இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் ஐ. எஸ். பயங்கரவாதிகள்

துருக்கியில் அக்டோபரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்த பயங்கரவாதிகள் அடுத்து பிரான்ஸில் நவம்பரில் தமது இரத்த வேட்டையை அரங்கேற்றி இருக்கின்றனர். ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான கொடூரமான அமைப்பாக உருவெடுத்திருக்கிறது, ஐ.எஸ். உலகம் இன்றைக்கு எப்படி ஐ.எஸ் அமைப்பை அச்சுறுத்தலோடு பார்க்கிறதோ. அதே அச்சுறுத்தலோடும் இன்னும் கூடுதல் சங்கடத்துடனும் பார்க்கிறது இஸ்லாமியச் சமூகம்.

இவர்கள் எந்த இஸ்லாமின் பெயரைத் தங்கள் அமைப்புக்குச் சூட்டியிருக்கிறார்களோ, அந்த இஸ்லாமிற்கும் இவர்களுக்கும் எள் முனையளவும் தொடர்பு இல்லை. உண்மையில் இஸ்லாத்தின் அடிப்படைகளுடனே முரண்பட்டு நிற்கிறது ஐ.எஸ்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு ஓரிறைத் தத்துவம். திருக்குர்ஆனும், நபிகள் வழியுமே இஸ்லாத்தின் ஆதாரச் சுருதிகள், திருக்குர்ஆனிலும் சரி, நபிகள் காட்டிய வழிகளிலும் சரி, பயங்கரவாதத்துக்குத் துளியும் இடம் இல்லை.

“எவர் ஒருவர் அநியாயமாக ஒருவரைக் கொல்கிறாரோ, அவர் மனித இனம் முழுவதையும் கொன்றவரைப் போன்றவர் ஆவார்’ என்பதே இஸ்லாம் போதிக்கும் இறைவனின் கட்டளை.

போரில்கூட எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்ற விதிமுறைகளை இஸ்லாம் வகுத்துள்ளது. போரில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், துறவிகள் கொல்லப்படக் கூடாது. விளை நிலங்கள் அழிக்கப்படக் கூடாது என்பது இஸ்லாம் சொல்லும் முக்கிய விதிகளில் ஒன்று.

நபிகள் நாயகம் உருவாக்கிய மதீனா அரசு இஸ்லாமிய அரசின் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்திக் காட்டியது. நபிகள் அமைத்த இஸ்லாமிய அரசான மதீனாவில் யூதர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுடனான ஒப்பந்த விதிகள் மனித உரிமை சாசனமாக இன்றும் போற்றப்படுகிறது. அன்பும் சகோதரத்துவமுமே இஸ்லாத்தின் அடிப்படை.

உண்மையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடுக்கும்் ஒவ்வொரு தாக்குதலும் இஸ்லாத்துக்கு முரணான தாக்குதலாகவே அமைகிறது. அப்பாவிகளைக் கொன்று குவிப்பதும், முகமூடி அணிந்து கழுத்தை அறுப்பதும் பத்திரிகையாளர்களைக் கடத்தி தீயிட்டுக் கொளுத்துவதும், இந்தக் கொடூரங்களையெல்லாம் படம் பிடித்து உலகிற்குக் காட்டுவதும் இஸ்லாமிய அறநெறிகளுக்கு எதிரான தாக்குதல்களோ ஆகும்.

என்று உரத்துக் கூவுவதனால் அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட முடியாது. உலகின் முக்கியமான இஸ்லாமிய மார்க்க மேதைகள் யாவரும் ஐ.எஸ்க்கு எதிராக மார்க்கத் தீர்ப்பை வழங்கியுள்ளதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம்.

(வி.எஸ்.முஹம்மது அமீன்)