மே தினம் அது உழைப்பாளிகளின் உரிமைகான போராட்ட தினம்

(சாகரன்)

19ம் நூற்றாண்டின் இறுதியில் 8 மணி மட்டும் வேலை கோரிப் போராட்டத்தை ஆரம்பித்த தொழிலாளி வர்க்கம் பல உயிர் தியாகங்களின் மத்தியில் ஓரளவிற்கேனும் சில உரிமைகளை அன்று தனதாக்கிக் கொண்டது வரலாறு. முதலாளித்துவத்தின் தாயகமான அமெரிக்காவிலேயே இந்தப் போராட்டத்திற்கான பொறி தட்டி வைக்கபப்பட்டது என்பது முதலாளித்துவ தாயகத்தில் மனித உழைப்பு சுரண்டல்கள் அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தூரம் உழைப்பாளிகளை வாழும் நிலையிலேயே கொன்று குவித்துக் கொண்டிருந்தது என்பதற்கான சான்றாக கொள்ளலாம்.
அன்றைய கால கட்டத்தில் அமெரிக்கா கறுப்பின மக்களை அடிமைகளாக கால்களை சங்கிலியால் பிணைத்து வேலை வாங்கிய யுகம். கிரேக்க சாம்ராஜ்யமும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாஜிகளும் ரஷ்யாவின் முடிக்குரிய மன்னன் ஜார் மன்னனின் ஆட்சிகளும் கொடிகட்டிப் பறந்த காலம் அது. அமெரிக்க அப்போது முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக வளர்ச்சயடைந்து வரும் நிலையில் மட்டும் இருந்து. நிலப் பிரபுவத்தின் வளர்சிக் காலத்தில் ஆண்டான் அடிமை நிலைகளே பெரிதும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகில் ஏற்பட்ட தொழிற் புரட்சிக்கு பின்பே தொழிலாழிகளின் சுரண்டல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றவோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு இன்றைய நிலமைகள் எற்பட்டிருக்கின்றன.


8 மணி நேரம் என்ற கோரிக்கையுடனான போராட்டம் அன்று வெற்றியடைந்ததா? என்று இன்று கேள்வி எழுப்பும் நிலையிலேயே நாம் இன்று இருக்கின்றோம். சமூக மாற்ம் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்படாத வெற்றிகள் நிரந்தரமற்றவை என்பதற்கு இது நல்லதோர் சான்றாகும். மனித உடல் விஞ்ஞான ரீதியில் 8 மணி நேரத்திற்கு உழைப்பு, 8 மணி நேரம் பொழுபோக்கு 8 மணி நேரம் ஓய்விற்கான தூக்கம் என்று உயிரியல் விஞ்ஞானம் முலம் நிரூபிக்கப்பட்டாலும் இந்த விஞ்ஞான முடிவை தூக்கியெறிந்து விட்டு நவீன முதலாளித்துவம் இன்று தினமும் வேலை அதுவும் 8 மணித்தியாலங்களுக்கு மேல் 14 மணி நேரம் வரை வேலை என்ற நிலைக்கு இந்த மனித குலத்தை தள்ளிவந்திருக்கின்றது என்பது மிகையானது அல்ல.

விரும்பிய நேரமளவிற்கு வேலை செய்யலாம் அது 8 மணி நேரத்தையும் விடக் குறைவாகவும் வேலை செய்யலாம் என்று வாதிடும் நவீன முதலாளித்துவம் வாழ்க்கை செலவை சமாளிக்க 8 மணி நேரத்திற்கு மேல் அதுவும் தினமும் வேலை செய்தே ஆகவேண்டும் என்ற நிலையிற்கு கொண்டுவந்து விட்டது. உற்பத்தி செய்பவன் விலையைத் தீர்மானிக்காமல் இலாபம் ஒன்றே என்று உழைப்பைச் சுரண்டுபவன் விதிக்கும் விலையில் தானே உற்பத்தி செய்த பொருட்களை வாங்கிக் கொள்ள முடியாமல் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளிகள் பொறிகளுக்கும் மாட்டியிருக்கின்றனர் தற்போது.

