எழுக தமிழுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது.

கிழக்கில் நடைபெறவுள்ள எழுக தமிழ் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எழுச்சிக்காக அல்லாமல் கிழக்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் வடக்குக்கு அடிமையாக்க முணையும் முயற்சியாக இருப்பதால் இதற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரித்துள்ளதாவது,

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பல்லாண்டு காலம் பிரிந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடன் மொழி அடிப்படையிலான சகோதரர்களாக இணைந்தே வாழ்ந்து வந்துள்ளனர். இரு பக்கத்திலும் இருந்த சில காடையர் காரணமாக அவ்வப்போது சில ஊர்களில் தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள் ஏற்பட்ட போதும் அது உடனடியாக மறந்து விடும் படியாகவே இருந்தது. ஆனால் தமிழீழ போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின் அவை முஸ்லிம்களை கடத்தி கப்பம் கேட்டதாலும் மறுத்தவர்கள் கொலை செய்யப்பட்டதாலும் தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது. 1987ம் ஆண்டு வடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்ட பின் முழுமையாக அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக கிழக்கு முஸ்லிம்கள் வேதனையுடன் வாழ்ந்தனர்.

தமக்கு விடிவே கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருந்த முஸ்லிம்களின் வாழ்வில் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு உதவியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு முஸ்லிம்கள் வாழ்வில் ஒளியேற்றினார். இதன் மூலம் முஸ்லிம்கள் மட்டுமல்ல கிழக்கு தமிழர்கள் கூட பெரு நன்மையடைந்தனர். கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு தமிழர் ஒருவர் முதலமைச்சரானதும் மஹிந்த ஆமட்சியில் ஏற்பட்ட வடக்கு கிழக்கு பிரிப்பால் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்திருந்த காலத்தில் கிழக்கு மாகாண தமிழர்கள் கூட போராட்ட இயக்கங்களாலும், தமிழ் அரசியல்வாதிகளாலும் ஓரங்கட்டப்பட்டதனாலேயே கிழக்கில் பிள்ளையான் போன்ற தமிழ் தலைமைகள் உருவாகின. வடக்கும் கிழக்கும் பிரிந்த பின்னரே கிழக்கில் பின் தங்கியுள்ள தமிழ் பிரதேசங்கள் பிள்ளையான் காலத்தில் பாரிய முன்னேற்றங்களை கண்டுள்ளன. இவ்வாறான சூழ் நிலையில் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்க முயலும் முதலாளித்துவ சூழ்ச்சியாகவே எழுக தமிழ் என்பதன் கோஷங்கள் எமக்கு தெரிகின்றன.

வடமாகாண தமிழர்களும், கிழக்கு மாகாண தமிழர்களும் ஒன்றிணைந்து ஓரிடத்தில் எழுக தமிழ் நடத்த முடியாமல் வடக்கில் தனியாக எழுக தமிழ் நடத்தப்பட்டு தற்போது கிழக்கில் வேறாக எழுக தமிழ் நடத்தப்படுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களும் நடைமுறையில் பிரிந்தே உள்ளனர் என்ற யதார்த்தம் தெரிகிறது. இந்த நிலையில் வடக்கையும் கிழக்கையும் நிர்வாக ரீதியாக இணைக்க வேண்டும் என்பது எதிர் கால தலைமுறைகளுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

எழுக தமிழ் என்பது வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் முயற்சிக்கெதிராகவும், கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் இறைமைக்காகவும் ஐக்கியத்துக்காகவும் இருக்கும் என்றால் அதற்கு உலமா கட்சி மனமுவந்து வரவேற்பளிக்கும். அவ்வாறில்லாமல் மீண்டும் கிழக்கை வடக்குடன் இணைத்து மீண்டுமொரு அடிமைப்படுத்தலுக்குரிய முயற்;சியாக மேற்கொள்ளப்படும் எழுக தமிழுக்கு முஸ்லிம் கட்சிகளோ, முஸ்லிம்களோ ஒரு போதும் ஆதரவளிக்க முடியாது.