நிரந்தரத் தீர்வை நோக்கி நகரட்டும் கடலோடிகளின் பிரச்சினை!

இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. அவரது மரணத்துக்கு நீதி கேட்டு ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியின் பேரில் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கை, தமிழக அரசுகளின் சார்பில் சில தற்காலிக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தொடர்கதையாகி வரும் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

கடந்த 7-ம் தேதி சர்வதேசக் கடல் எல்லையில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் காயமடைந்தார். இதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில், ‘சம்பந்தப்பட்ட இலங்கைக் கடற்படை வீரர்களைக் கைது செய்ய வேண்டும், இறந்த மீனவர் குடும்பத்துக்கு இலங்கை அரசிடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில், பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்த மீனவருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. கூடவே, ஏற்கெனவே இலங்கைக் கடற்படை சிறை பிடித்திருந்த 88 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். முக்கியமான கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. அடையாள உதவிகளைச் செய்வதும், சில அறிவிப்புகளை வெளியிடுவதும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது. எனினும், ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கிறது.

விசைப்படகு மீனவர்களின் பிரச்சினைகள் பற்றி ஆட்சியாளர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததையே இவை காட்டுகின்றன. ராமேஸ்வரம் கடல் பகுதி மிகக் குறைந்த பரப்பு கொண்ட, அதேநேரத்தில் மிகமிக அதிக படகுகள் தொழில்செய்கிற பகுதி. இங்குள்ள கடல்வளம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்வது ஒன்றே ஒரே தீர்வு. ஆனால், சிறு படகுகள் மூலம் கரையோரத்திலும், ஆழமில்லா கடல் பகுதியிலும் மீன்பிடிக்கிறவர்களால் உடனடியாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு மாறிவிட முடியாது. அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்கப்பட வேண்டும், பயிற்சிக் காலம் முழுக்க அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஊக்கத்தொகை வழங்குவது அவசியம்.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தேவையான படகு, வலை வாங்குவதற்கான கடனுதவி போன்ற விஷயங்களிலும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். மீன்களைச் சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி போன்றவற்றுக்கும் அரசின் உதவிகள் தேவை. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலிருந்து தொழில்முறை மீன்பிடிப்போரை வெளியேற்றிவிட்டு, பாரம்பரிய மீனவர்களை மட்டுமே கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். நிரந்தரத் தீர்வு ஒன்று நிச்சயம் இருக்கிறது. அதை அரசு உருவாக்கித் தர வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன, மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள். இம்முறையாவது, அரசியல் கட்சிகளும், மத்திய – மாநில அரசுகளும் உடனடியாக வினையாற்ற வேண்டும்!