அதுவும் தற்போதைய இளம் சந்ததியினரை இந்த 14 மணநேர வேலை நியமமானது, நியாயமானது என்ற சூழ்ச்சி வலைக்குள் விழுத்தும்; வேலைகளையும் நவீன் பல்தேசியக் கம்பனிகளின் கைப்பிள்ளையாக வளர்ந்திருக்கும் முதலாளித்துவம் செய்து கொண்டு இருக்கின்றது. இதன் வெளிப்பாடுகளை இலங்கை இந்தியா போன்ற வளர் முகநாடுகளில் அதிகம் காணமுடியும். இலக்கு ஒன்றை வைத்து அருச்சுனனுக்கு வில் வித்தை கற்பித்து துரோணாச்சாரிகள் நியமத்தில் கோடியில் ஒரு அருச்சுனன் மட்டுமே சாத்தியம் என்பதை மறைத்து நீங்கள் எல்லோரும் அருச்சுனன் ஆகலாம் என்று இயல்புக்கு மாறாக ஆசையூட்டி வேலை வாங்கும் தந்திரங்களை செய்தும் வருகின்றனர். இதில் எமது இளம் சந்ததியினர் நாம் எல்லோரும் அருச்சுனன் ஆகலாம் என்ற கற்பனைக்குள் வீழந்து வாழ்வைத் தொலைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

உற்பத்தியில் ஈடுபடாமல் உற்பத்தியாளனுக்கும் நுகர்வோருக்கும் இடையில் தரகு மூலம் தனது ஆதிகத்தை செலுத்திவரும் புதிய முதலாளித்துவம் 14 மணி நேரத்திற்கு மேல் தினமும் வேலை செய்தால்தான் சீவிக்க முடியும் என்ற நிலை மனித குலத்திற்கு பல தளங்களிலும் ஏற்படுத்தியிருக்கின்றது. சில காலம் 14 மணி நேரம் வேலை செய்தால் நீயும் பில் கேற்; ஆகலாம் இதன் பின்பு நீ வேலையே செய்யாமல் சௌகரியமாக வாழலாம் என்ற நஞ்சு கலந்த தேனை மத்தியதர படித்த இளைஞர்கள் இடையே பருக்கி வருகின்றது. இடையிடையே எலும்புத் துண்டுகள் போல் கம்பனி செலவில் இனாமாக சுற்றுலா என்று போதையூட்டி இந்த உழைக்கும் பகுதியில் மூளைகளை சலவை செய்து மழுங்கடித்திருக்கும் நிலைகளையும் அதிகம் காண முடியும்.

ஒரு காலத்தில் தனது காலணி ஆதிக்கத்தில் இருந்த மூன்றாம் உலக நாடுகள், வளர்முக நாடுகளில் தமது படைகளை மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தமது கொல்லைப்புறத்திற்கு அழைத்துக் கொண்ட நாடுகள் இன்று நவீன முதலாளித்துவத்தின் மூலம் தமது பிரதிநிதிகளை அவ் அவ் நாடுகளில் நியமித்து மிகக் குறைந்த கூலியில் உழைப்பாளர்களின் உழைப்பை சுரண்டி வருகின்றது. இதன் புதிய வடிவங்களே பல நாடுகளிலும் வியாபித்திருக்கும் பல் தேசியக் கம்பனிகளின் கிளைகள் ஆகும். அது வால்மாட் என்றும் பூட் சிற்றி என்றும் இன்டோ சுசிக்கி என்றும் டாட்டா பில்லா என்றும் எங்கும் எதிலும் வியாபித்திருக்கின்றன.

இன்னொரு புறத்தில் இந்த நாடுகளின் அறிவு சார்ந்த உழைப்பை தனது நாட்டிற்கு மனிதர்களை பண்டங்களைப் போல் இறக்குமதி செய்து அறிவைச் சுரண்டல்களைச் செய்கின்றன இந்த வளர்ச்சியடைந்த நாடுகள். இந்த அறிவியல்கள் தமது வறிய நாடுகளையும், வளர்முகநாடுகளையும் வளமாக்க அந்தந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக பி.எம்.டடிள்யூ. லெக்சஸ், ஐபோன் கனவுகளில் தம்மை ஒருவகை அடிமை சாசனத்திற்குள் உள்படுத்தி சேவகம் செய்வதில் திருத்திப்படுத்தும் கபட வேலையை வளர்ந்த நிலையில் உள்ள முதலாளித்துவம் செய்தும் வருகின்றது.

