வெனிசூலா தேர்தலில் சோசலிஸ்டுகள் அமோக வெற்றி!

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் 23 மாநிலங்களுக்கு நொவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைiமையிலான ஆளும் ஐக்கிய சோசலிச கட்சி 20 மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் தலைநகர் கரகாசும் அடங்கும். இருந்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மதுரோவின் வெற்றியை ஊழல் மோசடியால் பெறப்பட்டது என அமெரிக்கா சித்தரித்தது போல இந்த மாநிலத் தேர்தல்களையும் அமெரிக்கா அதனடிப்படையில் குறை கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தக் குற்றசச்சாட்டு அடிப்படையற்ற, வெறும் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட ஒன்று. 23 மாநிலங்களில் மோசடி மூலம் வெற்றி பெற்றவர்கள் ஏன் மற்ற மாநிலங்களையும் கூட கைப்பற்றாமல் விட்டு வைத்தார்கள்?

அமெரிக்கா என்னதான் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினாலும், அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்தலைக் கண்காணித்துள்ளனர். ஆனால் அவர்கள் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதுமட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக வெனிசூலாவில் நடைபெற்று வந்த தேர்தல்களைப் புறக்கணித்து வந்த வலதுசாரி எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்தலில் பங்குபற்றியுள்ளனர். அவர்களை இந்தத் தேர்தலில் பங்குபற்ற வலியுறுத்தி நோர்வேயும் நெதர்லாந்தும் அவர்களுடன் மெக்சிக்கோவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்திருந்தனர். எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அமெரிக்காவின் ஆதரவு நாடுகளான நோர்வேயும் நெதர்லாந்தும் அவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முறைகேடாக நடந்தது என எதிர்க்கட்சிகளோ அல்லது அவர்களை வலியுறுத்திப் போட்டியிட வைத்த இரு ஐரோப்பிய நாடுகளோ கூட இதுவரை குற்றச்சாட்டுகள் எதையும் முன் வைக்கவில்லை.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் தேசிய சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் இந்தத் தேர்தலைக் கண்காணிக்க வெனிசூலா சென்றிருந்தனர். அவர்கள் தலைநகர் கரகாஸ் உட்பட சில மாநிலங்களில் உள்ள 12 வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பை அவதானித்தனர். அவர்கள் பின்னர் தமது கண்காணிப்பு சம்பந்தமாக அறிக்கையிடுகையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:

‘எமது அவதானிப்பில் தேர்தல் நடுநிலைமையாகவும், வெளிப்படையாகவும் இருந்ததுடன், வாக்காளர்கள் நம்பிக்கையுடன் இருந்ததையும் காண முடிந்தது. தொழில்நுட்ப ரீதியில் பார்க்கையில் தேர்தல் முறைமை அடிப்படையில் வெளிப்படையானதாகவும், செயல்படும் சக்தியைக் கொண்டதாகவும் (வாக்களிப்பு ஊழியர்கள், இணைப்பாளர்கள், கடமைக்கான தலைவர்கள்), நல்ல வாக்களிப்பு இயந்திரங்களுடன் ஒன்றுபட்ட தேர்தல் முறையைக் கொண்டதாகவும் இருந்தது’.

மேலும் அவர்கள் கூறுகையில்,

‘எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் கூட வாக்களிப்பு முறையில் நம்பிக்கை கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலதிகமாக, வாக்களிப்பு நிலையங்களில் அது திறக்கப்பட்ட போதும் முடிக்கப்பட்ட போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் சட்டபூர்வமானவை என்பதும் எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் பங்குபற்றியதிலிருந்தும், சாட்சியங்களிலிருந்தும் தெரிய வந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வெனிசூலாவின் தேர்தலைக் கண்காணித்த அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பாளர்களுக்கோ அல்லது தேர்தலில் பங்குபற்றிய எதிர்க் கட்சியினரின் தெரியாத ‘தேர்தல் மோசடி’ அமெரிக்காவின் காமாலைக் கண்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது என்றால், அது அமெரிக்காவைப் பீடித்துள்ள ஏகாதிபத்தியத் தன்மையுள்ள, ஜனநாயக விரோதமான அடிப்படையான நோயின் தாக்கமே தவிர வேறு எதுவுமல்ல.