ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினாவில் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்காக முதல்வரும், தமிழக எம்பிக்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17-ம் தேதி காலை தொடங்கி நடைபெற்றுவரும் போராட்டம் 4-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் திரண்டதால் மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

இதுதவிர, ஏராளமானோர் ஜல்லிக்கட் டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி வந்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நடிகர்கள் லாரன்ஸ், கார்த்தி, சத்யராஜ், ஆரி, மன்சூர் அலிகான் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களும் மாணவர்களுடன் இணைந்து ஜல்லிக்கட் டுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அரசியல்வாதிகள் யாரையும் போராட்டம் நடைபெறும் இடத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

போக்குவரத்து நெரிசல்

கடையடைப்புப் போராட்டம், குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கம், ஆட்டோ, வேன், கால் டாக்சி இயக்கம் முடங்கிய நிலையிலும் புறநகர் ரயில்களில் ஏராளமான மக்கள் கூட்டம் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மூலம் மெரினாவை நோக்கி படையெடுத்தனர். இதனால் சென்னை கடற்கரையை சுற்றிய காமராஜர் சாலை, வாலாஜா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, கதீட்ரல் சாலை, பாரதி சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, அண்ணா சாலை ஆகிய பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கவனம் ஈர்த்த காவலர்

இளைஞர்கள் போராட்டத்தைக் கண்டு பாதுகாப்புப் பணிக்காக வந்த காவலர் திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மைக்கில் பேசினார். புதுப்பேட்டை ஆயுதப்படைப் பிரிவு காவலர் மாய அழகு சீருடையில் இருந்தபடி மைக்கில் பேசியதை இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

குழந்தைக்கு பெயர் சூட்டிய லாரன்ஸ்

மெரினாவில் போராடி வரும் இளைஞர்களோடு இருந்து சாப்பாடு, மருந்து வகைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நடிகர் லாரன்ஸ் செய்து கொடுத்தார். மேலும், பெண்கள் வசதிக்காக மொபைல் டாய்லெட் வசதிகள், கேரவன்கள் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அங்குள்ள தம்பதியினர் தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கூறினார். அக்குழந்தைக்கு தமிழ் அரசன் என்று பெயர் சூட்டினார்.

சாலையை சுத்தம் செய்த மன்சூல் அலிகான்

இளைஞர்கள் உட்கார வேண்டும் என்பதற்காக சாலையை சுத்தம் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் மன்சூர் அலிகான்.

போராட்டத்தை கைவிட மறுப்பு

மயிலாப்பூர் காவல் சரக துணை ஆணையர் பாலகிருஷ்ணன் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அனைவரும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்காத போராட்டக்காரர்கள், வாடிவாசலில் ஜல்லிக்கட்டு நடந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று உறுதியாக கூறிவிட்டனர்.