இந்த புதிய முதலாளித்துவம் முதுகில் கூனல் விழுந்த பின்பும் தமது ஓய்வுக்காலத்திலும் ஒய்வு பெற முடியாமல் 65 வயது வரைக்கும் அல்லது இதற்கும் மேலும் வேலை செய்தே ஆகவேண்டும் என்று நிர்பந்தங்களை ஏற்படுத்தியும் விட்டது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதனை 65 வயதிற்கு மேலும் வேலை செய்யும் வலுவில் வைத்திருக்கின்றது என்று தனது நியாயத்தை முன்வைக்கும் இந்த பல்தேசிய முதலாளித்துவம் கூடவே இளைஞர் படையின் வேலை பெறும் வயதை தள்ளி வைப்பதில் வேலைக்காக எதனையும் கேட்காமல் ஆமாம் போடும் இளைஞர் அணிகளை இதன் மூலம் உருவாக்குவதில் தற்காலிக வெற்றிகளையும் கண்டுள்ளது.
55 வயதிற்கு மேலேயும் ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவ விஞ்ஞான முன்னேற்றம் வேலையில் ஓய்வு பெற்ற பின்பு தமக்கான ஆரோக்கியமான மகிழ்சியான அர்த்தம் உள்ள ஓய்வு வாழ்க்கையை அனுபவிக்க பயன்படுத்தவே ஒழிய மாறாக மாடுகள் போல் உறவுகளை மறந்து குடும்ப உறவை சிதைத்து தலைமுறைகளுக்கிடையேயான அன்னியோன்யத்தை குறைப்பதில் முதலாளித்துவம் கண்ட வெற்றிகள் தற்காலிகமானவையே.

கியூபாவின் நிறைவான வாழ்க்கை (முதலாளித்துவம் இதனை ஏழ்மையான வாழ்வு என்கின்றது) முறைக்கான சான்றுகளும், ரஷ்யாவில் அண்மைக் காலங்களில் இளைஞர் மத்தியில் பெருகிவரும் சோசலிசத்தின் மீதான திரும்பிப் பார்வைகளும், என்னவோ எல்லாம் செய்து எதுவும் செய்ய முடியாமல் போன தென் அமெரிக்க. லத்தீன் அமெரிக்க நாடுகளின் சீரிய நடைகளும் வியட்நாம் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகள் சொல்லும் செய்திகளும் எமக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றன.

இலங்கையில் 1978 களில் ஜேஆர் ஜெயவர்தனாவின் தொழிற் சங்கங்களுக்கு எதிரான நடவடிக்கை இலங்கையில் தொழிலாளர் நலன்களை சின்னாபின்னப்படுத்தியதில் தற்காலிக வெற்றிகளை கண்டாலும் இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு அப்பால் 11 வேறு வேறு கட்சி, தொழிற்சங்கங்களின் மேதினக் கூட்டங்கள் சில நம்பிக்கைகளை அளிக்கின்றன. இவற்றில் எல்லாமே சிங்களப் பகுதியை மையமாக கொண்டிருப்பதுவும் இங்கு கவனிக்க தக்கது. இன்னமும் இலங்கையில் இருக்கும் இரு மொழி பேசும் பகுதியினரிடத்தில் பெரும்பான்மை மொழி பேசுபவர்களே அதிகம் தொழிலாளர் உரிமைபற்றி களியாட்டம் என்றாலும் மே தினத்தை முக்கியத்துடன் போராடும் தினமாக அனுஷ்டிக்கின்றனர் இதில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது தாம் என்று கூறுக் கொள்பவர்கள் 1980 களில் ஈழ மாணவர் பொது மன்றத்தின் மேதினக் கூட்டதை பழிக்கும் நிலையிலேயே இன்றும் இருப்பது கண்டனத்திற்குரியது வருதத்திற்குரியது.

மீண்டும் 8 மணி வேலை கோரிப் போராடும் நிலைக்கு தொழிலாளி வர்கம் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் இந்த மேதினத்தின் கோஷமாக உலகத் தொழிலாளர்களே மனித வாழ்விற்கு 8 மணி நேரமே வேலை நேரமாக்கப்படவேண்டும் என்று உறுதி பூண்டு இதனை நிலை நிறுத் தொடர்ந்தும் போராடுவோம்.
(மே 02, 2016)