மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் வாழ் உயிரினம்

நேற்று வியாழக்கிழமை  (22)  பாம்பன் தெற்கு  மன்னார் வளைகுடா தோணித்துறை கடற்கரையில்  இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனச்சரகர் மகேந்திரனுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பறவைகள், நாய் உள்ளிட்டவைகள் இறந்த கடல் பசுவின் உடலை சேதபடுத்தாமல் இருக்க  கடல் பசு மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டு மூடி வனத்துறையினர் இரவு முழுவதும் பாதுகாத்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆண் கடல்  பசு எனவும் அது சுமார் 1500 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் எனவும், கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா?  அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம்  தெரியவரும் என மண்டபம் வனச்சரகர்  தெரிவித்தார்.

கடற்கரை ஓரம் மீன் வனத்துறையினரின்  தடையை மீறி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள்  படகின் மீது மோதி  கடல் பசு இறந்திருக்கலாம் என அப்பகுதியில்  மீன் பிடிக்கும் நாட்டு படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.