மீனவர்கள் நிவாரணம்: ரூ.1,000 ‘லபக்’கிய அதிகாரிகள்

சென்னையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்தோரை, படகு மூலம் மீட்டதற்காக, மீனவர்களுக்கு தரப்பட்ட உதவித்தொகை, 5,000 ரூபாயில், அதிகாரிகள், 1,000 ரூபாயை ‘லபக்கி, 4,000 ரூபாய் மட்டும் வழங்கி வரும் அதிர்ச்சி தகவல், வெளியாகி உள்ளது. சமீபத்திய கனமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தோரை படகு மூலம் மீட்க, மீன்வளத் துறை அதிகாரிகள், காசிமேட்டில் துவங்கி, மாமல்லபுரம் வரை வசிக்கும் மீனவர்களுக்கு, ஒரு படகுக்கு, 5,000 ரூபாய் வீதம், உதவித்தொகை நிர்ணயம் செய்து மீட்பு பணியில் களமிறக்கினர். ஆனால், வழங்கப்பட்ட உதவித்தொகை யில், 1,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாககுற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதுகுறித்து, மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்கள் கூறியதாவது:கடல் தான் வாழ்க்கை என்பதால், அதன் ஒவ்வொரு அசைவும் எங்களுக்கு தெரியும். ஆனால், மழை வெள்ளம் அப்படி அல்ல. கடலுக்குள் படகை செலுத்தும் போது பாதிப்பு குறைவு.மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் சேதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால், மீட்பு பணியில்ஈடுபடும் ஒரு படகுக்கு, 5,000 ரூபாய் என, அரசு நிர்ணயித்தது. ஆனால், மீன்வளத் துறை அதிகாரிகள், ஆளுங்கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து, அதில், 1,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, 4,000 ரூபாய் தான் தந்துள்ளனர்.இதுபற்றி உளவு போலீசார் மூலம் ஆய்வு நடத்தி, மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகள் எத்தனை; மீனவர்களிடம் பிடித்தம் செய்த தொகை எங்கே என, கண்டறிந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்; தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மீனவர்கள் கூறினர்.