை, யாருக்கும் எதிரானவர்களுமில்லை என்று தத்துவம் பேசுதல் பொருத்தல்ல.இந்த அமைப்பின் தோற்றமும், இதுவரையான செயற்பாடுகளும், இதனை மக்கள் மத்தியில் சந்தேகத்துக்குரிய ஒன்றாகவே பார்க்க வைத்திருக்கிறது. பலர் இதனைக் கூட்டமைப்புக்கு சவாலானது போட்டியானது என்கின்றனர். இன்னும் சிலர், அரசியல் நோக்கில்லையே என்று இந்த அமைப்பு கூறிய பின்னரும், கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏன் கொந்தளிக்கின்றனர் என்று கேட்கின்றனர்.

இது கூட்டமைப்புக்கு போட்டியாக- சவாலாக இருக்குமா என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது.

எனினும், அவ்வாறானதொன்றாக இருக்க வேண்டும் என்பதே, கூட்டமைப்பு மீது அதிருப்தி கொண்டோரினதும், இந்த அமைப்பின் உருவாக்குனர்களினதும் பெருவிருப்பாகும். அதைச் சாதிக்க முடியுமா என்பதை, இத்தகையதொரு அமைப்பை உருவாக்கி விட்டதன் மூலம் மட்டும், முடிவு செய்ய முடியாது.

அதற்கும் அப்பால், மக்களின் ஆதரவும், தேவையென்பதை, மறந்து விடலாகாது.

தமிழ் மக்கள் தமது ஜனநாயக ரீதியான அரசியல் ஆணையை வழங்கி இன்னமும், நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில், மக்களின் அந்த ஆணையின் மீது கேள்வியை எழுப்புவது அபத்தமான அரசியல்.

அதேவேளை, இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையில், தனது இணைத்தலைமை ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் இத்தருணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

‘தனிமனித தலைமைத்துவம் தவறானது என்ற கருத்துக்களை எமது இணைத் தலைமை எடுத்துக் காட்டுகிறது. சகல மட்டங்களிலும், கருத்துப் பரிமாற்றம் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது எமது இணைத்தலைமை.’ என்று அவர் கூறியிருந்தார். இது எதனைக் காட்டுகிறது என்றால், அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைத்தலைமையை எதிர்பார்க்கிறார் என்பதை தான்.

இதுவரையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையில் தான், முரண்பாடுகள் வெளிப்பட்டிருந்தன.

ஆனால், தனிமனித தலைமைத்துவம் தவறானது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளதன் மூலம், சம்பந்தனின் தலைமைத்துவத்தையும் அவர் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு இணைத்தலைவராக வழங்கப்பட்ட நியமனங்களை அவர் நிராகரித்திருக்கிறார்.

இது இணைத்தலைமை விவகாரத்தில் முதலமைச்சரின் இருவேறு முகங்களைக் காட்டியிருக்கிறது.

அதேவேளை, தமிழ் மக்கள் பேரவை தமது இலக்கை எட்ட முடியுமோ இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கான களமாகப் பலருக்குப் பயன்பட்டிருக்கிறது. பயன்படப் போகிறது என்பது மட்டும் உண்மை.
(சஞ்சயன்)